ஏழு பேரின் விடுதலை இம்முறையும் மறுக்கப்படுமா? | தினகரன்

ஏழு பேரின் விடுதலை இம்முறையும் மறுக்கப்படுமா?

காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ் திடீரென எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மத்தியில் ஆளும் பா.ஜ.கவின் தூண்டுதலின் பேரில் தீவிரவாதிகளை விடுதலை செய்யும் செயலில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மூத்த தலைவருமான ரண்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:

"ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவு தனிச்சையானது அல்ல. இந்த விஷயத்தில் தமிழக அரசை இயக்குவது மத்திய பா.ஜ.க அரசு தான்.

தீவிரவாதிகள் விஷயத்தில் பா.ஜ.க மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது. மத்திய அரசும், தமிழக அரசும் இதை வைத்து அரசியல் செய்கின்றன. ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகள் மீது விரோதம் ஏதும் இல்லை, அவர்களை மன்னித்து விட்டோம் என சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் தனிப்பட்ட முறையில் கூறியிருக்கலாம்.

ஆனால், ஒரு குடிமகனாகவும், காங்கிரஸ் தொண்டனாகவும் மட்டுமே நாங்கள் இந்த விஷயத்தை அணுக முடியும். ஒரு மாநில அரசின் பொறுப்பு தீவிரவாதிகளை பாதுகாப்பதா அல்லது தண்டிப்பதா என்ற கேள்வியை முன்வைக்கிறோம். கூட்டணிக்கட்சியாக இல்லாவிட்டாலும், தமிழகத்தில் தனது கூட்டாளியாக இருக்கும் அ.தி.மு.க அரசை வைத்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் மூலம் ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க மத்திய அரசு திட்டமிடுகிறது.

தீவிரவாதிகள் விஷயத்தில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. இவர்களின் கபட நாடகத்தை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்."

இவ்வாறு ரண்தீப் சுர்ஜேவாலா கூறினார்.

இக்ைகதிகளை விடுவிக்க வேண்டும் என காங்கிரஸின் கூட்டணிக் கட்சியான தி.மு.க வலியுறுத்தி வருவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளிக்க ரண்தீப் சுர்ஜேவாலா மறுத்து விட்டார்.

இதேவேளை 28 ஆண்டுகாலம் சிறையில் இருந்தவர்கள் விடுதலை குறித்த இறுதி முடிவு தற்போது தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களிடம் இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் 7 பேர் விடுதலைக்குப் பெருமளவு ஆதரவு இருந்தாலும் ஒருபுறம் இது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்கிற குரல்களும் எழத்தான் செய்கின்றன.

இம்முறையும் விடுதலை மறுக்கப்படுமா அல்லது விடுதலை செய்வார்களா என்பது பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற கேள்வி.

இதுகுறித்து பலரும் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

ஹென்றி டிபேன்:

7 பேரும் தவறு செய்தவர்கள் என்றே வைத்துக் கொள்வோம். 28 ஆண்டு காலம் சிறையில் இருந்தவர்களை சிறை வாழ்க்கை திருத்தியிருக்காதா?. சிறையில் ஒருவர் அடைக்கப்படுவதே தண்டனை என்பதைத் தாண்டி மறுவாழ்வுக்கு அவர்களைத் தயார் செய்வதுதானே. அதை போதும், போதும் என்கிற அளவுக்கு இவர்கள் பெற்று விட்டார்கள். இவர்களின் மீது சுமத்தப்பட்ட குற்றம் சார்ந்து இருக்கிற சிக்கல்கள், மாற்றுக் கருத்துகள் ஆகியவை சட்டரீதியாக முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இவர்களின் விடுதலையை எதிர்ப்பவர்கள் எப்போதாவது அதற்குப் பதில் கூறியிருக்கிறார்களா? நீண்ட நாட்களுக்குப் பிறகு முறையாக ஒரு விஷயம் நடந்து கொண்டிருக்கிறது. அரசாங்க நடைமுறைகள் 7 பேருக்குச் சாதகமாகப் போய்க் கொண்டிருக்கிற இந்தச் சூழலில் தயவு செய்து இதில் அரசியல் செய்யாதீர்கள். ஏற்கெனவே, இவர்கள் விடுதலையில் அரசியல் செய்து நீண்ட காலம் அவர்களைச் சிறையில் இருக்க வைத்து விட்டீர்கள். 7 பேரின் குடும்பமும் பல கனவுகளுடன் காத்திருக்கின்றன.

கோபண்ணா:

ராஜீவ்காந்தி கொலை வழக்கு மத்திய புலனாய்வுத் துறையால் விசாரிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் `கொலைக் குற்றவாளிகள்' என 7 பேருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பிரதமராக ராஜீவ்காந்தி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக அவரைக் கொல்ல வேண்டுமென விடுதலைப் புலிகள் தீட்டிய சதித் திட்டத்தின் காரணமாகத் தமிழ் மண்ணில் படுகொலை செய்யப்பட்டார். இதன் மூலம் நூறு கோடி மக்கள் கொண்ட இந்தியாவின் இறையாண்மையையே அச்சுறுத்தினர்.இதில் தண்டிக்கப்பட்டவர்கள் 25 ஆண்டுகளாகச் சிறையில் இருப்பதால், விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசியல் கட்சிகள் விடுத்துள்ளன. இவர்களை விடுவிப்பதற்குக் காட்டுகிற அக்கறை இதேபோல கொலைக் குற்றம் செய்து சிறையில் இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கும் காட்டப்படுமா? இவர்களை விடுவிக்கும் போது இதேபோல சிறையிலிருக்கும் மற்றவர்களையும் விடுவிக்க வேண்டுமென அரசியல் கட்சிகள் ஏன் கோரவில்லை? ஆனால், `நாங்கள் நிரபராதிகள், ராஜீவ்காந்தி கொலைக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, நாங்கள் அப்பாவிகள்' என்று கூறுவதை என்ன நியாயம்? உச்சநீதிமன்றத்தாலே தண்டிக்கப்பட்ட பிறகு நிரபராதிகள் என்று கூறுவது எந்த வகையில் ஏற்றுக்கொள்ள முடியும். இதை நியாயப்படுத்திப் பேசுபவர்கள் என்ன சூப்பர் நீதிபதிகளா? இதைவிட நீதிமன்ற அவமதிப்பு வேறு உண்டா? ராஜீவ்காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குக் காட்டுகிற கனிவை மற்ற குற்றவாளிகள் விஷயத்தில் ஏன் காட்டவில்லை. 7 பேருக்குக் காட்டுகிற பரிவு ராஜீவ்காந்தியோடு கொல்லப்பட்ட 18 பேரின் குடும்பத்தினருக்கு ஏன் காட்டப்படவில்லை? 7 பேர் தமிழர்கள் என்றால் 18 பேர் தமிழர்கள் இல்லையா?தமிழ் மக்களை அதிகமாக நேசித்தவர் ராஜீவ்காந்தி. அதேபோல, தமிழ் மக்களும் ராஜீவ்காந்தியை மிகவும் நேசித்தார்கள். இலங்கைத் தமிழர்களுக்காக ஒப்பந்தம் போட்டு உரிமைகளைப் பெற்றுத் தந்த ராஜீவ்காந்தியை படுகொலை செய்த பாவத்தைச் செய்தவர்களுக்குப் பரிந்து பேசலாமா? இப்படிப் பேசுவது மனுநீதிச் சோழன் வழிவந்த தமிழர் பண்பாடா?

நீண்ட காலமாகச் சிறையில் இருப்பதால் தண்டனைக் குறைப்பு வழங்கப்பட்டு விடுவிக்க வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. பழி வாங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல.

ஹரி பரந்தாமன்  (ஓய்வுபெற்ற நீதிபதி):

எனக்குத் தெரிந்தவரை இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் எந்த ஆயுள்தண்டனை கைதியும் 28 ஆண்டுகள் சிறையில் இருந்ததில்லை. சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி, அண்ணா, எம்.ஜி.ஆர் பிறந்த நாள் ஆகிய தினங்களில் எத்தனையோ கைதிகளுக்கு விடுதலை அளிக்கப்படுகிறது. ஒருவேளை இந்தியாவின் மிக முக்கியமான ஆளுமையான ராஜீவ் காந்தியைக் கொன்றுவிட்டதனால் இவர்கள் விடுதலை செய்யப்படாமல் இருக்கிறார்கள் என்றால் நான் ஒரு கேள்வி கேட்கிறேன். ஆனானப்பட்ட மகாத்மா காந்தியைச் சுட்டுக் கொன்றவர்களை இதே இந்திய அரசு எப்படி விடுதலை செய்தது! கோபால் கோட்சே, விஷ்ணு கர்க்டே, மதன்லால் பெஹ்வா ஆகிய 3 பேரும் காந்தியைச் சுட்டுக் கொன்றதற்கு ஆயுள்தண்டனை வழங்கப்பட்டவர்கள். ஆனால், இவர்கள் 16 ஆண்டுகளே சிறையில் இருந்தனர். ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் படேலும் இறந்து போனதும் இவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். காந்தியைக் கொன்ற அந்த 3 பேருக்கு ஒரு நியாயம். இந்த 7 பேருக்கு ஒரு நியாயமா? தமிழர்கள் என்பதால் இந்த இளக்காரமா? இனியும் காலம் தாழ்த்தாது இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமென்பதே என் கோரிக்கை.


Add new comment

Or log in with...