மலர்ந்தது புனித முஹர்ரம் புத்தாண்டு | தினகரன்

மலர்ந்தது புனித முஹர்ரம் புத்தாண்டு

ஹிஜ்ரி 1400 முஹர்ரம் மாதத்தின் தலைப்பிறை பற்றி தீர்மானிப்பதற்கான மாநாடு நேற்றுமுன்தினம் 10.09.2018 திங்கட்கிழமை மாலை மஃரிப் தொழுகையின் பின்னர் கொழும்பு பெரிய பள்ளிவாசலில் கூடிய போது, நாட்டின் பல பாகங்களிலும் வானிலை மப்பும், மந்தாரமுமாக இருந்தபடியினால் நாட்டின் எப்பகுதியிலாவது தலைப்பிறை தென்பட்டதற்கான தகவல்கள் கிடைக்கப் பெறாமையினால் புனித துல்ஹிஜ்ஜஹ் மாதத்தை 30 நாட்களாகப் பூர்த்தி செய்து 11ம் திகதி செவ்வாய்க்கிழமை பின்னேரம் புதன் இரவு முஹர்ரம் மாதத்தை ஆரம்பிப்பதென மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. அதன் பிரகாரம் இன்று ஹிஜ்ரி 1440 முஹர்ரம் முதல் நாளாகும்.

முஸ்லிம்கள் இப்பூமுகத்தில் எப்பகுதியில் வாழ்ந்த போதிலும் அந்தந்த நாட்டிலே பிரதி மாதமும் அமாவாசையின் பின் விண்ணில் தோன்றும் முதல் பிறையை வெற்றுக்கண்களால் காண்பதை அடிப்படையாகக் கொண்டே அம்மாதம் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்ற இஸ்லாமிய 'ஷரீஆ' எனும் சட்டத்தீர்ப்பின் தீர்க்கமான முடிவின் அடிப்படையில் இலங்கை வாழ் முஸ்லிம்களின் வரலாற்றில் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் தலைப்பிறை பார்த்து மாத ஆரம்பம், நிறைவு பற்றி முடிவு செய்து உத்தியோகபூர்வமாக ஊடகங்கள் மூலம் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் மேற்படி மாநாட்டில் கொழும்பு பெரியபள்ளி வாசல் பிறைக்குழு உறுப்பினர்களான துறை சார்ந்த உலமாக்கள், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பிறைக்குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள அதிகாரிகள், மேமன், ஹனபி பள்ளிவாசல் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

“வருடத்தில் மாதங்களின் எண்ணிக்கை இறைவனிடத்தில் 12ஆகும். அவற்றுள் 4 மாதங்கள் புனிதமானவை” (அல்குர்ஆன் 9:36) என ஏக வல்லவனான அல்லாஹ்வினால் சிறப்பாக சிலாகித்துக் கூறப்பட்ட அந்த 4 மாதங்களில் இன்று எம்மை அடைந்துள்ள இப்புனித முஹர்ரம் மாதம் முதலாவதாகத் திகழ்கின்றது.

சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தமது 53ம் வயதில் இறை ஆணையின் பிரகாரம் தாம் பிறந்து, வாழ்ந்து வந்த தாயகமான அந்த மக்கமா நகரையே துறந்து அங்கிருந்து சுமார் 300 மைல் தொலைவிலுள்ள மதீனா நகருக்கு அந்நகர் வாழ் மக்களது அன்பான அழைப்புக்கும் ஆரவாரமான அமோக வரவேற்புக்கும் மத்தியில் அன்றைய 'யத்ரிப்' என்றழைக்கப்பட்டு வந்த மதீனா மாநகர் சென்று குடியேறிய அற்புத பயணத்தை மையமாகக் கொண்டு கணிக்கப்பட்டு வரும் ஹிஜ்ரி ஆண்டின் முதல் மாதமான இப்புனித முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை நோக்கும் போது புனித ரமழானை அடுத்து சிறப்புக்களினால் இரண்டாவது இடத்தை இம்மாதம் பெறுகிறது.

“நோன்புகளிலே ரமழான் மாத நோன்பை அடுத்து மிகச் சிறந்த நோன்பு அல்லாஹ்வின் புனிதமிக்க முஹர்ரம் மாத நோன்பாகும்” என்று இம்மாதத்தில் நோற்கப்படும் நோன்பின் சிறப்பைப் பற்றி இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போற்றிக் கூறினார்கள். எனவே வருடத்தின் முதல் மாதமாம் முஹர்ரம் மாதத்தின் முதல் 10 நாட்களிலும் நோன்பிருப்பது 'ஸுன்னத்' (நபி வழி) ஆகும். அதிலும் எதிர்வரும் 9ஆம் 'தாஸூஆ' நாளான 20ஆம் திகதி வியாழன், 10ம் 'ஆஷுரா' நாளான 21ம் திகதி வெள்ளி ஆகிய இரு தினங்களிலும் நோன்பிருப்பது அதி விசேட ஸுன்னத் ஆகும்.

எனவே எம்மை அடைந்துள்ள ஹிஜ்ரி 1440 முஹர்ரம் மாதத்தில் இஸ்லாமிய புத்தாண்டின் நல்வாழ்த்துக்களை மக்களோடு பரிமாறி மகிழ்வதோடு மட்டும் நின்றுவிடாது எமது வாழ்நாளை நீடிக்க வைத்து இவ்வாண்டையும் அடையும் பாக்கியத்தை நமக்கு நல்கிய நாயனை நன்றியுணர்வோடு புகழும் அதேவேளை ஆயுளில் ஓராண்டு கழிந்து விட்டது. ஒரு வயது கூடி விட்டது. நாம் இலக்குத் தவறாது சென்றடைய வேண்டிய இடத்தையும் நிமிடத்தையும் நெருங்கிச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற உறுதியான உண்மையை மனதிலிருத்தி நாளை நிரந்தர மறுமை வாழ்வுக்காக நாம் எதனைத்தான் தயார்படுத்தி முற்படுத்தி வைத்துள்ளோம்? சமுதாயத்திற்காக சாதித்த சேவைகள் யாவை? என சிந்தித்து செயற்படுவோமாக.

கடந்த காலங்களில் எம்மால் ஏற்பட்ட தப்புத் தவறுகளுக்காக பச்சாதாபப்பட்டு இறை மன்னிப்பு கோருவதோடு சத்திய சன்மார்க்கமாம் தூய இஸ்லாத்தை இறைதூதர் நபி முஹம்மது (ஸல்) அவர்களும் அவர்களது வழி நடந்த நபித்தோழர்கள், இறைவழி நின்று நெறி தவறாது மறைவழி தழுவி புண்ணியங்கள் புரிந்த தியாகிகள் ஆகியோரின் தூய வாழ்வை நாமும் பின்பற்றி நாட்டில் நம்மோடு இரண்டறக் கலந்து வாழும் சகல இன, மதங்களை சார்ந்த மக்களின் நன்மதிப்பைப் பெற்று வல்ல நாயனின் இன்னருளால் நன்மக்களாக சக வாழ்வு வாழ உறுதி பூணுவோமாக!

மெளலவி
எம்.எஸ்.எம். தஸ்லீம்
பிரதம இமாம் கொழும்பு
பெரிய பள்ளிவாசல்

 


Add new comment

Or log in with...