எஞ்சிய 6 மாத காலத்தை இலங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும் | தினகரன்


எஞ்சிய 6 மாத காலத்தை இலங்கை முழுமையாக பயன்படுத்த வேண்டும்

ஐரோப்பிய ஒன்றியம்

நமது நிருபர்

மனித உரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தை ஏற்படுத்த எஞ்சியிருக்கும் ஆறு மாத காலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசுக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் ஜெனீவாவில் ஆரம்பமானது. இரண்டாவது நாளான நேற்றையதினம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் வாய்மூல அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் உரையாற்றிய அவுஸ்திரிய தூதுவர் எலிசபத் இந்தக் கருத்தை முன்வைத்தார். மனித உரிமை நிலைமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் செயற்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்கும் அதேநேரம், மேலும் பல

விடயங்கள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை பற்றிய மனித உரிமைகள் ஆணையாளரின் அடுத்த அறிக்கை 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு இன்னமும் ஆறு மாதங்கள் இருக்கின்றன. ஆணைக்குழுவுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இந்தச் சந்தர்ப்பத்தை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இது சிறந்ததொரு சந்தர்ப்பமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அது மாத்திரமன்றி, தூக்குத் தண்டனையை நிறுத்தி வைப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தொடர்ந்தும் பேணவேண்டும் என்பதை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பதவியேற்றுள்ள மிஷேல் பாச்சுலேட் நேற்றுமுன்தினம் மனித உரிமைகள் பேரவையின் 39ஆவது அமர்வை ஆரம்பித்து உரையாற்றினார். இவருடைய உரையின் போதும் இலங்கை தொடர்பிலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

நிலைமாறுகால நீதியை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் தரப்பில் மந்தமான முன்னேற்றமே காணப்படுகின்றபோதும், காணாமல்போனோர் அலுவலகம் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோருடைய குடும்பங்களுக்கு விரைவில் பதிலொன்றை வழங்கும் வகையில் இந்த அலுவலகம் செயற்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டார். உண்மையைக் கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் மேலும் முன்னேற்றம் ஏற்படவேண்டியுள்ளது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் தனது உரையில் குறிப்பிட்டார்.

அது மாத்திரமன்றி நாட்டில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்துவது குறித்த திட்டத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் இனவாத மற்றும் இனங்களுக்கு இடையிலான வன்முறைகளை எதிர்த்து போராடுவதற்கு இடையூறாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

 


Add new comment

Or log in with...