அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இணைந்து பணியாற்ற இலங்கை - வியட்நாம் இணக்கம் | தினகரன்


அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் இணைந்து பணியாற்ற இலங்கை - வியட்நாம் இணக்கம்

  • இந்து சமுத்திரத்தில் சுதந்திர கடற்பயணம்
  • இரு நாடுகளுக்குமிடையிலான நேரடி விமான சேவை
  • கடற்றொழில் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

வியட்நாமிலிருந்து விசு கருணாநிதி

இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையிலான இராஜதந்திர உறவை மாத்திரமன்றி பாராளுமன்ற, அரசியல் கட்சிகள், மக்கள் ஆகிய தரப்புகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியட்நாம் பிரதமர் க்யென் ஷ_ன் ஃபுக் ( H.E. Nguyen Xuan Phuc) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (11) வலியுறுத்தினார்.

வியட்நாம் பிரதமருக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று வியட்நாம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்ற இருதரப்புப் பேச்சுவார்த்தையின்போது, பொருளாதார ரீதியாக மாத்திரமன்றி அரசியல், சமய, சமூகம், வர்த்தகத்துறை ஆகிய தரப்புகளுக்கிடையிலும் பரஸ்பரம்

கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வியட்நாம் பிரதமர் வலியுறுத்தினார்.

அடுத்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வெசாக் தினத்தை வியட்நாமின் ஹனோய் நகரில் நடத்த திட்டமிடப்பட்டிருப்பதால், அதற்கு இலங்கையின் ஒத்துழைப்பை வழங்குமாறும் வியட்நாம் பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இரு நாடுகளுக்குமிடையில் பௌத்த தூதுக்குழுவினரைப் பரிமாற்றம் செய்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நிலவிய வரலாற்று ரீதியிலான உறவுபற்றி ஆராய்வதற்குக் கணிசமான அளவு நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

இந்தக் குழுவை மிக விரைவாக நியமிப்பது பொருத்தமானது என்று இதன்போது வியட்நாம் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

அநேகமான வியட்நாம் பிரஜைகள் இலங்கைக்குச் சுற்றுலா செல்லும் எதிர்பார்ப்பில் இருப்பதால், இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்க வேண்டியதன் அவசியத்தை வியட்நாம் பிரதமர் தெளிவுபடுத்தியபோது அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்க இலங்கை தயாராக உள்ளதாகப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.

இதற்கமைவாக சுற்றுலாப்பயணிகளின் வசதி கருதி இரு நாடுகளுக்குமிடையிலான விசா நடைமுறையை இலகுபடுத்துவதுபற்றி ஆராய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படவுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கை வர்த்தகப் பிரதிநிதிகள் குழுவொன்று வியட்நாம் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கும் அதன் பின்னர் வர்த்தகத்துறையில் தொடர்ச்சியான கருத்துப்பரிமாற்றங்களை மேற்கொள்வதெனவும் நேற்றைய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கும் வியட்நாமுக்குமிடையில் கடற்றொழில் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு இணக்கம் கண்டுள்ள இரு நாட்டுப் பிரதமர்கள், பொருளாதார ஒருங்கிணைப்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் செயற்பாடுகளைத் துரிதப்படுத்தவும் அதனை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தையும் வலியுறுத்தினர்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுதந்திரமான கடற்பயணத்தையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதெனவும் இரு நாட்டுப் பிரதமர்களும் நேற்றைய சந்திப்பில் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.

அபிவிருத்தி மூலோபாயங்கள், சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வியட்நாமுக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திசாநாயக்க, பிரதமரின் மேலதிகச்செயலாளர் சமன் அத்தாவுடஹெட்டி, விசேட பங்கேற்பாளர் சன்ட்ரா பெரேரா முதலானோரும் இலங்கையின் சார்பில் கலந்துகொண்டனர்.

வியட்நாமில் நேற்று ஆரம்பமான உலக பொருளாதார பேரவையின் மாநாடு நாளைய தினம் வரை நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட உலகத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

உலக நாடுகளின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் 1971ஆம் ஆண்டு சுவிற்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்ட உலக பொருளாதார பேரவை, முக்கியமான பிராந்தியங்களில் அவற்றின் வளர்ச்சியை இலக்காகக்கொண்டு ஒவ்வோர் ஆண்டும் மாநாட்டை நடத்தி வருகிறது. அந்த வகையில், தென்கிழக்காசிய நாடுகளின் பொருளாதாரத்திற்குப் பங்களிப்பு செய்யும் வகையில் “ஆசியான்” அமைப்பு நாடுகளின் ஒத்துழைப்புடன் இம்முறை வியட்நாமில் இந்த மாநாடு நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Add new comment

Or log in with...