Thursday, March 28, 2024
Home » பலஸ்தீனத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

பலஸ்தீனத்தின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

- BRICS உச்சிமாநாட்டில் சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் வலியுறுத்தல்

by Rizwan Segu Mohideen
November 29, 2023 10:26 am 0 comment

பலஸ்தீனத்தில் பாதுகாப்பையும், அரசியல் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்தி மக்கள் தங்களது நியாயமான உரிமைகளை அடைவதாயின், இரு நாடுகளின் தீர்வு தொடர்பாக 1967 ஆம் ஆண்டளவில் எட்டப்பட்ட சர்வதேச தீர்மானங்களை செயல்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மான் தெரிவித்துள்ளார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் வட ஆபிரிக்கா நாடுகளின் பொருளாதாரக் கூட்டணியான ‘BRICS’ அமைப்பின் உச்சிமாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“காஸா பிரதேசம் மனித அவலங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் கடினமான இந்நேரத்தில், அது குறித்து இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சிறப்பு உச்சிமாநாட்டின் பணிகள் யாவும் வெற்றியடைய, எமது வாழ்த்துக்களையும், இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்தில் அஸீஸ் அவர்களின் விஷேட வாழ்த்துக்களையும் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உச்சிமாநாட்டை நடத்த சகல ஏற்பாடுகளையும் செய்ததற்காகவும், அதில் பங்கேற்கும்படி எமது சவூதி அரேபியா இராச்சியத்தை அழைத்தமைக்காகவும் தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். அதேவேளை, காஸாவில் அப்பாவிப் பொதுமக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களைக் கண்டிப்பதுடன், சுகாதார வசதிகள், வழிபாட்டுத் தலங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மீதான பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்கும், அதற்கான தீர்க்கமான தீர்வுகளை உருவாக்குவதற்கும் பரஸ்பர கூட்டு முயற்சி தேவைப்படுகிறது.

ஆயிரக்கணக்கான குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களின் உயிரைப் பறித்துள்ள இந்த நடவடிக்கைகளுக்கு நாங்கள் எமது பலத்த கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், அங்கு மூடப்பட்டுள்ள பொதுப்போக்குவரத்துப் பாதைகள் விரைவில் திறக்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். வான் மற்றும் கடல் வழியாக மனிதாபிமான, நிவாரண உதவிகளை வழங்குவதன் மூலம், காஸா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு உதவுவதற்கும், அவர்களைப் பாதுகாப்பதற்கும் சவூதி அரேபியா இடைவிடாத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதேவேளை பலஸ்தீன மக்களுக்கு உதவுவதில் பிரிக்ஸ் குழுவின் பங்களிப்பையும், அதன் கூட்டு முயற்சியையும் நாங்கள் முழுமையாகப் பாராட்டுகின்றோம். இந்த உச்சிமாநாடு எந்த நோக்கத்திற்காக நடத்தப்பட்டதோ, அந்த உன்னதமான இலக்குகளை அடைய முடியும் என்று நம்பியுள்ள நிலையில், ஜனாதிபதிக்கும், இங்கு கூடியிருக்கும் தலைவர்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்”.

அஷ்ஷெய்க் எம்.எப்.எம். ஹஸன் பாரிஸ்
விரிவுரையாளர்
ஷரபிய்யா அரபுக் கல்லூரி, மாவனல்ல

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT