தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து இரு கர்ப்பிணிகள் உட்பட 52பேர் பலி | தினகரன்


தெலுங்கானாவில் பஸ் கவிழ்ந்து இரு கர்ப்பிணிகள் உட்பட 52பேர் பலி

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற கோரமான பஸ் விபத்தில் இரு கர்ப்பிணிகள் உட்பட 52 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பஸ்ஸில் அனுமன் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பும் பக்தர்கள், கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள் என பலதரப்பட்டவர்கள் பயணம் செய்தனர்.

இதில் 80 பயணிகள் சென்றதால் பலர் நின்று கொண்டு பயணம் செய்ய நேரிட்டது. அப்போது கொண்டகட்டு மலைப்பகுதில் இருந்து வரும் வழியில் கடைசி வளைவில் வந்த போது அங்கிருந்த வேகத்தடை மீது பஸ் வேகமாக சென்றது. இதனால் நிலை தடுமாறி வீதியோரத்தில் இருந்த 10 அடி பள்ளத்தில் 4 முறை புரண்டு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்த பஸ்ஸின் முன் பாகம் பயங்கரமாக சேதமடைந்தது. பலர் இருக்கைகளுக்கிடையே சிக்கி உயிரிழந்திருந்தனர்.

மேலும் பலர் தங்களை காப்பாற்றும்படி அலறினர். பின்னர், நடந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பஸ்ஸில் 26 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. படுகாயமடைந்த 30க்-கும் மேற்பட்டோர் அரச மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 26 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 52ஆக உயர்ந்தது. இறந்தவர்களில் 25 பேர் பெண்கள், 18 பேர் ஆண்கள் மற்றவர்கள் அனைவரும் 12 வயதுக்கு உட்பட சிறுவர், சிறுமியராவர்.

இரு கர்ப்பிணிகள் உயிரிழப்பு

இந்த கோர விபத்தில் 2 கர்ப்பிணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒருவர் 9 மாத கர்ப்பிணியாவார். இவர் பஸ் விபத்தால் அதிர்ச்சி அடைந்து பலத்த காயங்களுடன் உயிரிழந்தார். இதில் குழந்தை பிரசவமும் ஏற்பட்டு பிறந்த குழந்தையும் இறந்து விட்டது. இதேபோன்று 7 மாத கர்ப்பிணியும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

வேகத்தடையே காரணம்

கொண்டகுட்டா பகுதியில் பிரசித்தி பெற்ற அனுமன் கோயில் உள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை என்பதால் அனுமனை தரிசிக்க அதிக அளவில் பக்தர்கள் கோயிலுக்கு சென்றனர். சாமியை தரிசனம் செய்து விட்டு அரச பஸ்ஸில் திரும்பி வரும்போது இந்த கோர சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் இறந்தவர்கள் 25-க்கும் மேற்பட்டோர் பக்தர்களாவர். கொண்டகுட்டா மலைப்பகுதியில் இருந்து 3வது கிலோமீட்டரில் அடிவாரம் உள்ளது. இந்த அடிவாரத்தின் 500 மீட்டர் தொலைவில் இந்த கோர விபத்து நடைபெற்றுள்ளது.

ஒரு வளைவில் எதிரே வந்த ஆட்டோவை மோதாமல் இருக்க வேகத்தடை மீது அதே வேகத்தில் பஸ்ஸை இடது புறம் திருப்பியதால் நிலை தடுமாறி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்ததாக பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் தெரிவித்துள்ளனர். சாரதியின் இரு கால்களும் உடைந்ததால் அவர் அரச மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.


Add new comment

Or log in with...