அமைதித் தீர்வில் இந்தியாவின் தவிர்க்க முடியாத வகிபாகம் | தினகரன்


அமைதித் தீர்வில் இந்தியாவின் தவிர்க்க முடியாத வகிபாகம்

இந்தியாவுக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சபாநாயகர் கருஜயசூரிய தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தமது விஜயத்தின் முதல் நாளன்றே புதுடில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது. அத்துடன் நேற்றுமுன்தினம் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜையும் சந்தித்துள்ளது. இந்தச் சந்திப்புக்கள் காத்திரமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. இந்த நல்லெண்ண விஜயத்தை பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நாட்டுக்கு சாதகமான வகையில் பயன்படுத்திக் கொள்வதில் கூடுதல் கரிசனை காட்டியதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக குழுவில் இடம்பெற்ற சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதிகளான எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகிய மூவரும் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் பேச்சுக்களை முடுக்கி விட்டுள்ளனர்.

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை உள்ளடக்கிய புதிய அரசியலமைப்பைப் பெற்றுக் கொள்வதற்காக இந்தியா முழு அளவில் உதவி புரிய வேண்டுமெனவும், உரிய அழுத்தங்களை இந்தியா இலங்கை மீது பிரயோகிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தியிருக்கிறார். இந்த விதத்தில் யாப்பை உருவாக்குவது தோல்வி காணுமானால் வடக்கு கிழக்கில் தீவிரப் போக்கைக் கொண்ட தலைமை உருவாகுவதற்கு வாய்ப்பேற்பட்டு விடுமெனவும், அது மற்றொரு நெருக்கடியாக மாற்றமடையுமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் அவர்கள் சில முக்கிய விடயங்களை மனம் திறந்து பேசியிருக்கின்றார். இன நெருக்கடித் தீர்வு மற்றும் புதிய அரசியலமைப்பு குறித்து ஆழமான கருத்துக்களை முன்வைத்த அவர், இந்த விடயத்தில் இந்தியா முழுமையாக ஒத்துழைக்க வேண்டியதன் அவசியத்தை ஆணித்தரமாக வலியுறுத்தியுள்ளார். "இந்தக் கோரிக்கையை ஏற்று நீங்கள் உரிய நடவடிக்கைகளை எடுத்து அழுத்தம் கொடுக்கத் தயக்கம் காட்டினால் எம்மால் சமாளிக்க முடியாத புதியதொரு போக்கு வடபுலத்தில் ஏற்பட்டுவிடலாம்" என்ற அச்சத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தற்போதைய அரசியலமைப்பில் சிறுபான்மைச் சமூகங்கள் தம்மை நாட்டின் பிரஜைகள் என்பதை உணரமுடியாத நிலையே காணப்படுவதாக குறிப்பிட்ட எதிர்க் கட்சித் தலைவர், எமது நாட்டில் நாம் இலங்கையர் என்ற உணர்வுடன் தலை நிமிர்ந்து வாழவே விரும்புவதாகவும் அதற்கேற்ற வகையில் அரசியலமைப்பு அமைய வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

சிறுபான்மைத் தரப்புகள் எதை எந்த இடத்தில், எந்த நேரத்தில் பேச வேண்டுமென்பதில் சரியான நிலைப்பாட்டில் இருப்பதை இதன் மூலம் நன்கு அவதானிக்கக் கூடியதாக உள்ளது. தீர்வு முயற்சிகள் தொடர்ந்தும் தள்ளிப்போகுமானால், அல்லது புதிய அரசியலமைப்பு காத்திரமான முறையில் அமையாத பட்சத்தில் ஏற்படக் கூடிய பின்விளைவுகளை சிறுபான்மைத் தலைமைகள் ஆதாரபூர்வமாகவும், கனதியான பரிமாணத்துடனும் முன்வைத்திருக்கின்றன. நாட்டில் மற்றொரு முரண்பாட்டுக்கு இடமளிக்கப்படக் கூடாது என்பதில் இவர்கள் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இதற்கு முன்னர் இரண்டு தடவைகள் சிறுபான்மைத்தரப்புகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அவை தொடர்பில் மீண்டுமொரு தடவை வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்திய அரசு இது விடயத்தில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இனநெருக்கடித் தீர்வுக்கு அப்பாலும் சில முக்கியமான விடயங்கள் இச்சந்திப்பில் பேசப்பட்டதாக அறிய முடிகிறது. இலங்கையில் வாழும் சிறுபான்மைச் சமுகங்கள் தங்களது உரிமைகளைப் பெற்று தலைநிமிர்ந்து வாழ வேண்டுமென்பதில் உறுதியான நிலைப்பாட்டில் காணப்படுகின்றன. தமிழ், முஸ்லிம் மக்களுக்கு அச்சமின்றி வாழும் சுதந்திரம் இருக்க வேண்டும். பெரும்பான்மைச் சமூகங்களில் சில இனவாதக் குழுக்களின் தவறான செயற்பாடுகள் இனங்களுக்கிடையே முரண்பாட்டை தோற்றுவித்து வருகின்றன. இது விடயத்தில் இந்தியா இலங்கைக்கு அவசியமான அழுத்தங்களை பிரயோகித்து ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.

இனப்பிரச்சினைக்குரிய தீர்வானது 13வது திருத்தத்துக்கு அப்பால் சென்றேனும் பெற்றுக் கொடுக்கப்படுமென கடந்த காலங்களில் அரசுகளால் தெரிவிக்கப்பட்டது. இன்றைய நல்லாட்சி கூட இன நெருக்கடிக்கு உகந்த தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமெனக் கூறி வருகின்ற போதும் இதுவரை நம்பிக்கையளிக்கக் கூடியதாக எதுவும் எட்டப்பட்டதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தியாவுக்கான நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சபாநாயகர் தலைமையிலான குழு ஆரோக்கியமான வகையில் பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டுமென்பதே இலங்கையின் எதிர்பார்ப்பாகும். அதுவும் சிறுபான்மைச் சமூகங்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளன.

அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை உள்வாங்க வேண்டியதன் அவசியத்தை அமைச்சர் மனோ கணேசன் வலியுறுத்தியிருக்கின்றார். அத்துடன் புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையை அரசியல் நிபுணர்கள் குழு ஆராயவிருக்கும் நிலையில் அது அரசியலமைப்புச் சபைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்தியா இவ்விடயத்தில் தாமதம் காட்டாது துரிதமாகச் செயற்பட வேண்டியதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விடிவுக்காக காத்துக் கொண்டிருக்கும் மக்கள் இன்னும் எவ்வளவு காலத்துக்கு இருட்டில் வாழ்ந்து கொண்டிருக்க முடியும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

இந்த நல்லெண்ண விஜயம் காத்திரமானதாக அமைய வேண்டும். அடுத்த நகர்வு சரியான காய் நகர்த்தலாக இருக்கவேண்டும். இந்தியா அதன் கடப்பாட்டை உரிய முறையில் கையாள வேண்டும். நாளை எமக்கு நல்லதொரு செய்தி கிடைக்க வேண்டும் என்பதே சிறுபான்மைச் சமுகங்களின் எதிர்பார்ப்பு.


Add new comment

Or log in with...