கண்காணிப்பு தளங்களில் துருக்கி படை குவிப்பு
சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் மாகாணத்தின் மீது அரச படை இரண்டாவது நாளாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்படிருப்பதோடு துருக்கி அந்த பிராந்தியத்திற்கு மேலும் துருப்புகளை அனுப்பியுள்ளது.
இதில் தெற்கு இத்லிப் மற்றும் வடக்கு ஹாமா மாகாணங்களின் கிராமங்களை இலக்கு வைத்து வான் தாக்குதல்கள், பீரங்கி குண்டுகள் மற்றும் ஹெலிகொப்டர் மூலம் பீப்பாய் குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருக்கும் இத்லிப் மீது அரச படை முழுமையான யுத்தம் ஒன்றை ஆரம்பிக்க தயாராகி வரும் நிலையிலேயே தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
தெற்கு இத்லிப்பில் இடம்பெற்றிருக்கும் பீப்பாய் குண்டு வீச்சில் ஹபய்தா என்ற கிராமத்தில் குழந்தை ஒன்றும் சிசுவொன்றும் கொல்லப்பட்டிருப்பதாக சிவில் பாதுகாப்பு குழு ஒன்று குறிப்பிட்டுள்ளது.
வடக்கு ஹாமாவில் இடம்பெற்ற தாக்குதல்களில் கிளர்ச்சி அதிகாரி ஒருவர் உட்பட மேலும் மூவர் பலியாகியுள்ளனர்.
குண்டு தாக்குதல்களில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் அடர்த்தி கொண்ட பகுதிகளில் இருந்து பாதி அளவான மக்கள் வெளியேறிவிட்டதாக அங்கு தன்னார்வ தொண்டு பணிகளில் ஈடுபட்டு வரும் வைட் ஹெல்மட் குழுவைச் சேர்ந்த அப்த் அல் கரீம் அல் ரஹ்மூன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 72 மணி நேரத்திற்குள் சிரிய ஜனாதிபதி பஷர் அல் அஸாத் ஆதரவு படை மற்றும் அவரின் கூட்டணியான ரஷ்யா, கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதி மீது வான் தாக்குகள், பீரங்கி குண்டுகள் மற்றும் பீப்பாய் குண்டுகள் என 1,060 தடவைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக பிரிட்டனை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக பிரதான அரச எதிர்ப்புக் குழுக்களில் ஒன்றான அல்–ஜபாஹ் அல்–வதானியா லில்–தஹ்ரிர், வடக்கு ஹமாவின் அரச படையின் இலக்குகள் மீது கடந்த ஞாயிறன்று குண்டுகளை வீசியது.
இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்லிப் மாகாணத்திற்குள் துருக்கியின் இராணுவ வாகனங்கள் நுழைந்துள்ளன.
துருக்கி படை நிலைகொண்டிருக்கும் 12 கண்காணிப்பு தளங்களில் படைகளை குவிக்கும் நடவடிக்கையாக கடந்த 10 தினங்களில் ஆயுதங்கள் மற்றும் கவச வாகனங்களை கொண்ட இவ்வாறான வாகன தொடரணிகள் வடக்கு சிரியாவுக்குள் நுழைந்துள்ளன.
இந்த கண்காணிப்பு தளங்கள் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு மேற்கு அலெப்போ, வடக்கு ஹாமா மற்றும் இத்லிப் மாகாணங்களில் உள்ளன. ரஷ்யா மற்றும் ஈரானுடன் செய்துகொள்ளப்பட்ட மோதலற்ற பகுதிகளை நிறுவும் உடன்படிக்கையின் கீழே துருக்கியின் கண்காணிப்பு தளங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஏற்கனவே மூன்று மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருக்கும் துருக்கி இத்லிப்பில் சிரிய அரச படையெடுப்பை தடுக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த மாநாட்டில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு துருக்கி அழைப்பு விடுத்தப்போது ஈரான் மற்றும் ரஷ்யாவால் அது நிராகரிக்கப்பட்டது. இத்லிப் படை நடவடிக்கையால் பெருமளவான மக்கள் இடம்பெயரும் அச்சுறுத்தல் குறித்து துருக்கி உள்துறை அமைச்சர் சுலைமான் சொய்லி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“மனிதாபிமான விடயம் பற்றி நாம் கவலையடைகிறோம். அதனை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். தாக்குதல் ஒன்றால் இடம்பெறும் இடம்பெயர்வொன்றை நாம் பொறுப்பேற்க மாட்டோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் மூன்று மில்லியன் மக்கள் வசிக்கும் இத்லிப் மாகாணம் துருக்கியின் எல்லையிலேயே உள்ளது. இங்கிருப்பவர்களில் பாதி அளவானவர்கள் இடம்பெயர்ந்து வந்தவர்களாவர்.
Add new comment