ஆசிய கிண்ண போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து – ஐ.சி.சி அறிவிப்பு | தினகரன்

ஆசிய கிண்ண போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து – ஐ.சி.சி அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் விளையாடும் அனைத்து போட்டிகளுக்கும் முழுமையான ஒருநாள் போட்டி அந்தஸ்து வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பல அணிகள் ஒன்றிணைந்து மோதும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கும், எதிர்காலத்தில் சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் எனவும் ஐசிசி சுட்டிக்காட்டியுள்ளது.

ஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பில் ஐசிசி பரந்த அளவிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் ஒருநாள் அந்தஸ்து இல்லாத அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து உள்ள அணிகள் மோதும் போட்டிகளுக்கு ஐசிசி சர்வதேச ஒருநாள் அந்தஸ்து வழங்குவதை தவிர்த்திருந்தது.

ஆசிய கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் வெற்றியீட்டியிருந்த ஹொங்கொங் அணி, இம்முறை ஆசிய கிண்ணத்தில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் குழாமில் இணைந்துள்ள ஹொங்கொங் அணிக்கு ஐசிசியின் ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்து வழங்கப்படவில்லை. இதனால், ஹொங்கொங் அணி ஆசிய கிண்ணத்தில் விளையாடும் போட்டிகளுக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படுமா? என்ற கேள்வியெழுந்துள்ளது.

ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்த மேற்கிந்திய தீவுகள் உட்பட சில அணிகளுடன், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் விளையாடியிருந்தன. இதனால், ஒருநாள் அந்தஸ்து அற்ற அணிகளுடனான போட்டிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கவில்லை. இந்த விடயம் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது.

எனினும் 2004, 2008 மற்றும் 2012ஆம் ஆண்டுகளில் ஆசிய கிண்ணத்துக்கு தெரிவாகியிருந்த ஹொங்கொங் அணிக்கு, தற்காலிகமான ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டு வந்தது. அதனடிப்படையில் இம்முறையும் ஹொங்கொங் அணிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதுடன், பல அணிகள் பங்கேற்கும் அனைத்து தொடர்களின், சகல போட்டிகளுக்கும் ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும் என ஐசிசி குறிப்பிட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளிலும் இந்த முறையே பின்பற்றப்படும் எனவும் ஐசிசியின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் குறி்ப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த வருடம் நடைபெற்ற ஐசிசி உலகக் கிண்ணத்துக்கான தகுதிகாண் தொடரில் ஒரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்தும், மற்றொரு போட்டிக்கு ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படாமலும் போட்டிகள் நடைபெற்றன. இதனால், ரசிகர்கள் குழப்பங்களுக்கு முகங்கொடுத்திருந்தமை எம்மால் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான காரணம் விளையாடியிருந்த சில அணிகள் மாத்திரமே ஐசிசியின் ஒருநாள் அந்தஸ்தை பெற்றிருந்தன.

எனினும், தற்போது ஆசிய கிண்ணம் மற்றும் உலகக் கிண்ண தகுதிகாண் தொடர்களுக்கு தகுதிபெறும் அணிகளுக்கு, ஒருநாள் அந்தஸ்தை வழங்க தீர்மானித்துள்ளோம்.

இதன்படி குறித்த தொடர்களில் விளையாடும் அணிகளுக்கு தற்காலிக ஒருநாள் அந்தஸ்து வழங்கப்படும்.

நாம் 104 உறுப்பு நாடுகள் உட்பட கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்திவரும் நாடுகளுக்கு T-20 அந்தஸ்தை வழங்கியுள்ளோம். இதனிடையே ஒருநாள் அந்தஸ்துக்கான விண்ணப்பங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. இதற்கான தீர்மானம் எதிர்வரும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் எடுக்கப்படும்” என தெரிவித்தார்.


Add new comment

Or log in with...