சவளக்கடை விபத்தில் ஆசிரியர் பலி | தினகரன்

சவளக்கடை விபத்தில் ஆசிரியர் பலி

சவளக்கடை, அன்னமலை பிரதான வீதியில் நேற்று இடம் பெற்ற விபத்தொன்றில் பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பெரியநீலாவணை விபுலானந்தா வீதியைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான ஞானமுத்து ஜெயந்தசீலன் (வயது 39) என்பவராவார்.

நேற்று திங்கட்கிழமை ஆசிரியரான உயிரிழந்தவரும் ஆசிரியையான அவரது மனைவியும் மோட்டார் சைக்கிளில் பாடசாலை செல்வதற்காக சவளக்கடை –அன்னமலை பிரதான பாதையால் சென்றுள்ளனர். இந் நிலையில் கொழும்பில் இருந்து மண்டூர் நோக்கிச்சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டவேளையில் பஸ்ஸின் சக்கரத்தினுள் சிக்கி ஆசிரியர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

சடலம் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியான ஆசிரியை காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆசிரியர் ஜெயந்தசீலன் மண்டூர் மகா வித்தியாலயத்தில் கற்பிப்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ் விபத்துச் சம்பவம் கல்முனை தமிழ்ப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் பற்றி தெரிய வருவதாவது:

வழமைபோல நேற்று காலை பாடசாலைக்குச் செல்வதற்காக இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துள்ளனர்.

கிட்டங்கியூடாக சவளக்கடையை அடைந்து நாவிதன்வெளி செல்லும் பாதையில் சென்றுகொண்டிருக்கையில் வீட்டுத்திட்டமருகே பஸ்ஸொன்று சென்றுகொண்டிருந்தது.

நேரத்திற்கு பாடசாலைக்கு சென்று பஞ்சரில் கையைப்பதிக்கவேண்டும் என்ற அவசரத்தில் பஸ்ஸை முந்திச்செல்ல முற்பட்டுள்ளனர்.

முந்தும்போது இவ்வேளை கொங்றீட்வீதியாதலால் சறுக்கவே கணவர் பஸ் முன்னால் விழ மனைவியும் மோட்டார் சைக்கிளுடன் மறுபுறம் வீழ்ந்தார்.

முன்னால் வீழ்ந்த கணவர் மீது பஸ் ஏறியுள்ளது. இடுப்புப்பகுதியூடாகவே பஸ் ஏறியதனால் அந்த இடத்திலேயே அவர் மரணித்துள்ளார்.

மனைவி வேகமாகவீழ்ந்ததில் அவருக்கும் படுகாயம் ஏற்பட்டு அவரை கல்முனை ஆதாரவைத்தியசாலைக்குகொண்டு சென்றதும் அங்கு அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

கணவனின் சடலமும் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதிக பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்குக்கொண்டு செல்லப்படவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் நாவிதன்வெளி, மண்டுர் ஆசிரியர்கள் பெரிய நீலாவணைப்பிரதேசங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.

காயப்பட்ட தாட்சாயினி ஆசிரியை கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.குபேரனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏழாம் கிராமம் கணேசா வித்தியாலய அதிபர் பொன். பாரதிதாசன் கூறுகையில், குறித்த ஆசிரியை தாட்சாயினி பாடசாலைக்கு நேரத்துக்கு முந்தி வந்து கடமையைச் சரிவர செய்துவிட்டு நேரம் பிந்திச்செல்கின்ற அர்ப்பணிப்பான ஆசிரியை. அவருக்கு இவ்விதம் நேர்ந்ததையிட்டு மிகவும் ஆழ்ந்த கவலையடைகின்றேன் என்றார்.

சவளக்கடைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.

காரைதீவு குறூப், பாண்டிருப்பு தினகரன், மணல்​ேச னை தினகரன், சவளக்கடை குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...