மன்னாரில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு | தினகரன்

மன்னாரில் கைவிடப்பட்ட கிணற்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

மன்னார், முருங்கன் கட்டுக்கரை கோர மோட்டை பகுதியில் யுத்தத்தின்போது கைவிடப்பட்டிருந்த காணியில் உள்ள கிணற்றினுள் கடந்த புதன் கிழமை கண்டு பிடிக்கப்பட்ட ஒரு தொகுதி வெடி பொருட்களை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து நேற்று முன்தினம் (9) மாலை மீட்டுள்ளனர். குறித்த கிராமத்தில் யுத்தம் காரணமாக கைவிடப்பட்டிருந்த காணியினை அதன் உரிமையாளர் கடந்த புதன் கிழமை துப்புரவு செய்துள்ளார்.

மேற்படி காணியிலுள்ள கிணற்றினை துப்புரவு செய்யும் போது குறித்த கிணற்றில் ஆபத்தை விளைவிக்கும் வெடி பொருட்கள் காணப்படுவதை அவதானித்த வீட்டின் உரிமையாளர், உடனடியாக முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டை தொடர்ந்து குறித்த பகுதிக்குச் சென்ற பொலிஸார் குறித்த கிணற்றுக்குள் அதிகமான வெடி பொருட்கள் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளனர்.

குறித்த இடத்தில் பாதுகாப்பிற்கு மேலதிக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளதோடு, உடனடியாக குறித்த சம்பவம் தொடர்பாக மன்னார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

-மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியோடு ஞாயிற்றுக்கிழமை (9) மாலை விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கிணற்றினுள் உள்ள அனைத்து வெடி பொருட்களையும் மிகவும் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மன்னார் குறூப் , தலைமன்னார் நிருபர்கள் 


Add new comment

Or log in with...