அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்தும் | தினகரன்

அரசாங்கம் மீண்டும் விசாரணை நடத்தும்

நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவுப் பொருட்களை கொள்ளை இலாபமீட்டுகின்றவர்களுக்கு தேவையான வகையில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதை உடனடியாக நிறுத்தும் முறையான செயற்திட்டமொன்றை நடை முறைப்படுத்துதல் தொடர்பில்அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை, மாகம்புர, ருகுணு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஹம்பாந்தோட்டை விவசாய சமூகத்தினருடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடையும் வகையில் கைவிடப்பட்ட வயல் நிலங்களை மீண்டும் விளைச்சல் நிலங்களாக மாற்றும் தேசிய வேலைத்திட்டம் தொடர்பாக விவசாய சமூகத்திற்கு அறிவூட்டுவதற்காக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்த அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டத் தொடரின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதியின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜின், - நில்வள கங்கை திட்டங்கள் தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி: இத்திட்டத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மீண்டும் ஒரு விசாரணை இடம்பெறும் என தெரிவித்தார்.

ஜின், - நில்வள நீர்ப்பாசன திட்டத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து இதுவரை இடம்பெற்ற விசாரணைகளின் தாமதம் மற்றும் மந்தகதியான நிலையினை கவனத்திற்கொண்டு இத்தீர்மானத்திற்கு வரவேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, எவ்வாறான போதும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் அனைவரும் தமது அரசியல் பெறுமானங்களை பாதுகாத்து செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்ட அபிவிருத்தியில் புதிய மாற்றத்தை கொண்டுவரும் இம்மாவட்ட விவசாய சமூகத்தின் எதிர்பார்ப்பாகவுள்ள நில்வளவ திட்டம் மிகவும் அவசியமான ஒன்று என்ற கொள்கையின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாயத் துறையில் எழுச்சி ஒன்றை ஏற்படுத்தி விவசாய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள விரிவான திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். விவசாய சமூகத்தின் பிரச்சினைகள் உள்ளடங்கிய அறிக்கையொன்று ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

அமைச்சர் மஹிந்த அமரவீர, பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, தென் மாகாண விவசாயத்துறை அமைச்சர் யூ.ஜீ.பீ. ஆரியதிலக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை அம்பலாந்தொட்ட பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய மூன்று மாடி கட்டிடம் ஜனாதிபதியினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. பிரதேச நிர்வாக நடவடிக்கைகளை முறையாகவும் வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொள்ளும் நோக்குடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் நிதியில் கீழ் 990 இலட்ச ரூபா செலவில் இந்த புதிய கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நினைவுப் பலகையை திரைநீக்கம் செய்து கட்டிடத்தை திறந்துவைத்த ஜனாதிபதி அதனை சுற்றிப் பார்வையிட்டார்.

பிரதேச மக்களுக்கு காணி உறுதி வழங்குதல், அங்கவீனமுற்றவர்களுக்கு உபகரணம் வழங்குதல், பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் விவசாயத்துறை அதிகாரிகளின் சேவையை பாராட்டி பரிசில்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

அமைச்சர் வஜிர அபேவர்தன உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் எஸ்.பீ. கொடிகார, ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளர் எம்.கே. ஹரிஸ்சந்திர ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். (ஸ)

 ஹம்பாந்தோட்டை குறூப் நிருபர்


Add new comment

Or log in with...