பரீட்சைகள் திணைக்களத்துக்கு தமிழ்மொழி கசக்கின்றதா? | தினகரன்

பரீட்சைகள் திணைக்களத்துக்கு தமிழ்மொழி கசக்கின்றதா?

இலங்கையின் அரசகரும மொழியாக தமிழ்மொழியும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதென்பது நாட்டின் அரசியல் சாசனத்தின்படி உண்மையாக இருந்த போதிலும், யதார்த்த நிலைமை அதுவல்ல!

அரசியலமைப்பில் எழுத்து வடிவத்தில் மாத்திரமே தமிழ்மொழிக்கு சமஅந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறது. நாட்டின் அரசாங்க திணைக்களங்கள் பலவற்றில் இன்னும்கூட அரசகரும மொழியாக தமிழ்மொழி ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அரச திணைக்களத் தலைவர்களின் உள்ளத்தில் இன்னுமே மனமாற்றம் ஏற்பட்டதைக் காண முடியவில்லை.

இலங்கையில் சிங்களம் மாத்திரமே அரசகரும மொழியென்றும், நாட்டின் அனைத்துப் பிரஜைகளும் கட்டாயமாக சிங்கள மொழியைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்றுமே அரச திணைக்களத் தலைவர்களில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் போலத் தெரிகிறது.

இதற்கான நல்லதொரு எடுத்துக்காட்டு இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம்!

நாட்டில் மிகவும் பொறுப்புவாய்ந்த திணைக்களமாக திகழ வேண்டியது பரீட்சைகள் திணைக்களம். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் பரீட்சைகளை நடத்துகின்ற திணைக்களம் இது!

அங்கே மொழி ரீதியிலான குறைபாடு, சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு இடமளிக்கப்படக் கூடாது. இலங்கையின் பிரதான மொழிகளாக தமிழும், சிங்களமும் உள்ளதனால் அவ்விரு மொழிகளுக்கும் உரிய இடம் கொடுப்பது மாத்திரமன்றி அம்மொழிகளைப் பேசுகின்ற மக்களின் மொழி உரிமையையும் சமமாகப் பேணுகின்ற பொறுப்பை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கொண்டிருக்க வேண்டியது அவசியம்.

ஆனால் அத்திணைக்களத்தில் அன்றாடம் இடம்பெறுவது அதுவல்ல...

சிங்கள மொழியைப் பேசத் தெரியாத சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் தனது கருமத்தை நிறைவேற்றிக் கொள்ளும் பொருட்டு பரீட்சைகள் திணைக்களத்துக்குள் பிரவேசிக்கும் பொழுது, அவர் எதிர்கொள்கின்ற மொழிரீதியான சங்கடங்கள் ஏராளம்!

பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழை (அசல் பிரதி) பெற்றுக் கொள்வதற்காகவே தினமும் அங்கே ஏராளமானோர் வந்து குவிகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தெல்லாம் தமிழ், சிங்கள, முஸ்லிம் இனங்களைச் சேர்ந்த பெருமளவானோர் அங்கு வருகின்றனர். வடக்கு, கிழக்கு பிரதேசங்களைச் சேர்ந்தோரும் அங்கு வருகின்றனர்.

பரீட்சைத் திணைக்கள நுழைவாசலைக் கடந்து உள்ளே பிரவேசித்ததுமே தமிழ்மொழி அங்கே புறக்கணிக்கப்படுவது நன்கு தெரிந்து விடுகின்றது. ஒவ்வொரு கருமத்துக்கும் ஏற்ப வருவோரை வழிகாட்டுவதற்கென முன்னால் கடமையில் ஈடுபடுத்தப்படும் உத்தியோகத்தரே சிங்கள மொழியிலேயே அறிவுறுத்தல் வழங்குவதைக் காண முடிகின்றது.

வடக்கு, கிழக்குப் பிரதேசங்களில் இருந்து வருகின்ற தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சிங்கள மொழிப் பரிச்சயம் குறைவாகும். பரீட்சைத் திணைக்கள வாசலிலேயே அவர்கள் மொழி புரியாமல் திண்டாட வேண்டியிருக்கின்றது. ஆங்கிலத்திலாவது சிறு வார்த்தை பேசினாலும் வருவோர் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.

பரீட்சைப் பெறுபேற்றுச் சான்றிதழைப் பெறுவதற்காக உரிய படிவத்தை நிரப்பி, அதற்கான கட்டணத்தைச் செலுத்திய பின்னர் அனுபவிக்கின்ற உபத்திரவமே கொடியது!

கட்டணம் செலுத்திய பின்னர் அதற்கான அட்டையொன்றைத் தந்து விடுகின்றார்கள். அந்த அட்டையின் மேல் பகுதியில் இலக்கம் ஒன்று குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த அட்டையை வைத்துக் கொண்டு சான்றிதழ் பெறுவதற்காக ஒரு மணித்தியாலத்துக்கும் அதிக நேரம் முன் மண்டபத்தினுள் காத்திருக்க வேண்டும்.

ஒவ்வொருவருக்குமுரிய இலக்கத்தைக் குறிப்பிட்டே அழைக்கின்றார்கள். ஆனால் தனிச் சிங்களத்தில் மாத்திரமே இலக்கத்தைக் குறிப்பிடுகின்றனர். பல எண்கள் கொண்ட நீண்ட இலக்கத்தை சிங்களத்தில் குறிப்பிட்டு அழைக்கும் போது, சிங்கள மொழி புரியாதவர்கள் அங்கே அவஸ்தையை அனுபவிப்பதைக் காண முடிகின்றது.

சிங்களத்தில் மாத்திரமன்றி தமிழிலும் அந்த இலக்கங்களைக் குறிப்பிடுவார்களானால் சிறுபான்மையினர் புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இல்லையேல் தமிழ்மொழி கசக்கின்றதென்றால் இலக்கங்களை ஆங்கிலத்திலாவது குறிப்பிடலாம். பூச்சியம் தொடக்கம் ஒன்பது வரையான எண்களை ஆங்கிலத்தில் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் இலங்கையில் எவருமே இல்லை. ஆனால் தனிச் சிங்களத்தில் மாத்திரமே அங்கு இலக்கங்கள் குறிப்பிடப்படுகின்றன. சிறுபான்மை மக்களில் பலர் தங்களுக்கான அட்டையைக் கையில் வைத்துக் கொண்டு திண்டாடுவது அங்கே காண்கின்ற சாதாரண காட்சி!

அங்கே பலவிதமான சந்தேகங்கள் எமக்கு எழுகின்றன.

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தில் கடமையாற்றுகின்ற உத்தியோகத்தர்கள் சிங்கள மொழியைத் தவிர வேறெந்த மொழியையுமே தெரிந்திருக்காதவர்களா?

இல்லையேல், சிங்கள மொழியில் மாத்திரமே உரையாடி கருமமாற்ற வேண்டுமென அங்குள்ள உத்தியோகத்தர்களுக்கு மறைமுக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கின்றதா?

இல்லாது போனால் அங்கு வருகின்ற சிறுபான்மையினருக்கு விடயங்களைப் புரிய வைக்க வேண்டுமென்ற அவசியமில்லை என்று பரீட்சைத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கருதுகின்றனரா? இவை அனைத்துமே இல்லாத பட்சத்தில், தமிழ்மொழி என்றதும் அவர்களுக்குக் கசக்கின்றதா? இவ்வாறான சந்தேகங்கள் எழுகின்றன.

இரு மொழிகளைப் பேசுகின்ற மக்கள் வாழ்கின்ற ஒரு நாடென்ற வகையில் இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் இவ்விடயத்தில் கவனம் செலுத்துவது அவசியம். இல்லையேல் சிறுபான்மையின மக்கள் மத்தியில் சந்தேகம் தோன்றுவது தவிர்க்க முடியாததாகும்.


Add new comment

Or log in with...