மாகாணங்களுக்கு இடையிலான இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் பிரகாசித்த வீரர்கள் | தினகரன்

மாகாணங்களுக்கு இடையிலான இருபதுக்கு - 20 போட்டித் தொடரில் பிரகாசித்த வீரர்கள்

உள்ளூர் கிரிக்கெட் போட்டி அட்டவணையில் நடத்தப்படுகின்ற மிகவும் முக்கியமான போட்டித் தொடர்களில் ஒன்றாக விளங்குகின்ற மாகாண அணிகளுக்கிடையிலான இருபதுக்கு– 20 கிரிக்கெட் தொடர் கடந்தவாரம் நிறைவுக்கு வந்தது.

கொழும்பு,கண்டி,தம்புள்ளை மற்றும் காலி என நான்கு அணிகள் பங்குபற்றிய இம்முறைபோட்டித் தொடரின் இறுதிப் போட்டி கொழும்பு, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் இசுரு உதான தலைமையிலான தம்புள்ளை அணியை வீழ்த்திய உபுல் தரங்க தலைமையிலான கொழும்பு அணி சம்பியனாகத் தெரிவாகியது.

அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையிலான கண்டி அணி மூன்றாவது இடத்தையும்,திமுத் கருணாரத்ன தலைமையிலான காலி நான்காவது இடத்தையும் பெற்றுக்கொண்டன.

இம்முறைபோட்டிகளில் கண்டி அணியின் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ்,தம்புள்ளை அணியின் தலைவர் திசரபெரேரா மற்றும் கண்டி அணிக்காக விளையாடி குசல் ஜனித் பெரேரா ஆகியோர் 4 போட்டிகளில் மாத்திரம் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.இதில் அஞ்சலோ மெத்திவ்ஸ் மருத்துவ பரிசோதனைக்காக போட்டியின் இடைநடுவில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்தார். குசல் ஜனித் பெரேரா, 4 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற ஊக்கமருந்து விவகாரத்தில் இழப்பீட்டைப் பெற்றுக்கொள்வதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருந்தார்.

காலி அணியின் தலைவர் சுரங்க லக்மாலும் முதலிரண்டு போட்டிகளிலும் விளையாடியபின்னர் ஓய்வுவழங்கப்பட்டது. அத்துடன் கொழும்பு அணிக்காக நான்கு போட்டிகளிலும் விளையாடியிருந்த அணித் தலைவர் தினேஷ் சந்திமால்,கைவிரலில் ஏற்பட்ட முறிவுகாரணமாக இறுதி ஆட்டங்களில் விளையாடவில்லை.

இலங்கை தேசிய அணிக்காக தொடர்ந்து விளையாடி வருகின்ற குசல் மெண்டிஸ்,நான்குபோட்டிகளில் விளையாடி 81 ஓட்டங்களையும்,நிரோஷன் திக்வெல்ல நான்குபோட்டிகளில் விளையாடிவெறுமனே 24 ஓட்டங்களையும் குவித்து ஏமாற்றம் அளித்தனர்.தேசிய அணியில் இடம்பெறும் நோக்கில் கண்டி அணிக்காக களமிறங்கிய லசித் மாலிங்க, 6 போட்டிகளில் விளையாடி 24 ஓவர்களை வீசியிருந்ததுடன், 11 அகலப் பந்துகளை வீசிவெறுமனே 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

இம்முறைமகாணஅணிகளுக்கிடையிலானஉள்ளுர் ரி-20 தொடரில் துடுப்பாட்டம்,பந்து வீச்சு என திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களின் விபரங்களை ஆராய்ந்துபார்ப்போம்.

உபுல் தரங்க

இம்முறை போட்டித் தொடரில் அதிகளவு ஓட்டங்களைக் குவித்தவீரர்களின் பட்டியலில் கொழும்பு அணி வீரர் உபுல் தரங்க முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.

இதில் 6 போட்டிகளில் விளையாடிய அவர், 2 சதங்கள் உள்ளடங்கலாக 414 ஓட்டங்களைக் குவித்தார். இம்முறை போட்டித் தொடரின் முதலாவது மற்றும் இறுதிப் போட்டிகளில் சதங்களைக் குவித்து கொழும்பு அணியின் வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார். 103.00 என்ற துடுப்பாட்ட சராசரியைக் கொண்ட தரங்க, இப்போட்டித் தொடரில் 28 சிக்ஸர்களைக் குவித்திருந்தமை மற்றுமொருசிறப்பம்சமாகும்.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில் தற்காலிகமாக விலகியுள்ள உபுல் தரங்க, இலங்கையின் ஒருநாள் அணியில் தொடர்ந்து விளையாடிவருகின்றார். இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சுதந்திரகிண்ண முத்தரப்பு டி-20 தொடரில் இலங்கைக்காக விளையாடியிருந்த அவருக்கு எதிர்பார்த்தளவு சோபிக்கமுடியாமல் போனது. இதில் பங்களாதேஷ் அணிக்கெதிரான தீர்மான மிக்கலீக் போட்டியில் வெறும் 5 ஓட்டங்களைமாத்திரம் பெற்றுஏமாற்றம் அளித்தார்.

தசுன் சானக்க

இலங்கை அணியின் அதிரடிஆட்டக்காரரும், சகலதுறை வீரருமானதசுன் சானக்க, இம்முறை உள்ளுர் ரி -20 போட்டித் தொடரில் அதிகளவுஓட்டங்களைக் குவித்த இரண்டாவதுவீரராக இடம்பிடித்தார்.

கண்டிஅணிக்காகவிளையாடியஅவர், 6 போட்டிகளில் கலந்துகொண்டு 78.00 என்ற துடுப்பாட்ட சராசரியுடன் 312 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.

காலி அணியுடன் நடைபெற்றகடைசிலீக் ஆட்டத்தில் தசுன் சானக்க, 52 பந்துகளில் 102 ஓட்டங்களைக் குவித்துதனதுஅதிசிறந்த ரி-20 இன்னிங்ஸை பதிவுசெய்திருந்தமைகுறிப்பிடத்தக்கது. அதுமாத்திரமின்றி இம்முறைபோட்டிகளில் அவர் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தார்.

தனுஷக குணதிலக்க

இலங்கை அணியில் அடிக்கடி சர்ச்சைகளுக்கு முகங்கொடுத்துபோட்டித் தடைகளுக்கு ஆளாகி வருகின்ற இளம் வீரரான தனுஷ்க குணதிலக்கவும், இம்முறை உள்ளூர் ரி -20 போட்டித் தொடரில் துடுப்பாட்டம்,பந்துவீச்சில் அபாரம் காட்டியிருந்தார்.

இம்முறைபோட்டிகளில் தம்புள்ளை அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துவருவதற்கு முக்கியகாரணமாக இருந்த தனுஷ்க குணதிலக்க, 7 லீக் ஆட்டங்களில் விளையாடி, 2 அரைச்சதங்கள் உள்ளடங்கலாக 247 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். அத்துடன்,பந்துவீச்சில் 7 விக்கெட்டுக்களையும் அவர் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சரித் அசலங்க

இலங்கை அணியின் மற்றுமொருவளர்ந்து வரும் வீரர்களில் ஒருவரான சரித் அசலங்க, இம்முறை உள்ளூர் ரி--20 போட்டித் தொடரில் கண்டி அணிக்காக விளையாடி சகலதுறையிலும் பிரகாசித்திருந்தார். இம்முறைபோட்டிகளில் அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய நான்காவது பந்து வீச்சாளராக இடம்பிடித்த அவர், 6 போட்டிகளில் விளையாடி 195 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

காலி அணிக்கெதிரான லீக் ஆட்டத்தில் 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்திய சரித் அசலங்க,தனது அதிசிறந்த ரி-20 பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.துடுப்பாட்டத்திலும் அசத்தியஅவர், 105 ஓட்டங்களைக் குவித்து அசத்தியிருந்தார்.

கசுன் ராஜித

இம்முறை உள்ளுர் ரி-20 போட்டித் தொடரில் காலி அணிக்கு ஒருசில வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க வேகப்பந்து வீச்சாளரான கசுன் ராஜிதமுக்கியகாரணமாக இருந்தார்.அதுமாத்திரமின்றி அதிகளவு விக்கெட்டுக்களை வீழ்த்திய வீரர்களில் முன்னிலைபெற்ற அவர், 6 போட்டிகளில் விளையாடி 231 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுக்களைக் வீழ்த்தினார்.

அத்துடன்,தம்புள்ளை அணிக்கெதிரான போட்டியில் 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை வீழ்த்தி தனது அதிசிறந்த ரி--20 பந்துவீச்சுப் பிரதியையும் பெற்றுக்கொண்டார்.

அகில தனஞ்ஞய

இம்முறை போட்டிகளில் அதிகளவு விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரர்களில் மூன்றாவது இடத்தை அகில தனஞ்ஞய பெற்றுக்கொண்டார். ஏழு போட்டிகளில் விளையாடி 16.26 என்ற சராசரியுடன் 11 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். இந்தப் போட்டித் தொடரின் ஆரம்ப லீக் ஆட்டங்களில் அபாரமாக பந்து வீசிய அகில தனஞ்ஞய, இறுதி லீக் ஆட்டங்களில் எதிரணி வீரர்களுக்கு அதிகளவு ஓட்டங்களை விட்டுக் கொடுத்திருந்தார்.

பீ.எப் மொஹமட்


Add new comment

Or log in with...