ஏழு தமிழரின் விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா | தினகரன்


ஏழு தமிழரின் விடுதலைக்கு வித்திட்டவர் ஜெயலலிதா

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதற்கான சூழல் இன்று உருவானதற்கு கடந்த 2014-இல் சட்டசபையில் முதல்முறையாக ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியதே காரணமாகும்.

அக்ைகதிகள் 23 ஆண்டு காலம் சிறையில் இருந்ததால் அவர்களது விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் அன்று தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோரிக்கை தமிழகம் முழுவதும் வலியுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழக சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ் முதல்வர் ஜெயலலிதா 2014 பெப்ரவரி 19-ஆம் திகதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாநில அரசுக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில் தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும் உடனே விடுதலை செய்ய அமைச்சரவை முடிவு எடுத்தது.

அதேபோல் வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினியை விடுதலை செய்யவும் முடிவு எடுத்தது. மேலும் ராஜிவ் வழக்கில் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் ​ெராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரையும் விடுதலை செய்யவும் அமைச்சரவை முடிவு எடுத்தது.

இந்த முடிவு குறித்து மத்திய அரசுக்கு தெரியப்படுத்துவோம். மத்திய அரசு 3 நாட்களுக்குள் பதில் தெரிவிக்காவிட்டால் மாநில அரசு அனைவரையும் விடுதலை செய்யும் என்றார் ஜெயலலிதா.

இந்த நிலையில் 7 பேரை விடுதலை செய்வதை தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இந்த வழக்கை இப்போது முடித்து வைத்துள்ளது. எனவே ஜெயலலிதா போட்ட தீர்மானம்தான் இன்று 7 தமிழர்கள் விடுதலைக்கு வித்திட்டுள்ளது.


Add new comment

Or log in with...