மட்டு. மாவட்டம் முழுமையாக முடக்கம்; வீதிகள், பாடசாலைகள் வெறிச்சோட்டம் | தினகரன்

மட்டு. மாவட்டம் முழுமையாக முடக்கம்; வீதிகள், பாடசாலைகள் வெறிச்சோட்டம்

புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

புல்லுமலை குடிநீர் போத்தல் தொழிற்சாலையை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று ஹர்த்தால் (07) அனுஷ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இந்த பூரண ஹர்த்தால் அமைதியாக அனுஷ்டிக்கப் பட்டது.

ஹர்த்தாலுக்கு ஆதரவாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டதுடன், தனியார் போக்குவரத்துச் சேவைகளும் முற்றாக முடங்கின. பயணிகளின் நடமாட்டம் மிகவும் குறைந்து காணப்பட்ட போதும், இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் மட்டும் சேவையில் ஈடுபட்டதுடன், தூர இடங்களுக்கான ஒரு சில போக்குவரத்துகளும் வழமை போன்று இடம்பெற்றன. மாணவர்களின் வரவு குறைந்திருந்ததால் பாடசாலைகள் வெறிச் சோடிக்காணப்பட்டன. அரச அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாததால் அலுவலகங்கள் களையிழந்து காணப்பட்டன.

வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்துக்களுக்கு தடைஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புல்லுமலையில் அமைக்கப்பட்டுவரும் குடிநீர் போத்தல் தொழிற்சாலையினால் அப்பகுதி மக்கள் எதிர்காலத்தில் பாரிய வறட்சியை எதிர்நோக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதைத் தடுத்து நிறுத்துமாறு கடந்த காலத்தில் பல போராட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில் நேற்றும் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் கவனம் செலுத்தி இந்த குடிநீர் தொழிற்சாலையை நிறுத்தவேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.பல்லின சமூகங்கள் வாழும் நாட்டிலே தனியொரு சமூகத்தினரின் அரசியல் செயற்பாட்டுக்கும், அபிவிருத்திக்கும் ஜனாதிபதி, பிரதமர் கருணைகாட்டுவது தவிக்கப்படவேண்டும் என்பதே இன்றைய ஹர்த்தாலின் நோக்கமாகும்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...