சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம் | தினகரன்


சமுர்த்தி அதிகாரிகளுக்கு நிரந்தர நியமனம்

27,000 பேருக்கு நன்மை

* ஓய்வூதியத்துடன் சலுகைகள்
* குடும்ப நலனுக்காக நிரந்தர வேலைத்திட்டம்

அனைத்து சமுர்த்தி அதிகாரிகளுக்கும் இவ் வருட இறுதிக்குள் நிரந்தர நியமனம் வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான துரித வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளதுடன் சமுர்த்தி அதிகாரிகள் எதிர்காலத்தில் ஓய்வூதியத்துக்கு உரித்துடையவர்களாக உள்வாங்கப்பட்டு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை ஒழுங்கு முறையில் பெற்றுக் கொள்ள திட்டமும் தயாரிக்கப்பட்டிருப்பதாக சமூக வலுவூட்டல் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல் அமைச்சில் நேற்று (07) வெள்ளிக்கிழமை நடைபெற்ற விசேட சந்திப்பொன்றின் போதே, அமைச்சர் ஹரிசன் இந்தத் தகவல்களை வெளியிட்டார். இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர்:

சமுர்த்தி சேவை நிலையில் மரணித்தவர்கள் மற்றும் ஓய்வுபெற்றவர்களின் குடும்பங்களின் நலனுக்காக ஒரு நிரந்தர வேலைத் திட்டம் தயாரிக்கப்படவுள்ளது.

இதன் பிரகாரம் அடுத்த மூன்று மாதங்களுக்கு இடையில், இந்தத் திட்டம் சமூக வலுவூட்டல் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும்.

திட்டமிட்ட அடிப்படையில் தீர்மானங்கள், திட்டங்களை உரிய நேரத்திற்கு எடுக்க அரசாங்கம் தயாராகவுள்ளது. எனினும் சில சந்தர்ப்பங்களில் நீதிமன்ற செயற்பாடுகள் காரணமாக இவை தாமதமடைகின்றன.சமுர்த்தி அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் இந்த நிலையே காணப்படுகிறது.

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கத்தின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் முன்னேறிச் செல்வதுமட்டுமல்ல, தேர்தலை நடத்தி எடுக்க வேண்டிய முடிவுகளை எடுப்பதற்கும் அரசாங்கம் தயாராகவுள்ளது. நாட்டில் அனைத்து மக்களும் அரசாங்கத்துடன் கைகோர்த்துள்ளனர். இவ்வாறான அரசாங்கம் தொடர்பில், நம்பிக்கை, பாதுகாப்பு என்பன உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

இதனடிப்படையிலேயே, அபிவிருத்தி தொடர்பான திட்டங்கள் துரிதப்படுத்தப் பட்டுள்ளன. அத்துடன் மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கவும் அரசாங்கம் தயாராகவே உள்ளது.

நிரந்தர நியமனம் பெறாத சமுர்த்தி அதிகாரிகள் 27,000 பேருள்ளனர். இவர்களுக்கான நிரந்தர நியமனம் உட்பட முதுமையடைந்த பின்னர் அவர்களின் வாழ்வாதாரத்தை முன்னெடுக்க ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. எனவேதான் ஏனைய அரச ஊழியரக்ளுக்கு வழங்கப்படும் சலுகைகளும் இவர்களுக்கு கிட்டுவதில்லை. இவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நாம் நம்புகிறோம். இவை தொடர்பாக ஆராய்ந்த போது, இந்த சமுர்த்தி ஊழியர்கள் விடயத்தில் குறைத்தே மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, அரசாங்கம் இந்த உறுதியான முடிவை எடுத்துள்ளது.

இவர்கள் விடயத்தில் எந்த அரசியல் வேறுபாடும் பார்க்கப்பட மாட்டாது. இவர்களுடைய சம்பளத்தை நிரந்தரமாக்கி, தன்னால் முடிந்த கடப்பாட்டை சமுர்த்தி ஊழியர்களுக்காக செய்ய உறுதி பூண்டுள்ளதாகவும் அமைச்சர். பி.ஹெரிசன் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...