புதிய அரசியலமைப்பு நகல்: விரைவில் சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு | தினகரன்


புதிய அரசியலமைப்பு நகல்: விரைவில் சபையில் சமர்ப்பிக்க ஏற்பாடு

புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை அரசாங்கம் மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விரைவில் மேற்படி நகல் வரைபு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீதான இரண்டு நாட்கள் விவாதத்தையும் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று உதய கம்மம்பில எம்.பி. வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் எழுப்பிய கேள்விக்கு, இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா பதிலளித்தார். அதன்போது குறுக்கிட்டுக் கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பிய தினேஷ் குணவர்தன எம்.பி :-

அரசியலமைப்பு தொடர்பான வழிகாட்டல் குழுவில், நிபுணர்கள் குழுவின் அறிக்கையை மட்டுமே அரசியலமைப்புச் சபையில் சமர்ப்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல சபையை தவறாக வழிநடத்துகிறார் எனக் குறிப்பிட்டார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல: அப்படியல்ல, நாம் புதிய அரசியலமைப்பின் நகல் வரைபை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தயார் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து உதய கம்மல்பில எம்.பி எழுப்பிய கேள்விகளுக்குத் தொடர்ந்தும் பதிலளித்த இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா:-

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் உபகுழுவின் அறிக்கையைப் பாராளுமன்றத்துக்குச் சமர்ப்பித்திருந்தார். அதில் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முன்னுரிமைக்கு பாதிப்பு ஏற்படாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று புத்தசாசனத்தைப் பலப்படுத்துவது தொடர்பிலும் கூறப்பட்டுள்ளது. ஏனைய மதங்களும் பாதுகாக்கப்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கிணங்க 1978இல் ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட இவ்விடயம் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியினால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பில் உதய கம்மம்பில எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்: இது பற்றி நான் மேலும் குறிப்பிடவிரும்புவது, கடந்த காலங்களில் தலதா மாளிகையைச் சூழவுள்ள பகுதிகளில் கார் பந்தயம் நடத்தப்பட்டது. அச் சமயத்தில் அவர் இதுபற்றிக் கூறியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

நாம் நாட்டில் பௌத்த சமயத்தை மட்டுமன்றி ஜனநாயகத்தையும் பாதுகாத்துள்ளோம். எவரும் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கொழும்பு வீதிகளில் இரவில் தங்கிச் செல்லுமளவுக்கு சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. அவர்களால் மக்களை பெருமளவில் அழைத்து வர முடியாமல் போனமை எமது பொறுப்பல்ல. லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தை மட்டுமே அவர்களால் நிரப்ப முடிந்தது. அடுத்து கண்டியில் நடத்தத் தீரமானித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது என்றார்.

உதய கம்மல்பில எம்.பி. தமது கேள்வியில், பௌத்த மதம் தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள இரண்டாவது அத்தியாயத்தை அதேபோன்று பேணிவருமாறு விதப்புரை செய்துள்ள குழு அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாது? என கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை; நேற்று முன்தினம் அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான வழிநடத்தல் குழு கூடியுள்ளது. அதன்போது நிபுணர்கள் குழுவின் அறிக்கையை முழுமையாக அரசியலமைப்புப் பேரவைக்குச் சமர்ப்பிப்பது என தீர்மானிக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் கருத்துக்களும் ஏனைய நிபுணர்களின் ஆலோசனைகளும் பின் இணைப்பாக இணைத்து நகல் வரைபை தயாரிப்பது குறித்தும் இதன்போது கவனத்திற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (ஸ)

 லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...