வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜர் | தினகரன்


வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றில் ஆஜர்

 

18 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவர் நேற்று (07) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்று மீறியதாக வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட மூவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நேற்று(07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜனக்க டி சில்வா, வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன்,

கே.சிவனேசன் ஆகியோரை மீண்டும் எதிர்வரும் (18) செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.

இதன்போது இரண்டு நீதிபதிகளால் இவ்வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

வட மாகாணசபையின் அமைச்சராக தன்னை செயற்பட விடாமல் தடுத்துள்ள முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் , அனந்தி சசிதரன் மற்றும் கே.சிவநேசன் ஆகியோர் வேண்டுமென்றே மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் உத்தரவை மீறியிருப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் பி. டெனீஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை பி.டெனீஸ்வரனை மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்படுவதிலிருந்து இடைநிறுத்த எடுத்த தீர்மானத்துக்கு எதிராக நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 09 ஆம் திகதி வரை நேற்று (07) நீடித்துள்ளது.

தன் மீது எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டபோதும் தன்னை மீண்டும் மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்பட விடாததன் மூலம் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் உள்ளிட்ட மூவரும் நீதிமன்றத்தின் உத்தரவை வேண்டுமென்றே மீறியிருப்பதாக வட மாகாணசபை உறுப்பினர் பி.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பி.டெனீஸ்வரன் மீது வட மாகாணசபை எடுத்த தீர்மானத்துக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜூன் (29) இல் இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்தது.

மேலும் வட மாகாணசபை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கோ அல்லது நீக்குவதற்கோ வட மாகாணசபை முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனுக்கு எவ்வித அதிகாரமும் இல்லையென்றும் பி.டெனீஸ்வரன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 


Add new comment

Or log in with...