நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு பாதுகாப்பு அரண் | தினகரன்


நுரைச்சோலை அனல் மின் நிலையத்திற்கு பாதுகாப்பு அரண்

நுரைச்சோலை அனல் மின் நிலைய பாதுகாப்புக்கான அரண் 60 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக பிரதியமைச்சர் அஜித் பி பெரேரா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை நிலக்கரியால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை அடுத்த வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வரமுடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (07) வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹெக்டர் அப்புஹாமி எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே பிரதியமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

லாப் எஞ்ஜினியர்ஸ் மற்றும் சன்கென் நிறுவனங்களினால் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய பிரதியமைச்சர்;

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தில் கடல் காற்றினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கும் வகையில் மேற்படி பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்படவுள்ளன. இவ்வருடம் ஜூன் 20 ஆம் திகதி இதற்கான நிர்மாணப் பணிகள் ஆரம்பிக் கப்பட்டு 2019 ஜுலையில் நிர்மாணப்பணிகள் நிறைவடையவுள்ளன.

இதேவேளை நிலக்கரி சாம்பலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 127 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.

சாம்பலை அங்கிருந்து அகற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நிறுவனங்கள் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தினமும் 674 தொன் சாம்பல் அகற்றப்படவுள்ளன. இந்த பாதுகாப்பு அரண்கள் நான்கு பக்கங்களும் அமைக்கப்படவுள்ளன. இதன் மூலம் முழுமையான பாதுகாப்பு கிடைக்கும்.

வெளிநாடுகளில் வீதி நிர்மாண நடவடிக் கைகளுக்கு நிலக்கரி சாம்பல் உபயோகிக் கப்படுகிறது. இது இலங்கையில் சுகாதாரத்துக்குப் பாதிப்பு ஏற்படாது என அறியப்பட்டால் இது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 


Add new comment

Or log in with...