ஜப்பானிடம் ரூ.7 ஆயிரம் கோடி பெறுமதியான 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம் | தினகரன்


ஜப்பானிடம் ரூ.7 ஆயிரம் கோடி பெறுமதியான 18 புல்லட் ரயில்களை வாங்க இந்தியா திட்டம்

ஜப்பானிடம் இருந்து 7 ஆயிரம் கோடி ரூபாய் பெறுமதியான 18 புல்லட் ரயில்களை இந்தியா வாங்கவுள்ளது.

நாட்டின் முதல் புல்லட் ரயிலை மும்பை மற்றும் அகமதாபாத்துக்கு இடையே 2022 ஆம் ஆண்டில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஜப்பானின் உதவியுடன் 508 கிலோ மீட்டர் தூரத்துக்கு அதிவேக ரயில் பாதையையும் அமைக்க இருக்கிறது.

அதிவேக ரயில்களைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் நிகழ்ச்சியில் ஜப்பானின் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜப்பானிய வடிவமைப்பிலேயே புல்லட் ரயில்களைத் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. உலகிலேயே உயர்ந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ஜப்பான் புல்லட் ரயில்களில் தானியங்கி பாதுகாப்பு வசதியும் உள்ளது.

மும்பை-, அகமதாபாத் இடையே இயக்கப்படும் புல்லட் ரயிலை நாள்தோறும் 18,000 பேர் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எகனாமிக் வகுப்புக்கு 3000 ரூபாய் நிர்ணயிக்கத் திட்டமிட்டுள்ளனர். அனைத்து வசதிகளையும் கொண்ட முதல் வகுப்பு விமானக் கட்டணத்துக்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது.பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்திய ரயில்வே, காலப்போக்கில் தனியார் பங்களிப்புடன் புல்லட் ரயில் போக்குவரத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கவாசாகி மற்றும் ஹிட்டாச்சி போன்ற புல்லட் ரயில் நிறுவனங்கள் இந்தியாவில் நுழைய முடிவு செய்துள்ளது.

மேன் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் புல்லட் ரயில் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

புல்லட் ரயில் போக்குவரத்துக்கான கட்டமைப்புகள் ஜனவரி மாதம் தொடங்கும் என்று கூறிய அவர்கள், நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்தவுடன் காலக்கெடு நிர்ணயிக்கப்படும் என்றனர்.

குஜராத்தில் 350 கிலோ மீட்டர் தூரத்துக்கும் மகாராஷ்டிராவில் 150 கிலோ மீட்டர் தூரத்துக்கும் அமையவுள்ள புல்லட் ரயில் பாதையில் 12 ரயில் நிலையங்கள் அமையவுள்ளன.

இதற்காக ஜப்பானிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திடம் இந்தியா நிதி கோரியுள்ளது. 88000 கோடி ரூபாயை 0.1 சதவீத வட்டி வீதத்தில் வாங்குகிறது.

கடன் தொகை விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து 15 வது ஆண்டில் கடனை திருப்பிச் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...