தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா? | தினகரன்


தொடரும் காணாமல் போனோர் விவகாரம் முடிவுக்கு வருமா?

காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கையை அதன் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கடந்த புதன்கிழமை கையளித்திருக்கின்றார். இந்த இடைக்கால அறிக்கையில் பல்வேறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இந்தப் பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருக்கின்றார். காணாமல் போனோர் குறித்து ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதன் அவசியம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் ஒரு விடயமாகும்.

இந்த இடைக்கால அறிக்கையை வெளியிட்டதன் மூலம் காணாமல் போனோரின் உறவுகள் ஓரளவு மன ஆறுதலடையக்கூடியதாக காணமுடியும். ஆனால் அறிக்கையின் பரிந்துரைகள் வெறுமனே எழுத்தாவணமாக மட்டும் இருந்துவிடக்கூடாது. கிடப்பில் போடப்பட்ட பட்டியல்களுக்குள் இந்த இடைக்கால அறிக்கையும் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடக்கூடாது. நல்லெண்ணத்தோடும், நம்பகத்தன்மையோடும் ஆணைக்குழு செயற்பட்டிருப்பதை இந்த இடைக்கால அறிக்கையை படிக்கும் போது ஊகிக்க முடிகின்றது. பரிந்துரைகள் கூட நியாயமானவையாகவே நோக்கக் கூடியதாக உள்ளது.

ஆணைக்குழு ஆட்கள் காணாமல் போன சம்பவத்தை ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அவர்களது உறவினர்களின் வேதனைகளையும் தேவைகளையும் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியிருக்கின்றது. அத்துடன் வலிந்து காணாமலாக்கப்படுவதை மனிதத்துவத்துக்கு எதிரான பெரும் குற்றமாகக் கூட அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனைத்தான் ஆணைக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அம்சமாகும். ஆணைக்குழு நியாயத்தின் பக்கம் இருந்து அதன் பணிகளை நேர்மையாக மேற்கொண்டிருப்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் ஆணைக்குழு நடத்திய பரந்துபட்ட விசாரணைகள் மற்றும், வாக்குமூலங்கள் மூலம் குற்றம் சுமத்தப்பட்ட அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீதான முழு அளவிலான விசாரணைகள் முடிவடையும் வரையில் அவர்களை இடமாற்றம் செய்யவோ, பதவி உயர்வுகள், பதவி மாற்றங்களை மேற்கொள்ளவோ அல்லது வேறுவிதமாக நடவடிக்கைகளை கையாளவோ கூடாது என்பதை ஆணைக்குழு வலியுறுத்திப் பதிவுசெய்துள்ளது. குற்றவாளிகள் தப்புவதற்கு இடமளிக்கப்படக்கூடாது என்பதையே இந்த அறிவுறுத்தல் இயம்பி நிற்பதைக்காண முடிகிறது. இந்த வெளிப்படைத் தன்மைதான் ஆணைக்குழு மீதான நம்பிக்கையை உத்தரவாதப்படுத்துகிறது.

காணாமல் போனவர்களதும், கண்டுபிடிக்க முடியாதவர்களதும் குடும்பங்களின் தற்போதைய சமூக பொருளாதார நிலை மோசமாகக் காணப்படுவதால் அதற்கு எத்தகைய மாற்றீடுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என்பதை கவனத்திலெடுத்து விசாரணை முடித்து தீர்வு வழங்கும் வரை அவர்களால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாது என்பதால் உடனடி நிவாரண உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதில் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியிருக்கின்றது. இந்தச் செயற்பாட்டின் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஓரளவுக்கேனும் மன ஆறுதல் பெறக்கூடியதாக இருக்கும் என நம்புகின்றோம்.

ஆணைக்குழுவின் சிபாரிசுகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படு மிடத்து பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கவலை சிறிதளவேனும் மாறக்கூடியதாக இருக்கும் அதனைத் தாமதப்படுத்தும் ஒவ்வொரு நாளும் அவர்களின் வேதனைகள் கூடிக் கொண்டே போகலாம். மட்டுமன்றி அது அரசு மீதும் சட்டத்தின் மீதும் அதிருப்தியை அதிகரிக்கும் நிலைமைகளை தோற்றுவிக்கலாமென்ற அச்சத்தையும் இங்கு சுட்டிக்காட்ட விளைகின்றோம்.

காணாமல் போனோரின் குடும்ப வாழ்வாதாரமாக இழப்பீடு கொடுக்கப்படும் வரை மாதாந்தம் குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாவை நிவாரணமாக வழங்கப்பட வேண்டுமெனவும், இழப்பீடு வழங்கப்பட்டதன் பின்னர் இந்த நிவாரணத்தை நிறுத்திவிடலாம் என்ற பரிந்துரைகூட ஆரோக்கியமானதொன்றாகவே நோக்க முடிகிறது. அதற்குப் புறம்பாக வேறு வழிகளினூடாக ஏதாவது உதவி உபகாரம் வழங்கமுடியுமாக இருப்பின் அது விடயத்திலும் கரிசனைகாட்ட முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுயதொழில் முயற்சிக்கான வட்டியில்லாக் கடனுதவியை குடும்பத்தின் தலைமைக்கோ, தொழில் முயற்சியிலீடுபடுபவருக்கோ பெற்றுக் கொடுக்க முடியும் என்ற பரிந்துரை கூட அறிவுபூர்வமானதாகவே பார்க்க முடிகிறது.

நீதிக்கான பரிந்துரைகளை அவதானிக்கின்ற போது அது கனதிமிக்கதாக அமையப்பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாக உள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அவசரத் தேவைகளை புரிந்துகொண்டு தகுதியானதும், பயனுறுதி மிக்கதுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதற்குரிய ஆக்கபூர்வமான செயற்பாடுகளின் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவற்றுக்கெல்லாம் மேலானதாக ஒரு விடயத்தை ஆணைக்குழு முக்கிய பரிந்துரையாக முன்மொழிந்துள்ளதைக் காண முடிகிறது. அதாவது சட்டத்தை அமுலாக்கும் உத்தியோகத்தர்களுக்கும், சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்துக்கு காணாமல் ஆக்கப்படுதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கும், வழக்குத் தொடர்வதற்கும் தண்டனை வழங்குவதற்குமான போதிய பௌதிக வளங்களும், மனித வளங்களும் வழங்கப்படுவதோடு அதற்கேற்ற சட்டவிதிகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பரிந்துரை. இதுவொன்றே போதும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதியையும், நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதனை உறுதிசெய்வதற்கு. இது நம்பிக்கை தரக்கூடிய அம்சமாகும்.

இறுதியாக காணாமல் போனோர் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அதன் இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது. நல்ல பரிந்துரைகளும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் இந்தப் பரிந்துரைகள் எந்தளவு தூரத்துக்கு நிறைவேற்றப்படப் போகின்றன என்பது கேள்விக்குறியாகும். ஜனாதிபதி இந்த அறிக்கையைப் பெற்றுக்கொண்ட போது அளித்த உறுதிமொழி எமக்கு ஆறுதல் தருவதாக உள்ளது. பரிந்துரைகளை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பித்து இதனை முன்னெடுப்பதற்கான உபகுழு அமைக்கப்படுமென்பதே அந்த உத்தரவாதம். இனியும் காலம் கடத்தாமல் உப குழு மூலம் அதனை துரிதப்படுத்த வேண்டுமென்பதே உறவுகளின் எதிர்பார்ப்பாகும்.


Add new comment

Or log in with...