Friday, March 29, 2024
Home » எரிசக்தி பயன்பாட்டுச் செலவினத்தையும், காபன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் இலங்கையின் முன்னணி கைத்தொழில் அமைப்புக்கள்

எரிசக்தி பயன்பாட்டுச் செலவினத்தையும், காபன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் இலங்கையின் முன்னணி கைத்தொழில் அமைப்புக்கள்

by Rizwan Segu Mohideen
November 24, 2023 3:18 pm 0 comment

இலங்கையில் ஆகக்கூடுதலாக எரிசக்தியைப் பயன்படுத்தும் கைத்தொழில் நிறுவனங்கள், எரிசக்தி பயன்பாட்டு ஆலோசனை அமைப்புக்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் 45 பேர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு வருடகால எரிசக்தி முகாமைத்துவ கற்கைநெறியை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் கற்கைநெறியின் ஓரம்சமாக இவர்கள் அமுலாக்கிய எரிசக்தி முகாமைத்துவ திட்டங்கள் மூலம் 7,200 மெற்றிக் தொன் பச்சை வீட்டு வாயு வளிமண்டலத்தில் சேராமல் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவருட காலத்திற்கு 1,000 இற்கு மேற்பட்ட பெற்றோல் கார்கள் வீதிகளில் ஓடாமல் இருப்பதால் கிடைக்கும் அனுகூலத்திற்கு சமமானது. 

கொழும்பு, 14 நவம்பர் 2023 – இலங்கையின் கைத்தொழில் துறையில் எரிசக்தியை செயற்றிறன் வாய்ந்த முறையில் பயன்படுத்தக்கூடிய புதியதொரு யுகத்தை தொடங்கும் வகையில், எரிசக்தி முகாமைத்துவ முறைமையைக் கற்றுக் கொண்ட பயிலுனர்கள் 45 பேருக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று இடம்பெற்றது. இந்த முன்முயற்சி, ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி செய்யும் ‘இலங்கையில் தொழிற்சாலைகளின் சுவாத்திய மாற்ற பதிலளிப்பை விரைவுபடுத்தல்’ என்ற திட்டத்தின் உதவியுடன் கூடியதாகும். இது எதிர்வரும் ஆண்டுகளில் தேசிய எரிசக்தி பாதுகாப்பை விருத்தி செய்து, சுவாத்தியம் சார்ந்த இலக்குகளை அடைய இலங்கைக்கு உதவும் ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரண, ‘உற்பத்தித் துறையானது எமது பொருளாதாரத்திற்கு முக்கியமானது’ என்றார். ‘நாம் சமீபத்தில் எரிசக்தி நெருக்கடிகளையும், உலகளாவிய சுவாத்திய நெருக்கடிகளையும் எதிர்கொண்டோம். இவை பெற்றோலிய எரிபொருட்களுக்கு மாற்று சக்திகளை கண்டுபிடிக்க வேண்டியை தேவையை தெளிவாக உணர்த்தியுள்ளது. இதனால் தான், எமது உற்பத்தித் துறையில் சிறப்பாக இயங்கும் அமைப்புக்கள் எரிசக்தி விரயத்தை குறைக்கும் வழிவகைகளை ஆராய்வதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எமது நாட்டுக்காக சுற்றாடலை மாசுபடுத்தாத எரிசக்தி பயன்பாட்டுத் தீர்;வை அடைவதில் மிகவும் முக்கியமானது.’

இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் கார்மென் மொரீனோ, ‘எரிசக்தி நெருக்கடி சார்ந்த பூகோள அரசியல் காரணமாக உலக நாடுகள் பெற்றோலிய எரிபொருளில் தங்கியிருக்கக்கூடிய நிலையை ஏற்படுத்துகின்றன. இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. இலங்கையிலும் உலகெங்கிலும் சுற்றூடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதும், புதுப்பிக்கக்கூடியதுமான தூய எரிசக்தியை நோக்கி நகரும் தேவை உள்ளது. இந்தத் துறையில் கணிசமான அறிவையும், அனுபவங்களையும் பகிரும் ஆற்றல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உண்டு. பச்சை வாயு வீட்டு வெளியேற்றத்தைக் குறைத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தூய்மையான எரிசக்தியை நோக்கிய நிலைமாற்றத்திற்கு நாம் அதிகபட்ச முன்னுரிமை வழங்குகிறோம். இதே காரணத்திற்காக, நாம் இத்தகைய முன்முயற்சிகளுக்கு உதவி செய்கிறோம். உள்ளுர் கைத்தொழில் துறையில் சிறப்பாக இயங்குவோர் எரிசக்தி பயன்பாட்டில் செயற்றிறன் பெற செயன்முறை அறிவைப் பெற்று கம்பனிகளை முன்னேற்றுவதைக் காண்கையில் மகிழ்ச்சியாக உள்ளது.’

செலவுச் சிக்கனமான தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ நடைமுறைகளைப் பிரயோகித்து இலங்கையின் உற்பத்தித் துறை முழுவதிலும் கைத்தொழில் எரிசக்தி விரயத்தைக் குறைப்பற்குரிய கணிசமான ஆற்றல் இருக்கிறது. இந்த ஆற்றல் மூலம் பயன்பெற ஐக்கிய நாடுகள் கைத்தொழில் ஸ்தாபனத்தின் இரு முன்னணி பயிற்றுவிப்பாளர்கள், தேசிய தூய்மை உற்பத்தி நிலையத்தின் உதவியடன், சர்வதேச ரீதியாக அங்கீகாரம் பெற்ற எரிசக்தி முகாமைத்துவ முறைமைகள் () பயிற்சிநெறியின் ஊடாக முதற்தொகுதி பயிலுனர்களை வழிநடத்தினார்கள்.

‘ஒரு தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால், எரிசக்தி முகாமைத்துவ முறைகள் மூலம் எரிசக்தியை சேமிப்பதன் மீது மாத்திரமன்றி, எரிசக்தியை பாதுகாத்து, கழிவு வெளியேற்றங்களைக் குறைக்கும் நடவடிக்கைகள் மீதும் கவனம் செலுத்தப்படும்,’ என்றார், யுனிடோவின் செயற்றிட்ட முகாமையாளர் நிக்கலஸ் டெஹோட். ‘பெற்றோலிய எரிபொருட்களில் இருந்து அப்பால் செல்வதற்குரிய பயணம் அங்கிருந்து தான் தொடங்குகிறது,’ என்று அவர் கூறினார்.

இந்தப் பாடநெறியில் உலகின் சிறந்த நடைமுறைகள் பற்றி ஆராயப்பட்டன. அத்துடன், இதில் கலந்துகொண்டவர்கள் வகுப்பறையில் இருந்து தாம் வேலை செய்யும் சூழலுக்கு சென்று, தமது கம்பனியின் தேவைகளுக்கு ஏற்றவாறான எரிசக்தி முகாமைத்துவ முறைமைகளை வடிவமைத்தார்கள்.

நீண்டகால நோக்கில் ஆராய்ந்தால், இதில் கலந்து கொண்ட கம்பனிகள் தமது மின் கட்டணத்தில் கால்வாசியைக் குறைக்கும் தடத்தில் செல்வதாகக் கூறலாம்.

அதேவேளை, இலங்கையில் எவ்வாறு எரிசக்தி விரயத்தைக் குறைத்து, பணத்தை சேமிப்பதென கூடுதலான கம்பனிகளுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய புதிய எரிசக்தி ஆலோசகர் குழுவொன்று இலங்கைக்கு கிடைத்துள்ளது.

எரிசக்தி முகாமைத்துவ முறைமைகள் மீதான ஆர்வத்தின் அதிகரிப்புடன், இந்த வேலைத்திட்டத்தின் மூலம் கூடுதல் கற்கைநெறிகள் நடத்தப்படும். அடுத்த கற்கைநெறி 2024ஆம் ஆண்டின் முற்பகுதியில் தொடங்கவுள்ளது.

இந்த EnMS பயிற்சியானது ”இலங்கையில் தொழிற்சாலைகளின் சுவாத்திய மாற்ற பதிலளிப்பை விரைவுபடுத்தல்’ என்ற திட்டத்தின் ஒருபாகமாகும். இது 7.56 மில்லியன் யூரோ முதலீட்டில் ஐந்தாண்டு காலம் நீடிக்கும் முன்முயற்சியாகும். இதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் உலக சுவாத்திய மாற்ற கூட்டணி (GCCA+) நிதியிடுகிறது. இதனை யுனிடோ அமுலாக்குகிறது. சுற்றாடல் அமைச்சு, கைத்தொழில் அமைச்சு, மின்வலு எரிசக்தி அமைச்சு ஆகியவை அரசாங்கத்தின் சார்பில் முன்னணி பங்காளர்களாக இயங்குகின்றன. தேசிய ரீதியில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக் காரணிகள் (2021இல் தேவையான மாற்றங்கள் சேர்க்கப்பட்டது) என்ற ஆவணத்தின் பிரகாரம், 2030இற்குள் கைத்தொழில் துறையில் பச்சைவீட்டு வாயு வெளியேற்றத்தை 7 சதவீதத்தால் குறைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சியில் இந்தத் திட்டம் மிகவும் முக்கியமானதாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT