ஜெரூசல தூதரகத்தை மாற்றிய பரகுவேயுடன் இஸ்ரேல் முறுகல் | தினகரன்

ஜெரூசல தூதரகத்தை மாற்றிய பரகுவேயுடன் இஸ்ரேல் முறுகல்

பரகுவே இஸ்ரேலுக்கான தனது தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றி மூன்று மாதம் கழிந்த நிலையில் தனது தூதரகத்தை மீண்டும் டெல் அவிவுக்கு கொண்டுவந்துள்ளது.

மத்திய கிழக்கில் நீடித்த அமைதி ஒன்றை எட்டுவதற்கு உதவ விரும்புவதாக கடந்த மாதம் பதவியேற்ற பரகுவேயின் புதிய ஜனாதிபதி மாரியோ அப்தோ பெனிடஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் தனது பரகுவே தூதரகத்தை மூடியுள்ளது. எனினும் பரகுவேயில் உடன் தூதரகம் திறக்கப்படும் என்று பலஸ்தீன அதிகாரசபை அறிவித்துள்ளது.

பரகுவேயின் நடவடிக்கை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சைக்குரிய முறையில் தனது தூதரகத்தை ஜெரூசலத்திற்கு மாற்றிய விரைவிலேயே பரகுவேயின் முந்தைய ஜனாதிபதி ஹொராசியோ கார்டஸ் கடந்த மே மாதம் தூதரகத்தை இடம் மாற்ற தீர்மானித்தார்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியான மாரியோ அப்தோ அவரது பழைமைவாத கொலொராடோ கட்சியை சேர்ந்தவர் என்றபோதும் இந்த முடிவுக்கு அப்போது அதிருப்தியுடன் இருந்தார்.

ஜெரூசலத்தை இஸ்ரேல் பிரிக்கப்படாத தலைநகர் என்று குறிப்பிடும் அதேவேளை அதன் கிழக்கு ஜெரூசலம் தனது எதிர்கால தலைநகர் என்று பலஸ்தீனம் கூறுகிறது.


Add new comment

Or log in with...