கண்ணகி கலை இலக்கிய விழா களுதாவளையில் இன்று ஆரம்பம் | தினகரன்

கண்ணகி கலை இலக்கிய விழா களுதாவளையில் இன்று ஆரம்பம்

இலங்கையில் பெண் தெய்வ வழிபாடுகளில் கண்ணகி அம்மன் வழிபாடு முதன்மை பெற்று விளங்குவதுடன், தமிழர்களின் பண்பாட்டு பாரம்பரிய கலை கலாசார மரபுகளை செவ்வனே எடுத்தியம்புவதாகவும் உள்ளது.இதனை அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்லும் ஒரு நல்ல செயற்பாடாக அமைந்த இவ்வாண்டுக்கான கண்ணகி கலை இலக்கிய விழா மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள களுதாவளை கலாசார மண்டபத்தில் இன்று 07ம் திகதி ஆரம்பமாகி 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை வெகு கோலாகலமாக நடைபெறுகின்றது.

கண்ணகி வழிபாடு எமது நாட்டில் கஜபாகு மன்னன் காலத்தோடு தொடர்புறுத்தப்பட்டுள்ளது. இந்திய மரபிலே தோற்றம் பெற்ற கண்ணகி வழிபாட்டு முறை இங்கு சைவம், பெளத்தம் இரண்டையும் ஒருமுகப்படுத்தி மதபேதம் கடந்து எழுச்சி பெற்றிருந்தது. சிங்கள மக்களிடையே 'பத்தினி தெய்வம்' என்றும் சைவர்களிடையே 'கண்ணாகித்தாய்' என்றும் மக்களால் பக்தி சிரத்தையுடன் கண்ணகி தெய்வம் போற்றப்படுகிறாள்.

கண்ணகி வணக்கத்துடன் பல கலாசார பாரம்பரியங்களும் மக்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன நல்லுறவுக்கும் எடுத்துக்காட்டாக பத்தினி அம்மன் வழிபாடு அமைந்துள்ளது.

'திருமாமணி நங்கை வந்தாள், எங்கள் தேசம் தழைத்திட வந்தாள்' என்ற தலைப்புடன் எட்டாவது கண்ணகி கலை இலக்கிய விழா இம்முறை நடைபெறுகிறது.

கண்ணகி கலை இலக்கிய விழா எவ்வாறு கிழக்கில் தோற்றம் பெற்றது? ஏன் இவ்விழாவினை மக்கள் முன்கொண்டு செல்ல வேண்டும்?

இதன் ஆரம்ப கர்த்தாவும் விழா ஏற்பாட்டுத் தலைவருமான செங்கதிரேசன் த. கோபாலகிருஷ்ணன் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.

கிழக்கில் கண்ணகி வணக்கத்துடன் தொடர்பான இலக்கியங்களையும் கலைகளையும் மீளக் கொண்டு வந்து தமிழர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் பெரும் பணியாக இவ்விழா அமைந்துள்ளது. கண்ணகியோடு தொடர்புடைய பல இலக்கியங்கள் இருந்துள்ளதெனினும் கண்ணகியோடு தொடர்புடைய முதன்மை இலக்கியம் சிலப்பதிகாரம் எனலாம். இதுவே தமிழில் தோன்றிய முதல் காப்பியம். இது தோன்றிய காலமான கி.பி இரண்டாம் நூற்றாண்டில் இந்திய மொழிகளிலோ ஏன் உலக மொழிகளிலோ வேறு காப்பியங்கள் தோன்றியதாகத் தெரியவில்லை என அருட்திரு. தமிழ்நேசன் அடிகளார் கூறியுள்ளார்.

தெய்வங்களையும் தெய்வத் தொடர்புடைய இராமன் போன்ற பாத்திரங்களையும் அரசர்களையும் தலைவர்களாகக் கொண்டு காப்பியங்கள் பாடப் பெற்ற காலத்தில் மனிதரைப் பற்றி, மனிதரின் வளர்ச்சி பற்றி, மனிதனின் முழுநிலை பற்றி, மனிதரின் வாழ்க்கை குறிக்கோள் பற்றி சிந்தித்த முதல் காப்பியம் சிலப்பதிகாரம். இதனால் இதை 'குடிமக்கள் காப்பியம்' என்பர். ஒரு சாதாரண குடியில் தோன்றிய கண்ணகி முழுநிலை அடைந்ததை, தெய்வநிலை எய்தியதை கூறும் காப்பியம் இது என அடிகளார் குறிப்பிடுகின்றார்.

களுதாவளை கொம்புச் சந்திப் பிள்ளையார் ஆலயமுன்றலில் (தேற்றாத்தீவு) ஆரம்பமாகும் இன்றைய முதல் நாள் நிகழ்வுக்கு முதன்மை அதிதியாக சி.அமலநாதன் (பணிப்பாளர் நாயகம், அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, கொழும்பு) கலந்து சிறப்பிக்கின்றார்.

பண்பாட்டுப் பவனி தெற்கே துறைநீலாவணை, கோட்டைக்கல்லாறு, மகிழூர், எருவில் மற்றும் களுவாஞ்சிகுடி கண்ணகி அம்மன் ஆலயங்களிலிருந்து களுவாஞ்சிகுடி அம்மன் ஆலயத்தை வந்தடையும்.

செட்டிபாளையத்திலிருந்து புறப்படும் பவனி அம்மன் ஆலயத்தை வந்தடைந்தவுடன் இரு அணிகளும் விழா மண்டபத்தினை வந்தடையும். இறுதி நிகழ்வாக கலாசார நிகழ்வு இடம்பெறுவதுடன் இவ்வாண்டு முதல் விபுலானந்த விருது_ 2018 முதன் முறையாக செல்வி கதிராமன் தங்கேஸ்வரிக்கு வழங்கப்படவுள்ளது. இவ்விருது எதிர்வரும் ஆண்டுகளில் தொடர்ச்சியாக அறிஞர் பெருமக்களுக்கு வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஆர். நடராஜன்
பனங்காடு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...