ஏழு பேரின் விடுதலைக்கும் சாதகமான வழி பிறந்தது! | தினகரன்

ஏழு பேரின் விடுதலைக்கும் சாதகமான வழி பிறந்தது!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பு மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் மேற்படி சிறைக்ைகதிகளின் விடுதலைக்கான வாய்ப்பையும் அளித்திருக்கிறது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்திருந்தது.

மேலும், இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ​ெராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகள் சிறையில் தண்டனையைக் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக அதே ஆண்டு பெப்ரவரி 19-ஆம் திகதி தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது. இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.

இந்த மேன்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15-ஆம் திகதி தொடங்கி 11 நாட்கள் விசாரணை நடத்தியது.

இதைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் 2015, டிசம்பர் 2-ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அதில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்படி, தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும். குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை. சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, ராஜீவ் கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 2-ஆம் திகதி மீண்டும் கடிதம் எழுதியது. தண்டனைக் கைதிகள் சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்கலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களின் விடுதலை குறித்து பல ஆண்டுகளாக தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முதல்வராக இருக்கும் போது 7 பேரை விடுதலை செய்வது எனச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். இதற்கு மத்திய அரசு மூன்று நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும், இல்லையெனில் பேரறிவாளன் உட்பட அனைவரையும் தமிழக அரசு விடுதலை செய்யும் எனவும் கூறியிருந்தார்.

இதை எதிர்த்து மத்திய அரசு, கடந்த 2013-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.இந்த வழக்கு சில ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி ரஞ்சன் கோகாய் விசாரித்தார், அப்போது பேசிய அவர், ‘ ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை தொடர்பாக முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம்’ என தீர்ப்பளித்தார்.


Add new comment

Or log in with...