Thursday, March 28, 2024
Home » பிளாஸ்டிக் போத்தல்களுக்கு மீள வழங்கப்படும் வைப்புப் பணமுறை

பிளாஸ்டிக் போத்தல்களுக்கு மீள வழங்கப்படும் வைப்புப் பணமுறை

- இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

by Prashahini
November 28, 2023 3:35 pm 0 comment

– ஆசிய அபிவிருத்தி வங்கியினுடனான கடன் ஒப்பந்தம்
– இலங்கை – நேபாள உயர்கல்வித்துறையில் ஒத்துழைப்பிற்கான ஒப்பந்தம்
– காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய கொள்கை

வெற்று பிளாஸ்டிக் போத்தல்களுக்கு QR குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வைப்புப் பணம் மீள்செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தவிர நேற்று (27) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 11 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

பொலி எத்தலின் ரெறப்பதலேட் (PET) மற்றும் ஹயி இம்பெக்ட் பொலிஸ்ரிறீன் (HIPS) ப்ளாஸ்ரிக் கோப்பைகள் மற்றும் ஏனைய பிளாஸ்டிக் பாத்திரங்கள் பெரும்பாலும் ஒருதடவை மாத்திரம் பயன்படுத்திவிட்டு சுற்றாடலுக்கு விடுவிக்கப்படுகின்றன. அவ்வாறான கழிவுப் பொருட்களை கழிவகற்றும் போது ஒருசில நுகர்வோர் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாலும், வினைத்திறனாக சேகரித்துக் கொள்வதற்கான முறைமை இன்மையாலும் குறித்த ப்ளாஸ்ரிக் கழிவுகள் கூருணர்வு மிக்க சுற்றாடல் தொகுதிகள் உள்ளிட்ட வெளிச்சூழலுடன் சேர்கின்றன.

இந்நிலைமையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை மூலம் இலங்கையில் ப்ளாஸ்ரிக் கழிவுகளை முகாமைத்துவம் செய்வதற்காக 02 முன்னோடிக் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. முன்னோடிக் கருத்திட்டத்தின் பெறுபேறுகளின் அடிப்படையில் வெற்றுப் பாத்திரங்களை மீண்டும் சேகரிக்கும் போது தற்காலிக வைப்புப்பணம் மீள்செலுத்தும் முறைமை பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த முறையின் கீழ் நுகர்வோர் குறித்த பொருளைக் கொள்வனவு செய்யும் போது விற்பனையாளர் தற்காலிக வைப்புப் பணத்தைப் பெற்றுக் கொள்வதுடன், வெற்றுப் போத்தல்/பொதியை மீண்டும் வழங்கும் பட்சத்தில் நுகர்வோருக்கு தற்காலிக வைப்புப் பணம் மீண்டும் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். குறித்த பொறிமுறையை மேலும் விருத்தி செய்வதற்காக QR குறியீட்டுத் தொகுதியொன்றை அறிமுகப்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்குப் பொருத்தமான நிறுவனங்களிடமிருந்து முன்மொழிவுகளைக் கோரல் மற்றும் தேர்ந்தெடுக்கப்படுகின்ற நிறுவனத்தின் மூலம் QR குறியீட்டை அடிப்படையாகக் கொண்ட வைப்புப் பணம் மீள்செலுத்தும் முறையை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2. ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தை (iRoad Programme) முடிவுறுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து நிதியைப் பெற்றுக்கொள்ளல்

ஆசிய அபிவிருத்தி வங்கிக் கடன் நிதியத்தால் அமுல்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு வேலைத்திட்டத்தின் (iRoad Programme) கீழ் ஒருசில வீதி அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நிதி கிடைக்காமையால் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளதுடன், குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் துரிதமாகப் பூர்த்தி செய்யப்பட வேண்டிய பகுதிகளைப் பூர்த்தி செய்வதற்காக 60 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த கடன் ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

3. இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை மற்றும் நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்புக்கும் (International Fair Trade Network) இடையிலான ஒத்துழைப்பு சட்டகத்தில் கையொப்பமிடல்

நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பு (International Fair Trade Network) என்பது தரநிர்ணயங்கள், சான்றுப்படுத்தல், உற்பத்தி ஒத்துழைப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் ஆலோசனைகள் மூலம் பயன்களை சமமாகப் பகிர்ந்தளிக்கும் உலகளாவிய வலையமைப்பாகும். சர்வதேச ரீதியாக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுடுபடுகின்ற பல நிறுவனங்கள் நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் பங்காளர்களாக செயலாற்றுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் “நீதியான வர்த்தகம்” மற்றும் “வர்த்தக நியாயத்திற்கு” ஒத்துழைப்பு வழங்கும் கொள்கைக்காக ஆலோசனை வழங்கல் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதற்கும், அத்துடன் தொடர்ச்சியான உரையாடலை மேற்கொண்டு செல்வதற்கு குறித்த நிறுவனத்திற்கு இயலுமை உண்டு. இலங்கையில் “நீதியான வர்த்தகக் கொள்கையை” ஊக்குவிப்பதற்காக நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பின் பங்காளர்களுடன் இணைந்து செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை முன்மொழிந்துள்ளது.

அதற்கமைய, நீதியான சர்வதேச வர்த்தக வலையமைப்பு மற்றும் இலங்கைக்கும் இடையில் ஒத்துழைப்புக்களை அதிகரிக்கும் நோக்கில் “ஒத்துழைப்புச் சட்டகத்தில்”கையொப்பமிடுவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

4. இலங்கை அரசுக்கும் நேபாள அரசுக்கும் இடையிலான உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் நேபாள அரசுக்கும் இடையில் உயர் கல்வித் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்தல், விரிவுபடுத்தல் மற்றும் இரு நாடுகளின் உயர் கல்வி நிறுவனங்களுக்கிடையில் தொடர்புகளை மேலும் விருத்தி செய்யும் நோக்கில், உயர் கல்வித் துறையில் ஒத்துழைப்புக்களுக்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

இவ் ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையில் உயர் கல்வித் துறையில் முன்னோக்கிய வளர்ச்சிக்காக இருநாடுகளுக்கிடையில் மேற்கொள்ளப்படுகின்ற பயிற்சி வேலைத்திட்டங்களைப் போலவே, உயர் கல்வி முறையிலுள்ள குறித்த பாடவிதானங்கள் மற்றும் விஞ்ஞான ரீதியான கல்வி முறைகளைப் பரிமாற்றம் செய்து கொள்வதற்கும், இரு தரப்பினர்களாலும் நடாத்தப்படும் உயர்கல்வி மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகளில் கலந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் கிட்டும்.

அதற்கமைய, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு மற்றும் நோபாள அரசுக்கும் இடையில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

5. தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டகம் (South Asia qualifications Reference Framework) இலங்கையில் நடைமுறைப்படுத்தல்

பிராந்திய நாடுகளுக்கிடையில் ஒத்தழைப்புக்களை அதிகரித்தல் தொடர்பாக 2014 ஆம் ஆண்டில் நோபாளத்தின் கத்மண்டு நகரில் இடம்பெற்ற சார்க் நாடுகளின் தலைவர்களின் 18 ஆவது ஒன்றுகூடலில் முதன்மையாகக் கவனம் செலுத்தப்பட்டதுடன், அது தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையையும் வழங்கியுள்ளது. அதன் விளைவாக கல்வித் துறையிலும் உழைப்புப் படையணியின் திறமைகளைக் கண்டறிவதற்காக தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டகத்தை உலக தொழிலாளர் அமைப்பின் இடையீட்டின் பிரகாரம் 2020 ஆம் ஆண்டில் வரைவாக்கம் செய்வதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கான தொழிநுட்பக் குழுக் கூட்டங்களில் இலங்கையும் கலந்து கொண்டுள்ளதுடன், இலங்கை உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் கல்வி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்கள், குறித்த தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டக வரைபுக்கு உடன்பாடு தெரிவித்துள்ளன. இத்தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டகத்தின் மூலம் அந்தந்த உறுப்பு நாடுகளின் தகைமைகள் சட்டகங்களுக்கும் யாதொரு சட்ட ரீதியான கடப்பாடும் காணப்படாததுடன், பிராந்தியத்திலுள்ள ஏனைய நாடுகளின் தகைமைகள் சட்டகங்களுக்கான இணைப்பாகவும் இச்சட்டகம் செயலாற்றும் தெற்காசிய தகைமைகள் பரிந்துரை சட்டகத்தை இலங்கையில் வலுவாக்கம் செய்தல் தொடர்பாக வெளிவிவகார அமைச்சின் விதந்துரையும், சட்டமா அதிபரின் ஒப்புதலும் கிடைத்துள்ளன.

அதற்கமைய, கல்வி அமைச்சு மற்றும் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சும் இணைந்து தெற்காசிய தகைமைகள் அறிமுகச் சட்டகத்தை இலங்கையில் வலுவாக்கம் செய்வதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

6. காபன் நடுநிலையாக்கல் திட்டவரைபு மற்றும் மூலோபாயத் திட்டம் 2050 (Roadmap for Carbon Neutrality and strategy)

பரிஸ் ஒப்பந்தத்தின் பங்காளரான ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டகப்படுத்தப்பட்ட உடன்படிக்கைக்கு சமர்ப்பித்திருக்கின்ற, இற்றைப்படுத்தப்பட்ட தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்ட ஒத்துழைப்புக்கள் மூலம் 2050 ஆம் ஆண்டாகும் போது இலங்கை காபன் நடுநிலையாக்கல் நிலைமையை அடைவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, குறித்த இலக்கை அடைவதற்கு இயலுமாகும் வகையில் பங்காளர்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள விரிவான ஆலோசனைகள் மூலம் நிபுணத்துவக் குழுவினரால் 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் எதிர்மய நாடாக மாற்றுவதற்குத் தேவையான, பச்சைவீட்டு வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கும், மற்றும் காபன் நிலையாக்கத்தை அதிகரிப்பதற்கான ஆற்றல்வளம் கொண்ட நடவடிக்கைகளை அடையாளங் கண்டு 2050 ஆம் ஆண்டாகும் போது காபன் நடுநிலையாக்கல் திட்டவரைபு மற்றும் மூலோபாயத் திட்டத்தைத் தயாரித்துள்ளது.

அதற்கமைய, குறித்த திட்டவரைபு மற்றும் மூலோபாயத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

7. காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான மடுவன்வெல நிந்தகமவத்த எனும் பெயரிலான காணியின் ஒருபகுதியை வரையறுக்கப்பட்ட இலங்கைப் புகையிலைக் கம்பனிக்கு குத்தகை அடிப்படையில் பயிர்ச்செய்கைக்கு வழங்கல்

இரத்தினபுரி மாவட்டத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவில் பனாமுற கிராம அலுவலர் பிரிவில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான நிந்தகமவத்த எனும் பெயரிலான காணியின் ஒருபகுதியை பயிர்ச்செய்கைத் திட்டத்திற்காக வழங்குமாறு வரையறுக்கப்பட்ட இலங்கைப் புகையிலைக் கம்பனி வேண்டுகோள் சமர்ப்பித்துள்ளது.

குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட அறிக்கை மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கமைய, மடுவன்வெல நிந்தகமவத்த எனும் பெயரிலான 87 ஏக்கர், 03 றூட் மற்றும் 25பேர்ச்சர்ஸ் காணியை இலங்கைப் புகையிலைக் கம்பனிக்கு பயிர்ச்செய்கைத் திட்டத்திற்காக நீண்டகால குத்தகை அடிப்படையில் 30 ஆண்டுகளுக்கு வழங்குவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

8. நில அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ள (Institute of Surveying and Mapping) 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

நில அளவை மற்றும் வரைபடமாக்கல் துறையில் உயர் கல்வி வசதிகளை வழங்குகின்ற நிறுவனமாக இயங்குவதற்கு இயலுமாகும் வகையில் நில அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவனம் தாபிக்கப்பட்டுள்ள 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்கச் சட்டத்தைத் திருத்தம் செய்வது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் மூலம், உயர்தரத்தில் கணிதப் பிரிவு மற்றும் ஏனைய பாடத்துறைகளில் கல்வி பயின்று பல்கலைக்கழகப் பிரவேசம் கிடைக்காத மாணவர்களுக்கு நில அளவை மற்றும் வரைபடமாக்கல் துறையில் உயர்கல்வித் தேவைகளை உருவாக்கி உள்ளுர் மற்றும் வெளிநாட்டு தொழில் சந்தைக்கு ஏற்புடைய வகையிலான செயன்முறைப் பயிற்சிகளுடன் கூடிய பட்டதாரிகளை உருவாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

அதற்கமைய, 1969 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க நில அளவை மற்றும் வரைபடமாக்கல் நிறுவன சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

9. மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்தல்

மருத்துவ நிபுணராகப் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக 1927 ஆம் ஆண்டின் 26 ஆம் இலக்க கட்டறைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு முன்னாள் சுகாதார அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 2023.08.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், அங்கு முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக தொடர்ந்தும் விடயங்களை ஆராய்ந்து பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக பிரதமரின் செயலாளர் தலைமையில் அதிகாரிகள் குழுவொன்றுக்கு ஒப்படைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய, குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

10. 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்களை அல்லது ஊக்குவிப்புககளை வழங்குதல் பற்றிய வழிகாட்டுநெறிகள் – தீர்வையற்ற தொழிற்பாடுகள்) ஒழுங்குவிதிகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் 2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, கொழும்புத் துறைமுக நகர (செயல்நுணுக்க முக்கியத்துவம் வாய்ந்த வியாபாரங்களுக்கு விலக்களிப்புக்களை அல்லது ஊக்குவிப்புககளை வழங்குதல் பற்றிய வழிகாட்டுநெறிகள் – தீர்வையற்ற தொழிற்பாடுகள்) ஒழுங்குவிதிகள், 2355/30 ஆம் இலக்க 2023.10.25 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி யால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பிப்பதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை மற்றும் கொரிய குடியரசுக்கும் இடையிலான காலநிலை மாற்றத்திற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தம்

காலநிலை மாற்றம் தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு இலங்கைக்கும் கொரிய குடியரசுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கும், குறித்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியளித்தல் மற்றும் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்வதற்காக காலநிலை மாற்றம் தொடர்பான குழுவொன்றை அமைப்பதற்காக சுற்றாடல் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. காலநிலை மாற்றம் தொடர்பான தேசிய கொள்கை

இலங்கை தொடர்ச்சியாக காலநிலை மாற்றங்களின் தாக்கங்களுக்குள்ளாகின்ற நாடாகக் காணப்படுவதுடன், அது உள்ளுர் பொருளாதார விருத்திக்குப் பல்வேறு வகையிலான தாக்கங்களையும் ஏற்படுத்துகின்றன. நிலைபெறுதகு அபிவிருத்தியின் மீது கவனம் செலுத்தி காலநிலை மாற்றங்களால் ஏற்படுகின்ற தாக்கங்களைக் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய தேவையை அரசு கண்டறிந்துள்ளது.

அத்துடன் காலநிலை இடர்கள், தேசிய முன்னுரிமைகள், புதிதாக மேலெழுந்து வருகின்ற உலகளாவிய விருத்திகள், காலநிலை தொடர்பான வேலைத்திட்டப் பொறிமுறைகள் மற்றும் நிதியங்களிலிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்காக 2012 ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய காலநிலை மாற்றக் கொள்கையில் குறிப்பிடத்தக்க நாளதுவரை செய்யப்பட்ட இற்றைப்படுத்தல்களை மேற்கொள்வது அவசியமென மேலும் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, சுற்றாடல் அமைச்சு ஏற்புடைய தரப்பினர்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்து தேசிய ரீதியில் நிச்சயிக்கப்பட்டுள்ள பங்களிப்புக்களுக்கும், காலநிலை மாற்றங்களால் ஏற்பட்டுள்ள தாக்கங்களுக்கும் இசைவாக்கமடையும் தேசிய திட்டத்திற்கும், பரிஸ் ஒப்பந்தத்தின் கடப்பாடுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான சட்டக உடன்படிக்கைக்கு இணங்கியொழுகும் வகையிலும் காலத்தோடு தழுவியதாக இற்றைப்படுத்தப்பட்டுள்ள காலநிலை மாற்றம் தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய கொள்கைக்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT