பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தமிழக அரசே முடிவெடுக்கலாம் | தினகரன்

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை தமிழக அரசே முடிவெடுக்கலாம்

இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவிப்பு

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவெடுக் கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்க முடியுமெனவும் இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்திருந்தது. மேலும், இந்த வழக்கில் இம் மூவருடன் சேர்த்து ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த நளினி, (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் ஏற்கெனவே 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால் அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாமென உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இதைத் தொடர்ந்து,  இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய தமிழக சட்டப்பேரவையில் 2014, பெப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. இது தொடர்பாக 2014 பெப்ரவரி 19 இல் தமிழக அரசு, மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது.

இந்நிலையில், இந்த நடவடிக்கையை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல். தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு 2014, ஜூலை 15 முதல் 11 நாட்கள் விசாரணை நடத்தி 2015, டிசம்பர் 02 இல், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தொடுக்கப்பட்ட வழக்குகளில் தண்டனைக் கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கே உண்டு. அதன்பிரகாரம் தொடர்புடைய அரசுகள் என்பதை வழக்கின் தன்மைக்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் எனவும், ஆலோசனை என்ற வார்த்தையை ஒப்புதல் எனவும் கருத வேண்டும்.

குற்றவாளிக்கு தன்னிச்சையாக தண்டனையைக் குறைக்க குற்றவியல் தண்டனைச் சட்டம் 432 (1) பிரிவு வழி வகுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட குற்றவாளி அளிக்கும் மனுவைப் பரிசீலித்து, அதன் மீது நீதிபதி விசாரித்து திருப்தி அடைந்த பிறகே அவரது தண்டனையைக் குறைக்க முடியும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனிடையே, ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடந்த ஆண்டு மார்ச் 02 இல் மீண்டும் கடிதம் எழுதியது.

தண்டனைக் கைதிகள் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகோய் அமர்வு நேற்று(06) விசாரணைக்கு வந்தது.

இதில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை குறித்து தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்றும் மேலும் இது தொடர்பாக ஆளுநருக்கு, தமிழக அரசு பரிந்துரைக்க முடியும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த வழக்கு முடித்துவைக்கப்பட்டது.

 


Add new comment

Or log in with...