கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவிப்பு | தினகரன்


கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு சோபியாவுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு கணிதபாட ஆராய்ச்சி மாணவி லூயிஸ் சோபியாவுக்கு நீதி மன்றம் அறிவித்துள்ளது.

தூத்துக்குடி கந்தன் காலனியை சேர்ந்த டொக்டர் ஏ.ஏ.சாமியின் மகள் லூயிஸ் சோபியா (28). கனடாவில் உள்ள மான்ட்ரியால் பல்கலைக்கழகத்தில் கணித பாடத்தில் ஆராய்ச்சி மாணவியாக பயின்று வருகிறார்.

இவர் கடந்த 3-ம் திகதி சென்னையில் இருந்து தனியார் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். அதே விமானத்தில் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையும் வந்தார். அப்போது, சோபியா திடீரென ‘பாசிச பாஜக அரசு ஒழிக' என ஆவேசமாக முழக்கமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தூத்துக்குடி விமான நிலையத்தில் வைத்து அவரிடம் தமிழிசை விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தமிழிசை அளித்த புகாரின் பேரில் சோபியாவை புதுக்கோட்டை பொலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு, பின்னர் உடல்நிலை காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோபியா அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் தூத்துக்குடி 3-வது நீதித்துறை நடுவர் மன்றம் சோபியாவுக்கு பிணை வழங்கியதை தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அவர் விடுவிக்கப்பட்டார். சோபியாவை பொலிஸார் கைது செய்தபோது, அவரிடம் இருந்த பழைய காலாவதியான கடவுச்சீட்டை பொலிஸார் பறிமுதல் செய்தனர். எனவே புதிய கடவுச்சீட்டை ஒப்படைக்குமாறு சோபியாவின் தந்தையிடம் கடந்த செவ்வாய்க்கிழமை பொலிஸார் அறிவிப்பு கடிதத்தை வழங்க முற்படும் போது அவர் வாங்க மறுத்துவிட்டார்.

நேற்று முன்தினம் மீண்டும் பொலிஸார் அந்த கடிதத்தை அனுப்பினர். சோபியாவின் புதிய கடவுச்சீட்டை எதிர்வரும் 7-ம் திகதி புதுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் நேரில் ஒப்படைக்குமாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தை சோபியாவின் குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்.


Add new comment

Or log in with...