சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு கலைப்பு | தினகரன்

சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா அரசு கலைப்பு

சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா சட்டப் பேரவை கலைக்கப்பட்டது. காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் நீடிக்க வேண்டுமென ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தனி மாநிலமாக பிரிக்கப்பட்ட தெலுங்கானா, முதல் முறையாக கடந்த 2014-இல் சட்டப் பேரவைத் தேர்தலைச் சந்தித்தது. இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 119 தொகுதிகளில் 63 தொகுதிகளில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் முதல்வரானார்.

அவரது தலைமையிலான அரசின் 5 ஆண்டுகள் பதவிக் காலம், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. எனவே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் தெலுங்கானா சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆனால் மக்களவைத் தேர்தலுடன் தெலுங்கானா சட்டப் பேரவைத் தேர்தலை சந்திப்பதற்கு சந்திரசேகர் ராவ் விரும்பவில்லை. அதற்காக முன்கூட்டியே பேரவைத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டப் பேரவையைக் கலைப்பதற்கு அவர் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே அண்மையில் பல்வேறு நலத் திட்டங்களை அவர் தொடக்கி வைத்தார். இதனால் அவர் பேரவையைக் கலைக்க முடிவு செய்திருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சிப் பொதுக் கூட்டத்தில் இதை குறிப்பிட்டுப் பேசிய சந்திரசேகர் ராவ், கட்சியின் நலன் கருதியும் மாநில மக்களின் நலன் கருதியும் பேரவையைக் கலைப்பதற்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர்களும் அமைச்சர்களும் தனக்கு வழங்கியிருப்பதாகக் கூறினார்.

பொதுக் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, அமைச்சரவையைக் கூட்டி, பல்வேறு நலத் திட்ட உதவிகளை அறிவிப்பற்கு சந்திரசேகர் ராவ் ஒப்புதல் பெற்றார்.

இந்நிலையில் தெலுங்கானா சட்டப் பேரவையைக் கலைப்பது குறித்து முடிவெடுப்பதற்காக அந்த மாநில அமைச்சரவை நேற்று வியாழக்கிழமை காலை கூடி விவாதித்தது. சந்திரசேகரராவ் தலைமையிலான தெலுங்கானா பேரவையை கலைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது அமைச்சரவையை கலைப்பது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து பேரவையை கலைக்கும் பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் வழங்கும்படி அமைச்சரவை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவைக் கேட்டுக் கொண்டது. அதன்படி பரிந்துரை கடிதத்தை ஆளுநர் நரசிம்மனிடம் முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று வழங்கினார்.

இந்நிலையில், தெலுங்கானா அமைச்சரவையின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றுக்கொண்டதை அடுத்து சந்திரசேகர ராவின் அரசு நேற்று மதியம் கலைக்கப்பட்டது. தேர்தல் நடைபெறும் வரை, காபந்து முதல்வராக சந்திரசேகர ராவ் பதவி வகிக்கவேண்டும் என்று ஆளுநர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தெலுங்கானா பேரவை கலைக்கப்பட்டதால் எதிர்வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் இணைந்து தெலுங்கானா மாநிலத்திற்கும் தேர்தல் நடத்தப்படும் என்பது உறுதியாகி உள்ளது.

மாநிலம் முழுவதும் அடுத்த 50 நாட்களில் 100 பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி திட்டமிட்டுள்ளது. முதல் கூட்டம் கரீம் நகரில் உள்ள ஹுஸ்னாபாதில் 7ஆம் திகதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...