மக்களுக்கு வெறுப்பைத் தந்துள்ள மஹிந்த அணியின் காட்டுத் தர்பார்! | தினகரன்

மக்களுக்கு வெறுப்பைத் தந்துள்ள மஹிந்த அணியின் காட்டுத் தர்பார்!

கொழும்பின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில், பட்டப்பகலின் சனசந்தடி மிகுந்த வேளையில், பெருமளவு ஆட்களைத் திரட்டி வந்து களியாட்டமொன்றை நடத்தியதன் மூலம் மக்களின் கடும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டுள்ளனர் மஹிந்த அணியினர்!

‘கூட்டு எதிரணி’ என்று தங்களை அழைத்துக் கொள்கின்ற மஹிந்த அணியினர் முன்னர் சொன்னதோ வேறு... ஆனால் நேற்றுமுன்தினம் நடந்திருப்பதோ மற்றொன்று!

மஹிந்த அணியினர் நேற்றுமுன்தினம் கொழும்பு லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில நடத்தி முடித்த காரியம் எத்தகையதென்பதை இங்கு விபரமாகத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், சமூக வலைத்தளங்கள் அனைத்துமே அங்கு நடந்த சம்பவங்களை படம் போட்டுக் காட்டி விட்டன. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற சம்பவங்கள் அனைத்துமே முற்றுமுழுதான காட்டுத் தர்பார்!

நாட்டின் சட்டம் ஒழுங்குக்கு குறைந்தபட்ச மரியாதையேனும் அளிக்கப்படவில்லை; மக்களின் அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றோம் என்ற குற்றவுணர்வு கூட அவர்களுக்குத் தோன்றவில்லை; பின்தங்கிய கிராமப் பகுதிகளிலிருந்து பாமர மக்களை கொழும்புக்கு அழைத்து வந்து முட்டாளாக்குகின்றோம் என்ற சங்கோஜமும் அவர்களுக்கு ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

மஹிந்த அணியினர் நேற்றுமுன்திம் நடத்தியதெல்லாம் வன்முறை கலாசாரத்தின் உச்சகட்ட காரியங்கள்!

‘கொழும்புக்கு மக்கள் பலம்’ என்பதன் பேரில் மஹிந்த அணியினர் பெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவிருப்பதாக ஒரு மாத காலத்துக்கு முன்னரே செய்திகள் வெளிவரத் தொடங்கி விட்டன. மஹிந்த அணியினருக்கான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்ற ஊடகங்கள் அப்போதிருந்தே இதற்கான பிரசாரங்களை முன்னெடுக்கத் தொடங்கி விட்டன.

நாடெங்குமிருந்து தங்களது ஆதரவாளர்கள் இலட்சக்கணக்கானோரை செப்டம்பர் 05ம் திகதியன்று கொழும்புக்கு அழைத்து வந்து தலைநகரையே முடக்கப் போவதாக மஹிந்த அணியின் பிரசாரப் பேச்சாளர்கள் மேடைகளிலும், அறிக்கைகள் மூலமாகவும் முழக்கமிடத் தொடங்கினர்.

தங்களது பலத்தை நிரூபித்துக் காட்டுவதும், அரசு மீதான எதிர்ப்பை வெளிப்படுத்துவதுமே அவர்களது நோக்கமாக இருந்தது. மஹிந்த அணியினரின் மிரட்டல்களையிட்டு அரசு அலட்டிக் கொள்ளாத போதிலும், இச்செய்தியானது சாதாரண மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தைத் தோற்றுவித்தமை உண்மை.

அவர்கள் முழக்கமிட்டதைப் பார்க்கின்ற போது, கொழும்பு நகரமே செப்டம்பர் 5ம் திகதியன்று முடங்கிப் போகுமென்றுதான் மக்கள் நினைத்திருந்தனர். இப்பேரணியை மாபெரும் அரசியல் எதிர்ப்பு ஏற்பாடென்றே மக்கள் நம்பினர்.

ஆனால் மக்கள் பதற்றமடைந்தபடி அங்கு நடந்திருப்பது ஜனநாயகச் செயற்பாடு அல்ல!

ஏராளமான வீதிகள் வந்து சந்திக்கின்ற, குறுகலான இடமொன்றில் மக்களை நெருக்கமாகத் திரள வைத்து, பெரும் கூட்டமென பெரிதுபடுத்திக் காட்டியிருக்கிறார்கள் மஹிந்த அணியினர். ஆர்ப்பாட்டத்துக்கு வந்திருந்தோரில் கூடுதலானோர் பாமர மக்கள்; நாட்டில் நடப்பது எதுவென்றே அறியாத அப்பாவி ஜீவன்கள்!

உணவுப் பொதியையும், மதுபானப் போத்தலையும், பணத்தையும் காண்பித்து தங்களை ஏமாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து, வெட்டவெளியில் வெயிலில் காயவைத்து விட்டதாக போதை தலைக்கேறிய நிலையில் ஒருசிலர் வாய்விட்டுக் கூறியதை தாராளமாகவே கேட்க முடிந்தது.

சிறு பதாதைகளை கையில் ஏந்தியபடி பலர் நடனம் ஆடினர்; வீதியில் விழுந்து விழுந்து உருண்டு குத்துக்கரணம் இட்டனர். அத்தனையும் மதுபோதையின் வெளிப்பாடு!

குள்ளமான உயரம் கொண்ட விசேட தேவையுடையோரையும் அழைத்து வந்து கையில் கொடியொன்றைக் கொடுத்து நடனமாட வைத்த பரிதாபக் காட்சியையும் லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் காண முடிந்தது.உடல்வலுவிழந்தோரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை.

அனைத்துக் களேபரங்களும் முடிந்த பின்னர் ஆங்காங்கே சிதறிக் கிடந்த மதுப் போத்தல்கள், பியர் ரின்கள், சிகரட் ஃபில்டர்கள் போன்றவற்றைத் தவிர காட்டுத் தர்பார் நடந்ததற்கு வேறென்ன ஆதாரங்கள் வேண்டும்! கூட்டம் கலைந்த பின்னர் வீதியோரம் ஆங்காங்கே சிலர் போதையில் உறங்கிக் கிடந்தனர்.

லேக்ஹவுஸ் சுற்றுவட்டத்தில் வளர்க்கப்பட்டிருந்த அலங்கார மரக்கன்றுகள் பிடுங்கி வீசப்பட்டுக் கிடந்தன. பூச்சாடிகள் உடைத்து வீசப்பட்டிருந்தன. யுத்தகளம் போல நேற்றுக்காலை அந்த இடம் தென்பட்டது.

ஆர்ப்பாட்டமொன்றை நடத்துவதாக இருந்தால், நடத்த வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு முன்அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவுமே நடக்கவில்லை.

வாரத்தின் நடுப்பகுதியான புதன்கிழமையன்று, எங்கிருந்தோவெல்லாம் மக்களை அழைத்து வந்து, வீதிப் போக்குவரத்தைத் தடை செய்து, சமூக கலாசாரப் பண்புகளையெல்லாம் மீறியபடி தான்தோன்றித்தனமான காரியங்கள் அங்கு நடந்தேறியிருக்கின்றன. சாதாரண மக்களை இம்சைப்படுத்துவது குறித்தோ, பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவிப்பது பற்றியோ பொறுப்பு மிகுந்த அரசியல்வாதிகள் எண்ணிப் பார்க்கவில்லை.

நேற்றுமுன்தினம் நள்ளிரவுக்குப் பின்னரும் கூட அதே இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டு அமர்ந்தபடி அவர்கள் நடத்திய அடாவடித்தனத்தினால் வீதிப் போக்குவரத்தும் தடைப்பட்டு விட்டது.

அரசாங்கத்தைச் சீண்டுவதன் மூலம் தாங்கள் கைது செய்யப்படுவதற்கான சூழலொன்றை உருவாக்கி, மக்கள் மத்தியில் ஆதரவு அலையைப் பெறுவது அவர்களது நோக்கமெனத் தெரிந்தது. மக்களின் பாதுகாப்புக்கு இடைஞ்சல் செய்த குற்றச்சாட்டின் பேரில் இவர்களை பொலிஸார் கைது செய்திருக்க முடியும். எனினும் அரசு பொறுமை காத்து விட்டது. நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ள உச்சகட்ட ஜனநாயக சுதந்திரம் அது.

மஹிந்த அணியினரின் நோக்கம் தெளிவாகப் புரிகின்றது. 2020ம் ஆண்டு தேர்தல் வரை மக்களை பரபரப்பு நிலையில் வைத்திருக்க வேண்டும். மதுவையும் உணவையும் பணத்தையும் கொடுத்து ஆட்களை அழைத்து வந்து கொழும்பை அமர்க்களப்படுத்துவதால் அரசாங்கத்தை மாற்றி விட முடியாதென்பது மஹிந்த அணியினருக்குப் புரியாததல்ல. ஆனாலும் வன்முறை கலாசாரமென்பது அவர்களுக்குப் பழகிப் போனதொன்றாகும்.


Add new comment

Or log in with...