20 ஆவது திருத்தத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை | தினகரன்

20 ஆவது திருத்தத்தில் நாட்டை பிளவுபடுத்தும் யோசனைகள் இல்லை

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டத்தில் நாட்டை பிளவுபடுத்தும் எந்த யோசனைகளும் இல்லையென ஜே.வி.பியின் ஊடகச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனநாயகத்தை மதிக்கும் அரசியல் கட்சிகளும், அதனை விரும்பும் மக்களும் 20ஆவது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது அவசியமென்றும் அவர் வலியுறுத்தினார். ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே விஜித்த ஹேரத் இதனைக் கூறினார். 20ஆவது திருத்தச்சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டு தற்பொழுது அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளோம். அரசாங்கம் இதில் உள்ளடக்க வேண்டிய விடயங்களை ஆறு மாதங்களில் முன்வைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20ஆவது திருத்தச்சட்டமூல வரைபில் நாட்டை பிளவுபடுத்துவதற்கான எந்த யோசனைகளும் முன்வைக்கப்படவில்லை. அதுபோன்ற யோசனைகளை முன்வைப்பதற்கு இடமளிக்கப் போவதுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...