Home » 2024 வரவு செலவுத்திட்டம்: தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தல்

2024 வரவு செலவுத்திட்டம்: தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகளுக்கு தெளிவுபடுத்தல்

by Rizwan Segu Mohideen
November 28, 2023 1:38 pm 0 comment

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்றது.

இதில் தொழிற்சங்க தலைவர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பிரதிநிதிகள், இளைஞர் அமைப்புகள், சிவில் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டனர். 2048 ஆம் ஆண்டுக்குள் இலங்கையை அதிக வருமானம் பெறும் நாடாக மாற்றும் நோக்கில், பல்வேறு நீண்ட கால மறுசீரமைப்புகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க இதன்போது தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதும், உலகப் பொருளாதாரத்துடன் போட்டியிடும் வகையில் இந்நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது பிரதான நோக்கங்களாகும் எனவும், அதனை அடைவதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி நான்கு வருட வேலைத்திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு வழங்குதல், விவசாயிகளுக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்குதல், அரசாங்க உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, உள்நாட்டுத் தொழில்முனைவோரை மேம்படுத்துதல் போன்ற முன்மொழிவுகள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு மீட்டெடுப்பது குறித்தும் இங்கு விரிவாக விளக்கப்பட்டது.

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, 2024 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மற்றும் அதன் மூலம் நாட்டிற்குக் கிடைக்கும் குறுகிய கால மற்றும் நீண்ட கால நன்மைகள் பற்றியும் தெளிபடுத்தினார்.

உணவுப் பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி சுரேன் படகொட, ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க உள்ளிட்ட அதிகாரிகள் பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT