சிரியாவின் இத்லிப் மீது அரச படை தீவிர வான் மற்றும் பீரங்கி தாக்குதல் | தினகரன்

சிரியாவின் இத்லிப் மீது அரச படை தீவிர வான் மற்றும் பீரங்கி தாக்குதல்

சிரிய கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையான இத்லிப் மாகாணம் மீது அரச படை நேற்றும் தாக்குதல்களில் ஈடுபட்டதோடு இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுக்க அங்கிருக்கும் கிளர்ச்சியாளர்கள் மற்றொரு பாலத்தை தகர்த்துள்ளனர்.

சிரிய அரசு தனது கூட்டணியான ஈரான் மற்றும் ரஷ்யாவின் ஆதரவுடன் இத்லிப்பை மீட்கும் படை நடவடிக்கை ஒன்றுக்கு தயாராகி வருகிறது. கடந்த சில வாரங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வான் தாக்குதல்கள் செவ்வாய்க்கிழமை இத்லிப் மீது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச ஆதரவுப் படையினர் நேற்று பீரங்கி தாக்குதல்களை ஆரம்பித்திருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

இதில் கிளர்ச்சியாளர்களின் ஜிஸ்ர் அல் ஷுகுர் மீது கடும் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இத்லிப்பை சூழவிருக்கும் கிராமப் புறங்கள் கடந்த செவ்வாய்க்கிழமை வான் தாக்குதலுக்கு இலக்கானதாக மீட்பு பணியாளர்கள் மற்றும் கிளர்ச்சியாளர் தரப்பு குறிப்பிடுகிறது.

அரச படை மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் முன்னரங்குகளில் துருக்கியின் இராணுவம் சிறிய கண்காணிப்பு சாவடிகளில் நிலைகொண்டிருப்பதோடு இந்த தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்லிப்பில் மோசமான கூட்டுப் படுகொலை இடம்பெறக் கூடும் என்று துருக்கி ஜனாதிபதி ரிசப் தையிப் எர்துவான் எச்சரிக்கை விடுத்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ஈரானில் நடைபெறவிருக்கும் ரஷ்ய மற்றும் ஈரான் தலைவர்களுடனான சந்திப்பில் இத்லிப் தொடர்பில் சாதகமான முடிவு ஒன்று கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இத்லிப் படை நடவடிக்கையால் ஏற்படும் மனிதாபிமான அச்சுறுத்தல் பற்றி எச்சரிக்கைகள் விடப்பட்டுள்ளன. இங்கு கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள 3 மில்லியன் மக்களில் அரைப்பங்கினர் ஏற்கனவே யுத்தத்தால் இடம்பெயர்ந்து வந்தவர்கள் என்று ஐ.நா குறிப்பிட்டுள்ளது.

இத்லிப் கிளர்ச்சியாளர் தரப்பு பிளவுபட்டுள்ளனர். இவர்களில் ஜிஹாத் போராளிகளும் உள்ளனர்.

இத்லிப்பை தீவிரவாதிகளின் கூடாரம் என்று குறிப்பிட்டிருக்கும் ரஷ்யா அது அகற்றப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அரச படையின் முன்னேற்றத்தை தடுக்க இத்லிப்பின் இரண்டு பாலங்கள் கடந்த வாரம் தகர்க்கப்பட்ட நிலையில் நேற்று மற்றொரு பாலமும் கிளர்ச்சியாளர்களால் தகர்க்கப்பட்டிருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனிடையே இத்லிப் மாகாணம் பற்றி ஐ.நா பாதுகாப்புச் சபையில் வரும் வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹாலே குறிப்பிட்டுள்ளார். இரசாயன தாக்குதல்கள் நடத்தக் கூடாது என்றும் அவர் சிரிய அரசை எச்சரித்துள்ளார்.


Add new comment

Or log in with...