ஆசிய கிண்ணம்: பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி | தினகரன்


ஆசிய கிண்ணம்: பாகிஸ்தான் அணியில் ஷஹீன் அப்ரிடி

ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு சர்ப்ராஸ் அஹமட் தலைமையிலான 16 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 18 வயதுடைய வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி பாக். அணியில் இணைக்கப்பட்டிருப்பதோடு, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷான் மசூத்தும் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடருக்கு அழைக்கப்பட்டுள்ளார். அனுபவ கிரிக்கெட் வீரர்களான யாஸிர் ஷாஹ் மற்றும் மொஹமட் ஹபீஸ் இவ் அணியில் இடம்பெறவில்லை.

கடைசியாக சிம்பாப்வேக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்ற எஞ்சிய வீரர்கள் தமது இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளனர். முன்வரிசை துடுப்பாட்ட வீரர்களான பாபர் அசாம், ஹாரிஸ் சொஹைல், இமாம் உல் ஹக் மற்றும் பாகிஸ்தான் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் இரட்டைச் சதம் பெற்ற ஒரே வீரரான பர்கர் சமான் ஆகியோர் துடுப்பாட்டத்தில் வலுச்சேர்க்கவுள்ளனர். இவர்களுடன் அனுபவ வீரர்களான சொஹைப் மலிக் மற்றும் சர்ப்ராஸ் அஹமது ஆகியோரும் அணியில் உள்ளனர்.

வேகப்பந்து வீச்சில் மொஹமட் ஆமிர் முன்னின்று செயற்படவுள்ளதோடு ஹசன் அலி, உஸ்மான் கான் ஷின்வாரி, ஜுனைத் கான் மற்றும் அப்ரிடி ஆகியோர் அவருக்கு உதவியாக இருப்பர். பாஹிம் அஷ்ரப் சகலதுறை வீரராக அணியில் சேர்க்கப்பட்டிருப்பதோடு, ஷஹதாப் கான் சுழற்பந்து வீச்சாளராக செயற்படுவார்.

மத்திய வரிசையில் முக்கிய துடுப்பாட்ட வீரராக தம்மை நிலைநிறுத்திக் கொண்ட ஆசிப், சிம்பாப்வேயில் இடம்பெற்ற முத்தரப்பு ரி20 தொடரில் 41*, 22, 37* மற்றும் 17* ஓட்டங்களை பெற்றதோடு ஒருநாள் போட்டிகளில் தனது கன்னி அரைச்சதத்தை பெற்று தனது இடத்தை அணியில் தக்கவைத்துக் கொண்டார்.

மசூத், 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக தனது கன்னி போட்டியில் ஆடியது தொடக்கம் இதுவரை 12 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளார். எனினும், ஏ நிலை போட்டிகளில் தனது திறமையை நிரூபித்ததை அடுத்தே முதல்முறை பாகிஸ்தான் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 28 வயதான மசூத் கடைசியாக ஆடிய தனது 10 இன்னிங்ஸ்களிலும் மூன்று சதங்கள் மற்றும் ஐந்து அரைச்சதங்களை பெற்றதே பாக். அணிக்கு அழைக்கப்பட முக்கிய காரணமாகும்.

இந்த ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஐ.சிசி உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி சார்பில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய அப்ரிடி, மேற்கிந்திய தீவுகளுடனான உள்நாட்டு ரி-20 தொடரில் இணைக்கப்பட்டிருந்தார். தற்போது அவருக்கு தனது கன்னி ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பாகிஸ்தான் தேர்வுக் குழுத் தலைவர் இஹ்சான் மானி இளைஞர்கள் மீது அதிக கவனம் செலுத்தியே மூத்த வீரர்களான ஹபீஸ் மற்றும் ஷாஹ்வை குழாத்தில் இருந்து நீக்கியுள்ளார். ஹபீஸுக்கு சிம்பாப்வே சுற்றுப் பயணம் ஏமாற்றம் தந்தது. அந்த தொடரில் அவர் இரண்டு ரி-20 இன்னிங்ஸ்களிலும் ஏழு மற்றும் பூஜ்ய ஓட்டங்களையே பெற்றதோடு, ஷாஹ் இரு ஒருநாள் போட்டிகளிலும் பந்துவீச்சில் 1/10 மற்றும் 0/31 என சோபிக்கத் தவறினார்.

ஆசிய கிண்ண தகுதிகாண் போட்டித் தொடர் மூலம் தகுதியை பெறும் அணியுடன் வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி பாகிஸ்தான் தனது முதல் ஆசிய கிண்ண போட்டியில் ஆடவுள்ளது.

பாகிஸ்தான் அணி

சர்ப்ராஸ் அஹமட் (தலைவர்), பர்கர் சமான், சொஹைப் மலிக், மொஹமட் ஆமிர், ஷதாப் கான், இமாமுல் ஹக், ஷான் மசூத், பாபர் அஸாம், ஆசிப் அலி, ஹரிஸ் சொஹைல், மொஹமட் நவாஸ், பாஹிம் அஷ்ரப், ஹசன் அலி, ஜுனைத் கான், உஸ்மான் ஷின்வாரி, ஷஹீன் அப்ரிடி


Add new comment

Or log in with...