கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி | தினகரன்

கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி

கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளின் பெறுமதி ரூபா 150 கோடி-Seized Tramadol's Worth is Rs. 1500 million

 

கொழும்பு துறைமுகத்தில் கைப்பற்றப்பட்ட ட்ரமடோல் போதை மாத்திரைகளின் பெறுமதி சுமார் ரூபா 150 கோடி (ரூபா 1,500 மில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (05) பிற்பகல், பொலிஸ் போதைப்பொருள் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய, கொள்கலன் ஒன்றிலிருந்து சுமார் ஒன்றரை கோடிக்கும் அதிகமான (15,050,170) அதி செறிவான போதை மாத்திரைகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

குறித்த மாத்திரைகளின் மொத்த நிறை, 6,040 கிலோ கிராம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அதன் அடிப்படையில், இதுவரை இலங்கையில் மீட்கப்பட்ட ட்ரமடோல் மாத்திரைகளுடன் ஒப்பிடுகையில், இது மிக அதிகமாகும் என அவர் தெரிவித்தார்.

இந்தியாவிலிருந்து லிபியாவுக்கு கொண்டு செல்வதற்காக, வைக்கப்பட்டிருந்த, போதைப்பொருளைக் கொண்ட குறித்த கொள்கலன், கடந்த ஓகஸ்ட் மாதத்தின் இறுதிப் பகுதியில், கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

குறித்த மாத்திரைகள் தொடர்பில், நேற்று (05) பிற்பகல் 2.00 மணி முதல் இன்று (06) பிற்பகல் 2.00 மணி வரை மேற்கொண்ட சோதனையின் அடிப்படையில், துப்புரவாக்கும் பொருளை கொண்டு செல்லும் வகையில், துப்புரவாக்கும் பொருள்களுடன் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் குறித்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாதிரைகளின் உற்பத்தி நிறுவனம் தொடர்பில் எவ்வித தகவலும் குறிப்பிடப்படாத நிலையில், தற்போது அவை சுங்க திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக ருவன் குணசேகர தெரிவித்தார்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டு அதிகாரசபை அதிகாரிகளின் உதவியுடன் மேலதிக விசாரணை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதோடு, இந்த நீதிமன்ற சாட்சியத்தை, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
 


Add new comment

Or log in with...