தேகாரோக்கியம் பேணும் பாரம்பரிய உணவு முறை | தினகரன்

தேகாரோக்கியம் பேணும் பாரம்பரிய உணவு முறை

கோதுமையைத் தவிர்த்து அரிசிக்கு திரும்புவதே ஆரோக்கியத்துக்கு வழி

எமது நாட்டின் பாரம்பரிய மற்றும் பிரதான உணவு அரிசி ஆகும். கி.மு. 800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இங்கு நெல் பயிரிடப்பட்டிருக்கின்றது. தாய்லாந்தில் கி.மு 4 ஆயிரம் ஆண்டளவில் பயிரிடப்பட்ட நெல் இன்று எமது மக்களின் பிரதான உணவாக இருந்து வருகின்றது. அரிசி உணவு வகைகளுக்குப் பதிலாக கோதுமை உணவுகளை மக்கள் நாடியிருப்பது விவசாய நாட்டிற்கு பொருத்தமானதாக அமையாது.

ஆசியப் பிராந்திய நாடுகளில் சிறந்த விவசாய நாடுகளில் மிக முக்கிய இடத்தில் எமது நாடு இருக்கின்றது. பராக்கிரமபாகு மன்னன் பராக்கிரம சமுத்திரத்தை நிர்மாணித்த காலத்துடன் விவசாய உற்பத்தி அதாவது நெல் விவசாயம் பாரிய அபிவிருத்தி கண்டது. இதேபோன்று அம்பாறை சேனநாயக்க சமுத்திர நிர்மாணத்துடனும், மகாவலி அபிவிருத்தித் திட்டத்துடனும் விவசாயம் அபரிமிதமான வளர்ச்சி கண்டதுடன் நாட்டில் வேலையில்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டது எனலாம். பராக்கிரமபாகு மன்னன் காலத்தில் எமது நாடு 'உணவுக் களஞ்சியம்' என அழைக்கப்பட்டது.

தற்போது எமது நாட்டில் அதிகப்படியான அரிசி (நெல்) உற்பத்தியாவதாகவும், கோதுமைக்கு விஷேட வரி அறவிடப்படவுள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.

இவரது அறிவிப்பானது நாட்டின் பொருளாதார நலன் சார்ந்ததாக இருக்கின்ற அதேநேரம் மக்கள் அரிசி உணவு வகைகளுக்கு மாறவேண்டும் என்பதே பிரதான கருத்தாக கொள்ள முடியும். இவ்வாறான நடவடிக்கைகளை எமது நாட்டின் விவசாயத்துறை மேலும் வளர்ந்து செல்ல வழிவகுக்கும்.

நாட்டின் விவசாயச் செய்கையில் அதிக பங்களிப்பினை குருநாகல், பொலன்னறுவை மற்றும் வடகிழக்கு பிரதேசங்கள் வழங்குகின்றன. மாவட்ட அடிப்படையில் பார்ப்போமாக இருந்தால் நெற்பயிர்ச் செய்கையில் குருநாகல் மாவட்டமே முதலிடத்தில் காணப்படுகின்றது. ஆனாலும் குறைந்தளவு நிலப் பிரதேசத்தில் கூடுதல் விளைச்சலைப் பெறும் மாவட்டமாக மன்னார் காணப்படுவதாக விவசாயத் தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு அடுத்தபடியாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் அமைந்துள்ளன.

விவசாய உற்பத்திக்கு மழைவீழ்ச்சி, சூரிய ஒளி, மனிதவலு, வேலையாட்கள், பாரம்பரிய விதிமுறைகள், விஞ்ஞான பொறிமுறை, தற்காலத்திற்கு ஏற்புடையதான பயிர் பாதுகாப்பு அறுவடை, தானிய சேமிப்பு, சந்தைப்படுத்தல் போன்ற பிரதான காரணங்கள் துணை செய்கின்றன.

அரிசிச் சோறு மனித உடலுக்கு போஷாக்கானது என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் சிவப்பு அரிசி பாவனையினை அதிகரிக்க வேண்டுமென சுகாதாரத் துறை பரிந்துரை செய்கின்றது. சிவப்பு அரிசியில் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் அல்லது வராமல் பாதுகாக்கும் வீரியம் அதிகம் இருப்பதாகவும் இதனால் தவிடு நீக்காத சிவப்பு அரிசி சோறு அல்லது அரிமா பண்டங்களை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் சுகாதாரப் பிரிவு பரிந்துரை செய்கின்றது.

இதேநேரம், எமது முன்னோர்கள் அரிசிச் சோற்றையே பிரதான உணவாக மூன்று வேளைகளிலும் பயன்படுத்தியுள்ளனர். கிராமப்புறங்களில் மண்பானைகளில் சமைக்கப்பட்ட உணவில் இரவில் நீரை ஊற்றி காலையில் தயிர் அல்லது தேங்காய்ப்பூ, பச்சை மிளகாய் கலந்து காலையில் சாப்பிடுவார்கள். அதாவது பழைய சோற்றில் நீருற்றி கரைத்து உணவினை பூர்த்தி செய்துள்ளனர். இதே உணவே விவசாயிகளின் பிரதான போஷாக்கான உணவாக இருந்துள்ளது. அவர்கள் நல்ல உழைப்பாளிகளாக இருந்ததற்கு நீருணவே காரணம் எனலாம்.

இன்று நாம் கடைகளில் கோதுமைப் பண்டங்களை வாங்கிச் சாப்பிடுகின்றோம். ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பின்பே எமது நாளாந்த உணவில் கோதுமைமா உணவு சேர்ந்துள்ளது எனலாம். மேற்கத்திய பண்டங்களை கீ​ைழத்தேய நாடுகளுக்கு விற்பனை செய்து பணம் சம்பாதிக்கும் யுத்தியினை அவர்கள் கையாண்டுள்ளனர் எனலாம்.

இன்று நாம் இந்த உணவிற்கு அடிமையாகி விட்டோம். பாண் அறிமுகமாகியதும் வெதுப்பகங்கள் தோன்றியதும் அந்நியர்களின் வருகைக்குப் பின்பு ஆகும்.

எமது சமுதாயத்தின் உணவு தேவை பெரும்பாலும் கோதுமைக்கு சென்று கொண்டிருக்கின்றது. இது தவிர்க்கப்படும் போதுதான் நாட்டின் விவசாயத்துறை மறுமலர்ச்சி காணும். அதேநேரம் கிராமிய பொருளாதாரத்​ைதயும் மேலிடவைக்க முடியம். பாரம்பரிய உணவுப் பழக்கத்திற்கு எமது இளைய சந்ததியினரை கொண்டு வரும் பெரும் பணியினை நாம் செய்யவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். எதிர்கால சந்ததியினரின் தேக ஆரோக்கியம் பேணப்படுத்தல் அவசியமாகும்.

 

ஆர். நடராஜன்

(பனங்காடு தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...