களியாட்டமாக மாறிய எதிரணியின் ஆர்ப்பாட்டம் | தினகரன்

களியாட்டமாக மாறிய எதிரணியின் ஆர்ப்பாட்டம்

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் “ஜனபலய” ஆர்ப்பாட்டப் பேரணி முதலில் கோஷத்துடனும் ஆத்திரமூட்டும் வகையிலும் ஆரம்பித்தாலும் கொழும்பு கோட்டையை நெருங்கிய பின்னர் களியாட்ட சூழலுக்கு மாறி எந்தவித அரசியல் பேச்சும் இல்லாமல் முடிவுற்றது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட எம்.பியும் முன்னாள் முதல் மகனுமான நாமல் ராஜபக்ஷவின் ஆரம்ப செயற்பாடாக நேற்று (05) இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்றுவட்டத் தில் நேற்று சுமார் 4 மணியளவில் ஆயிரக்கணக்கில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக் காரர்கள், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை நெருங்கியதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ஷவும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் இணைந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டம் இறுதியாக எங்கே கூடப் போகிறது என்பது மிகவும் ரகசியமாகவே நேற்று பகல் வரை இருந்தது. எனினும் கொழும்பு கோட்டைக்கு வரும் வரை சரியான தலைமைத்துவம் இல்லாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் எந்தப் பக்கம் செல்வதென்று தடுமாறியதைக் காணமுடிந்தது.

நிறைந்த மது போதையுடன் கூத்தாடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐஸ்பழங்களையும் அன்னாசித் துண்டுகளையும் சுவைத்துக்கொண்டு வீதிகளில் துள்ளிசையுடன் துள்ளித்திரிந்தனர் .

பாடசாலைக் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றும் மாணவர்களின் மன நிலையிலேயே இவர்களைக் காணமுடிந்தது. அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைப் போல் எவரும் காணப்படவில்லை.

மாலை ஏழு மணியானபோது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபயவின் பேச்சாளர் மிலிந்த ராஜபக்ஷ ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்ந்து தத்தமது இடங்களில் தங்கியிருப்பதா அல்லது கலைந்து செல்வதா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும் என்று கூறியதும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு திண்டாட்ட நிலை ஏற்பட்டது.

தமது ஆர்ப்பாட்டப் பேரணிக்கு தகுந்த வகையில் பதில்தர அரசாங்கம் தவறுமேயானால் இன்று வியாழக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கப் போவதாக கூட்டு எதிரணியின் தலைவர்கள் முன்னர் தமது ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் உள்ள பல அலுவலகங்களில் ஊழியர்கள் நேர காலத்துடன் தமது வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அதேநேரம் பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புவதையும் கூடியவரை தவிர்த்துக்கொண்டனர். ஆர்ப்பாட்டம் தொடங்கிவிட்டால் பிள்ளைகளை பாடசாலைகளில் இருந்து அழைத்து வருவதில் சிரமம் ஏற்படலாம் என்பதாலேயே இவ்வாறு பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்பாமல் இருந்தனர். இதன் காரணமாக ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு வீதிகளில் இலகுவாக செல்ல வழியேற்பட்டது. இதனால் கொழும்பு கோட்டை தவிர்ந்த ஏனைய இடங்களில் பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை கூட்டம் குறைந்திருந்தது.

இதேநேரம் மதுபோதையில் இருந்த 81 ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரினால் ஆஸ்பத்திரிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டதாக பிரதி அமைச்சர் அஜித் பி. பெரேரா கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு மத்தியில் இடைக்கிடையே விமல் வீரவன்ச எம்.பி உரையாற்றினார். முன்னாள் ஜனாதிபதியோ முன்னாள் பாதுகாப்பு செயலாளரோ எந்த உரையையும் ஆற்றவில்லை. ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்த நாமல் ராஜபக்ஷவும் உரையாற்றவில்லை. ஆயிரக்கணக்கான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இதனால் இரவு எட்டு மணியளவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றதைக் காணமுடிந்தது. ஆர்ப்பாட்டக்காரர்கள் இருந்த இடங்களுக்கு அருகே கலகமடக்கும் பொலிஸாரோ, விசேட அதிரடிப் படையினரோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(நமது நிருபர்)

 


Add new comment

Or log in with...