5 நிமிடத்தில் மூன்று சட்டங்கள் நிறைவேற்றம் | தினகரன்

5 நிமிடத்தில் மூன்று சட்டங்கள் நிறைவேற்றம்

ஒன்றிணைந்த எதிரணியில் ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் மூன்று சட்டமூலங்கள் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன. வெறும் 5 நிமிடங்களில் இவை நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றம் இன்று (05) வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கான சம்பளம் வழங்குவது தொடர்பான கட்டளை, இன, மத ஒற்றுமையை உறுதிப்படுத்துவது தொடர்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்குப் பரிந்துரை செய்வதற்காகத் தெரிவுக்குழு அமைப்பதற்கான தீர்மானம் மற்றும் இலங்கை ஔடதங்கள் சங்க கூட்டிணைத்தல் சட்டமூலம் என்பன ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் நேற்று பிற்பகல் ஒரு மணிக்குக் கூடியது. தினப்பணிகளைத் தொடர்ந்து ஒன்றிணைந்த எதிரணியின் இன்றைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் சபை நடுவில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கான சம்பளம் வழங்குவது தொடர்பான கட்டளை மீது பிரதமர் உரையாற்றினார்.

ஆனால், அவரின் உரைக்கு இடையூறாக எதிரணியினர் கோஷம் எழுப்பிய நிலையில் மூன்று சட்ட மூலங்கள் மீதும் வாக்கெடுப்பு நடத்துமாறு பிரதமர் கோரினார். இதனையடுத்து ஆளும் தரப்பு எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்ததையடுத்து 3 சட்ட மூலங்களும் நிறைவேற்றப்பட்டன.

அதனைத் தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்றத்தை இன்று வரை ஒத்திவைத்தார்.

இதேவேளை ஒன்றிணைந்த எதிரணியின் கொழும்புக்கு மக்கள் சக்தி எதிர்ப்பு போராட்டம் தொடர்பில் நேற்று நடத்தப்படவிருந்த ஒத்திவைப்பு பிரேரணை நடைபெறவில்லை.

பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சபை நடுவில் திரண்டிருந்த ஒன்றிணைந்த எதிரணி எம்.பிக்கள் சற்று நேரத்தில் கலைந்து சென்றார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாராளுமன்றத்திற்கு வருகை தந்திருந்த ​போதும் அவர் சபைக்குள் வருகை தரவோ எதிரணி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 5 நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் மூன்று சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

 


Add new comment

Or log in with...