மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்க புதிதாக 150,000 வாக்காளர்கள் | தினகரன்

மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்க புதிதாக 150,000 வாக்காளர்கள்

 
2018ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் படியே தேர்தல்

2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பின் படி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்க புதிதாக 1,50,000 வாக்காளர்கள் தகுதி பெற்றிருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் (சட்டம் மற்றும் விசாரணை) எம்.எம்.மொஹமட் தெரிவித்தார். இதற்கமைய மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை ஏறத்தாள 16 மில்லியனாக அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஒக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் 2018ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் பட்டியல் இடாப்பை வெளியிட எதிர்பார்த்திருப்பதாகவும், இந்தப் பட்டியலை இறுதிப்படுத்தும் செயற்பாடுகளில் ஆணைக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வாக்காளர் பட்டியல் தொடர்பான தற்காலிக பட்டியல் கடந்த ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பார்வையிடும் வசதி வழங்கப்பட்டிருந்ததுடன், ஏதாவது மாற்றங்கள் செய்யவேண்டியிருப்பின் அதனைத் தெரியப்படுத்துவதற்கு 28 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டிருந்தன.

இந்த விடயத்தில் ஆர்வமுள்ள வாக்காளர்கள் தமது பெயர்களை இணையத்தளத்தில் பரிசீலிக்க முடியும். தற்காலிக வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் உள்ளடங்காவிட்டால் அது தொடர்பில் ஆணைக்குழுவில் மேன்முறையீடு செய்ய முடியும். முறைப்பாடு கிடைத்ததும் ஆணைக்குழு அது பற்றி ஆராயும். செப்டெம்பர் 6ஆம் திகதி வரையில் வாக்காளர்கள் முறையீடுகளை மேற்கொள்ள முடியும் என்றும் மொஹமட் மேலும் தெரிவித்தார்.

பதினெட்டு வயதைப் பூர்த்திசெய்தவர்களே பெரும்பாலும் புதிதாக வாக்களார் பட்டியலில் இணைந்துள்ளனர். இதனைவிடவும், வெளிநாடுகளில் வசித்து மீண்டும் நாடு திரும்பியவர்கள், தண்டனை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டவர்களும் இதில் உள்ளடங்கியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
 
 

Add new comment

Or log in with...