அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கொழும்புக்கு திரண்டு வருவதைத் தடுக்க அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி நேற்று பாராளுமன்றத்தில் குற்றஞ்சாட்டியது. பொலிஸாரினூடாக நீதிமன்ற தடை உத்தரவு பெற எடுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாக ஒன்றிணைந்த எதிரணி தலைவர் தினேஷ் குணவர்தன எம்.பி தெரிவித்தார். 27/2 நிலையியற் கட்டளையின் கீழ் பிரதமரிடம் கேள்வி எழுப்பிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் குறிப்பிட்ட தினேஷ் குணவர்தன,
மக்களின் போக்குவரத்திற்குத் தேவையான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், செப்டம்பர் 1 முதல் ஒரு வார காலத்திற்கு தனியார் பஸ்களை பொதுமக்களின் தேவைகளுக்கு வழங்காமல் அரசாங்கம் தடுத்துள்ளது. இது ஜனநாயக விரோத செயலாகும்.
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத மற்றும் மக்கள் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை கொழும்புக்குக் கொண்டுவர இருக்கிறோம். ஆனால், பொலிஸாரைப் பயன்படுத்தி நீதிமன்றத் தடைஉத்தரவைப் பெற்று மக்கள் திரண்டுவருவதை தடுக்க அரசாங்கம் தயாராகிறது. மக்களுக்கு அரசாங்கம் பயந்து விட்டது.
பாராளுமன்றத்தை நடத்த முடியாது என சபாநாயகர் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். சபாநாயகர் கூறாமல் எப்படி வெளிக்கடை பொலிஸ் பொறுப்பதிகாரி நீதிமன்றம் சென்றார்.
வெளிக்கடை மற்றும் கருவாத்தோட்ட பொலிஸார் நீதிமன்றம் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துவதைத் தடுக்க விடுத்த உத்தரவு நிராகரிக்கப்பட்டுள்ளது. சபையில் பொய்த் தகவல் முன்வைத்த சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவி விலக வேண்டும்.
ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்
Add new comment