ஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி | தினகரன்


ஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி

ஒன். எதிரணியின் பேரணி தொடர்பில் சபையில் அமளிதுமளி-Parliament Adjourned-JO Rally


பாராளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு
பேரணிக்கு எதிரான கோரிக்கை நீதிமன்றம் நிராகரிப்பு

ஒன்றிணைந்த எதிரணியினரால் நாளைய தினம் (05) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'ஜன பலய கொலம்பட்ட' (மக்கள் பலம் கொழும்பு நோக்கி) எனும் பேரணி தொடர்பில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமளிதுமளி காரணமாக, சபை அமர்வுகள் நாளை வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியினர் நாளை (05) கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள எதிர்ப்புப் பேரணி தொடர்பில் உத்தரவொன்றை வழங்குமாறு பொலிசாரால் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு கிடைத்துள்ள புலனாய்வுத் தகவலுக்கு அமைய, கொழும்பு மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தை, பேரணியில் ஈடுபடுவோர் சுற்றிவளைக்கப்போவதாக தெரிவித்து, பேரணிக்கு எதிராக உத்தரவொன்றை வழங்குமாறு, கறுவாத்தோட்ட பொலிசார் முன்வைத்த கோரிக்கையை, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அது தவிர, வெலிக்கடை மற்றும் கொள்ளுபிட்டி பொலிசார் நீதிமன்றில் விடுத்த கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (04) பாராளுமன்றத்தில் ஒன்றிணைந்த எதிரணியின் தலைவரான தினேஷ் குணவர்தன எம்.பி, 27/2 நிளையியற்கட்டளையின் கீழ், நாளை (05) இடம்பெறவுள்ள பேரணி தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், பிரதமரிடம் கேள்வி எழுப்பினார்.

நல்லாட்சி அரசாங்கம் வழங்கியுள்ள முழுமையான சுதந்திரத்தை பயன்படுத்தி இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்த எந்த இடையூறும் இருக்காது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதன்போது அவருக்கு பதிலளித்தார்.

இதன்போது ஆளும் கட்சி மற்றும் எதிரணி எம்.பிக்களிடையே ஏற்பட்ட வாத பிரதிவாதங்களைத் தொடர்ந்து, எம்.பிக்கள் சபையின் நடுவில் வந்து கூச்சல் குழப்பம் செய்தனர்.

இதனையடுத்து, சபாயநாயகர் பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இதேவேளை, ஒன்றிணைந்த எதிரணியின் கூச்சல் குழப்பத்திற்கு மத்தியில் மூன்று  சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் இன்று (04) நிறைவேற்றப்பட்டன.

வெறும் 5 நிமிடங்களில் இவை நிறைவேற்றப்பட்ட பின் பாராளுமன்றம் நாளை (05) பிற்பகல் 1.00 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதன் பிரகாரம் காணமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் அங்கத்தவர்களுக்கான சம்பளம் வழங்குவது தொடர்பான கட்டளை ,இன மத ஒற்றுமையை உறுதிப்படுத்துவது தொடர்ப்பில் ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு பரிந்துரை செய்வதற்கான தெரிவுக்குழு  அமைப்பதற்கான தீர்மானம் மற்றும்இலங்கை ஔடதங்கள் சங்க கூட்டிணைத்தல் சட்டமூலம்  என்பன ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

(ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்)

 


Add new comment

Or log in with...