ஆப்கானின் பலம்மிக்க ஹக்கானி வலையமைப்பின் நிறுவனர் மரணம் | தினகரன்

ஆப்கானின் பலம்மிக்க ஹக்கானி வலையமைப்பின் நிறுவனர் மரணம்

அப்கானிஸ்தானின் அதிக செல்வாக்கு கொண்டதும் அச்சுறுத்தும் ஆயுதக் குழுவுமான ஹக்கானி வலையமைப்பின் தலைவர் ஜலாலுத்தீன் ஹக்கானி நீண்ட காலம் சுகவீனமுற்றிருந்த நிலையில் மரணமடைந்திருப்பதாக ஆப்கான் தலிபான்கள் நேற்று அறிவித்துள்ளனர்.

ஜலாலுத்தீன் ஹக்கானி சுகவீனம் காரணமாக கடந்த பல ஆண்டுகளாக படுத்தபடுக்கையில் இருந்ததாக தலிபான்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

“மேன்மைக்குரிய ஹக்கானி சஹாப் உடலால் எம்மை விட்டு பிரிந்தபோதும், அவரது சிந்தனை மற்றும் செயல் நுட்பம் உலகம் இருக்கும் வரை நீடிக்கும்” என்று தலிபான்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் முக்கியமான புள்ளியாக பார்க்கப்படும் ஜலாலுத்தீன் ஹக்கானி தலிபான் மற்றும் அல் கொய்தாவுடன் நெருக்கமான உறவை கொண்டுள்ளார். 2001 ஆம் ஆண்டு தொடக்கம் அவரது மகனே அந்த வலையமைப்பை இயக்கி வருவதாக நம்பப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் மற்றும் நேட்டோ படைகள் மீதான அண்மைய ஆண்டுகளில் இடம்பெற்ற ஒருங்கிணைந்த தாக்குதலின் பின்னணியில் ஹக்கானி வலையமைப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

எனினும் ஹக்கானி மரணித்த திகதி மற்றும் இடம் பற்றிய விபரங்கள் தலிபான்களின் அறிவிப்பில் கூறப்படவில்லை.

“அவர் தனது இளமைக் காலத்தில் அல்லாஹ்வின் பாதையில் கடுமையாக உழைத்தார். நோய்வாய்ப்பட்ட அவரது பிந்திய ஆண்டுகளிலும் சகிப்புடன் இருந்தார்” என்று ஆப்கான் தலிபான்கள் குறிப்பட்டுள்ளனர்.

ஹக்கானி மரணித்துவிட்டதாக பல ஆண்டுகளாக வதந்திகள் பரவி வந்தன.

1980களில் ஆப்கானிஸ்தானை சோவியட் படை ஆக்கிரமித்தபோது ஒரு கெரில்லா தலைவராக இருந்த ஜலாலுத்தீன் ஹக்கானி போராடினார். அந்தக் காலத்தில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவுக்கு அவர் ஒரு மிகப்பெரிய சொத்து என்று அமெரிக்க அதிகாரிகளும் ஒப்புக்கொண்டிருந்தனர்.

எனினும் 1996 ஆம் ஆண்டு ஆப்கானில் ஆட்சிக்கு வந்த தலிபான்களுடன் அவர் ஒன்றிணைந்தார்.

2001 ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அமெரிக்காவின் ஆப்கான் படையெடுப்பை அடுத்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கான் எல்லையில் உள்ள பழங்குடி பகுதியில் இயங்கிய பல்வேறு போராட்டக் குழுக்களில் ஒன்றாக ஹக்கானி வலையமைப்பும் இருந்தது.

இந்தக் குழு பாகிஸ்தானில் இருந்தே பெரும்பாலும் இயங்குவதாக குற்றம்சாட்டப்படுவதோடு ஆப்கானில் இடம்பெற்ற பல பயங்கர தாக்குதல்களுக்கு இந்த குழு மீது குற்றம்சாட்டப்படுகிறது.


Add new comment

Or log in with...