சிரிய அரசு மற்றும் கூட்டணி மீது அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை | தினகரன்

சிரிய அரசு மற்றும் கூட்டணி மீது அமெரிக்க ஜனாதிபதி எச்சரிக்கை

சிரியாவின் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு இத்லிப் மாகாணத்தின் மீதான கண்மூடித்தனமான தாக்குதலுக்கு எதிராக சிரிய அரசு மற்றும் அதன் கூட்டணியான ரஷ்யா மற்றும் ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது ஒரு கடுமையான மனிதாபிமான தவறு என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருக்கும் டிரம்ப், பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கடைசி கோட்டையான இத்லிப் மாகாணத்தின் மீது சிரிய அரச படை பாரிய தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வருகிறது.

அந்த மாகாணத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிக்கி இருக்கும் நிலையில் அரச படையின் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தும் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.

சிரிய அரசு அல்லது அதன் கூட்டணியின் எந்தவொரு இரசாயன தாக்குதலுக்கும் அமெரிக்கா பதில் நடவடிக்கை எடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்களம் திங்களன்று எச்சரிக்கை விடுத்தது.

சிரியாவின் பெரும் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் தோற்கடிக்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாணமான இத்லிப்பில் இடம்பெறும் யுத்தம் அந்நாட்டு சிவில் யுத்தத்தில் கடைசியானதும் மிகப் பெரியதுமான போராக மாற வாய்ப்பு உள்ளது.

சுமார் 30,000 அல் நுஸ்ரா மற்றும் அல் கொய்தா ஜிஹாத் போராளிகள் இத்லிப்பில் நிலைகொண்டிருப்பதாக ஐ.நா கணித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் இங்கு படை நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக அரச தரப்பை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இத்லிப்பில் இருந்து ‘தீவிரவாதிகள்’ முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் மனிதர்களை கேடயமாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டி இருந்தார்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் 400,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் மக்கள் தொகையில் பாதி அளவானவர்கள் தமது வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சிரியாவின் ஏனைய பகுதிகளில் தோற்கடிக்கப்படும் கிளர்ச்சியாளர்களுக்கு இத்லிப் மாகாணம் அடைக்கல பூமியாகவே இருந்து வருகிறது. இங்கு தோற்கடிக்கப்பட்டால் நாட்டில் அடைக்கலம் தேட இடமில்லை என்ற நிலையில் எதிர்பார்க்கப்படும் யுத்தம் தீவிரமானதாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.


Add new comment

Or log in with...