Home » பிறரது நல்வாழ்வுக்காக உழைக்கும் சிறந்த நன்மக்களாக வாழ்வோம்

பிறரது நல்வாழ்வுக்காக உழைக்கும் சிறந்த நன்மக்களாக வாழ்வோம்

by Rizwan Segu Mohideen
November 28, 2023 1:15 pm 0 comment

கத்தோலிக்கத் திருச்சபை கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடியது. அன்றைய வாசகங்கள் கிறிஸ்து என்னும் ஒப்புயர்வற்ற அரசர் எப்படி தனது மக்கள் மீது அன்பும் நீதியும் நேர்மையும் உண்மையும் கொண்டு என்றென்றும் ஆட்சி செலுத்துவார் என்பதை நமக்கு விபரிக்கின்றன. நமது உலக வரலாற்றைப் புரட்டிப்பார்த்தால் இம்மண்ணில் வீழ்ந்த அரசர்கள் யார் யார் வாழ்ந்த அரசர்கள் யார் யார் என்ற உண்மை தெரியவரும்.

அதாவது, நீதி நேர்மையற்று, ஆணவப்போக்காலும், அதிகாரத் திமிராலும் ஆட்சிசெய்த மன்னர்களின் சாம்ராஜ்யங்கள் சரிந்து போயின என்பதையும் அன்பும், அக்கறையும், நீதியும் நேர்மையும் கொண்டு ஒழுகிய மன்னர்களின் சாம்ராஜ்யங்கள் எப்படி சாயாமல் சரித்திரம் படைத்தன என்பதையும் நாம் அறிய முடியும்.

ஞாயிறு முதல் வாசகத்தில் ஓர் அரசர் என்பவர் எப்படி மக்களை ஆள வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுவது மட்டுமல்லாமல் அதனை செயல்படுத்தியும் காட்டுகின்றார் கடவுள் என்பதைக் காண்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் வரும் ‘மக்களினத்தார் அனைவருக்கும் தீர்ப்பு’ என்ற தலைப்பில் அமைந்துள்ள உவமை மத்தேயு நற்செய்தியில் மட்டுமே கூறப்பட்டுள்ளது. அந்த உவமை இயேசுவின் இறையியல் பார்வையைத் தெள்ளத் தெளிவாக நமக்கு எடுத்துக்காட்டுகின்றது.

இயேசு என்னும் மானிடமகன் துன்புறும் மக்களின் சார்பாக செயல்படக் கூடியவர். கடவுள் அவருக்கு அரசுரிமை வழங்குவார். இதன் காரணமாக, மனிதகுலம் அனைத்தும் தீர்ப்புக்கு உள்ளாகும்

(தானி 7:13-14, 26-27: யோவா 5:27-29) என்பதையே இன்றைய உவமை நமக்கு விளக்குகின்றது.

மக்களினத்தார் அனைவரும் செம்மறியாடுகள் வெள்ளாடுகள் என இருபிரிவுகளாகப் பிரிக்கப்படுவர். செம்மறியாடுகள் மேய்ப்பருக்கு (அரசருக்கு) கட்டுப்பட்டு மேய்ச்சலுக்குப் போய்த் திரும்பும் பண்புகள் கொண்டவை.

இந்தக் கட்டுப்பாடும், கீழ்ப்படிதலும் அவற்றிக்கு நலமான வாழ்வை வழங்கும். இதன்காரணமாக இச் செம்மறியாடுகள் தான்பெற்ற நலவாழ்வைப் பிறருக்கும் வழங்கும். அதாவது, தாகம் தீர்த்தல், உணவளித்தல், நோயாளர்களைக் கவனித்தல், சிறை என்னும் அடிமைத்தளையில் இருப்போரைச் சந்தித்தல் ஆகிய நற்செயல்களை ஆற்றுவர்.

இதற்குப் பயனாக, ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள்ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ என உறுதியாகஉங்களுக்குச் சொல்லுகிறேன்’ என்று என்றுமுள்ள அரசரால் புகழப்பட்டு, நிலைவாழ்வை உரிமைப்பேற்றாகப் பெறுவர்.

ஆனால் வெள்ளாடுகள், ஆயருக்குக் கட்டுப்படாமல், தன்னிச்சையாகச் செயல்படும். பேராசையும், போட்டியும் பொறாமையும் கொண்டதாக விளங்கும். இவைகள் தங்களுக்குக் கிடைக்கும் நல்வாழ்வை நாசமாக்கிவிடும். அதாவது, தாகம் தீர்த்தல், உணவளித்தல், நோயாளர்களைக் கவனித்தல், சிறை என்னும் அடிமைத்தளையில் இருப்போரைச் சந்தித்தல் ஆகிய நற்செயல்களில் ஈடுபடாது. அதன்விளைவாக, ‘மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை’ என்று என்றுமுள்ள அரசரால் கூறப்பட்டு, அவை முடிவில்லாத தண்டனையைப் பெறும் என்பது இந்த உவமை வழியாக நமக்கு விளக்கப்படுகிறது.

இந்த உவமையின் அடிப்படையில்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில், “ஒவ்வொருவரும்அவரவர் முறை வரும்போது உயிர்பெறுவர். கிறிஸ்துவே முதலில் உயிர்பெற்றார்.அடுத்து, கிறிஸ்துவின் வருகையின்போது அவரைச் சார்ந்தோர் உயிர் பெறுவர்.அதன்பின்னர் முடிவு வரும். அப்போது கிறிஸ்து ஆட்சியாளர், அதிகாரம்செலுத்துவோர், வலிமையுடையோர் ஆகிய அனைவரையும் அழித்துவிட்டு, தந்தையாகியகடவுளிடம் ஆட்சியைஒப்படைப்பார்” என்று கூறுகின்றார் புனித பவுலடியார்.

நாம் பெருவிழாக் கொண்டாடும் ஒப்புயர்வற்ற நமது கிறிஸ்து அரசர் தனது ஆடுகளுக்காகத் துயருறும், துன்பங்களைத் தாங்கிக்கொள்ளும், தனது இன்னுயிரையே தியாகம் செய்யும் பேரரசர் (யோவா 10:7, 14-16) என்பதை உணர்ந்துகொள்வோம்.

அருட்பணி
செல்வராஜ் சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT