உதைபந்தாட்டம்: 'ஜனாதிபதி சவால் கிண்ணம்' ஏறாவூர் இளந்தாரகை அணி சம்பியன் | தினகரன்

உதைபந்தாட்டம்: 'ஜனாதிபதி சவால் கிண்ணம்' ஏறாவூர் இளந்தாரகை அணி சம்பியன்

வெல்லாவெளி தினகரன் நிருபர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் முன்னணியின் அனுசரணையிலும்,மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரின் ஏற்பாட்டிலும், மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சங்கத்தின் அனுமதியுடனும் நடைபெற்ற ஜனாதிபதி சவால் கிண்ணத்தை ஏறாவூர் இளந்தாரகை அணி தன்வசப்படுத்திக் கொண்டது.

ஜனாதிபதி சவால் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த வெள்ளிக்கிழமை(31)முதல் தொடர்ச்சியாக மூன்றுநாட்கள் மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இதன்போது மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக்கழகங்கள் சார்பாக 21 அணிகள் கலந்துகொண்டு விளையாடியன. திங்கட்கிழமை(3) இறுதிப்போட்டி மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதிப்போட்டிக்கு ஏறாவூர் இளந்தாரகை அணியும், சீலாமுனை இளந்தாரகை அணியும் மோதிக்கொண்டன.

இச்சுற்றுப்போட்டியில் 4 கோல்களைப்போட்டு ஏறாவூர் இளந்தாரகை ஜனாதிபதி சவால் கிண்ணத்தை வசமாக்கிக் கொண்டது.

ஒரு கோல் போட்டு சீலாமுனை இளந்தாரகை இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தை மட்டக்களப்பு இக்னியேஸ் விளையாட்டுக் கழகமும், நான்காம் இடத்தை முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டுக்கழகமும் பெற்றுக் கொண்டன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் வீ.எஸ்.சுஜாந் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக இலங்கை மக்கள் தேசிய காட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரீ.விஸ்ணுகாந்தன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி பாலர் பாடசாலை பணியகத்தின் பணிப்பாளரும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்தின் தலைவருமான எஸ்.சசிதரன், மட்டக்களப்பு மாவட்ட காற்பந்தாட்ட சங்கத்தின் பொருளாளர் எம். பீ.குகாதரன், செயலாளர் ரீ.காந்தன், காற்பந்தாட்ட முகாமையாளர் ஏ.குலேந்திரன்,சுற்றுப்போட்டி குழுத்தலைவர் பீ.மேர்வின் மற்றும் ரகுதாஸ் சண்முகநாதன், விளையாட்டு வீரர்கள் கலந்துகொண்டார்கள்.

முதலாவது இடத்தைப்பெற்ற ஏறாவூர் இளந்தாரகை விளையாட்டுக் கழகத்திற்கு ரூ.50,000 பெறுமதியான பணப்பரிசும், வெற்றிக்கிண்ணங்களும், இரண்டாம் இடத்தைப்பெற்ற சீலாமுனை இளந்தாரகை விளையாட்டு கழகத்திற்கு ரூ.40,000 பணப்பரிசும்,வெற்றிக்கேடயங்களும், மூன்றாம் இடத்தைப்பெற்ற மட்டக்களப்பு இக்னியேஸ் விளையாட்டு கழகத்திற்கு ரூ.20,000 பணப்பரிசும் வெற்றிக்கேடயங்களும், நான்காம் இடத்தைப்பெற்ற முனைக்காடு இராமகிருஷ்ணா விளையாட்டு கழகத்திற்கு ரூ.10,000 பணப்பரிசும் வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைக்கப்பட்டன. இதன்போது சிறந்த கோல் காப்பாளர் விருது கெனி கஸ்ரல் அஸ்ராடோவும், வளந்து வரும் இளம்வீரருக்கான விருது வை.துசாந்தனும்,சிறந்த வீரருக்கான விருது எம்.எம்.எம்.முஸ்ராக்கும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.


Add new comment

Or log in with...