மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள்! | தினகரன்


மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகள்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவிலான கூட்டு எதிரணி 'மக்கள் பலம் கொழும்புக்கு' என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை இன்று நடத்தத் திட்டமிட்டுள்ளது. இப்பேரணிக்காக நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஆதரவாளர்களை கொண்டு வருவதற்கான பிரசாரமும் கூட்டு எதிரணியினால் கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டது. ஆனாலும் நேற்று நண்பகல் வரையும் இப்பேரணியும் அது தொடர்பான கூட்டமும் எங்கு இடம்பெறும் என்று கூட்டு எதிரணி அறிவிக்கவில்லை.

கூட்டு எதிரணி மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள இவ்வார்ப்பாட்டத்தினால் அப்பாவி மக்கள் அசௌகரியங்களுக்கும், பாதிப்புகளுக்கும் முகம்கொடுப்பதைத் தவிர்க்க முடியாது.

ஏனெனில் இந்நாட்டில் 2015ம் ஆண்டில் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ள சுதந்திர ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் உள்ளிட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் அனைத்தும் நாட்டுக்கு நஷ்டத்தை தேடிக்கொடுத்து வருவதோடு மக்களையும் அசௌகரியங்களுக்கும் துன்பங்களுக்கும் உள்ளாக்கின்றன. இதனை சகலரும் அறிவர்.

அண்மையில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மேற்கொண்ட வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையினால் மாத்திரம் நாட்டிற்கு பலகோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக ரயில்வே திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது. இதேபோன்று ஏற்கனவே முன்னெடுக்கப்பட்ட பல தொழிற்சங்க நடவடிக்கைகளும் வேலைநிறுத்தங்களும் நாட்டிற்கு நஷ்டத்தையே தேடிக் கொடுத்திருக்கின்றன. அந்த வகையில் கூட்டு எதிரணி இன்று நடத்தும் ஆர்ப்பாட்டப் பேரணியும் நாட்டிற்கு நஷ்டத்தைத் தேடிக் கொடுக்கும்.

இந்நாட்டில் வாரத்தில் 'புதன்கிழமை' என்பது மிக முக்கியமான நாளாகும். இத்தினத்தைத்தான் பெரும்பாலான அமைச்சுக்களும், அரசாங்க நிறுவனங்களும் பொதுமக்கள் தினமாக அறிவித்து மக்களுக்கு சேவை வழங்குகின்றன. அதனால் நாடெங்குமிருந்தும் மக்கள் இத்தினத்தில் கொழும்புக்கு வருகை தருவது வழக்கம். அதற்கேற்ப அவர்கள் தம் தேவைகளையும், சேவைகளையும் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் இத்தினத்தில் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறான ஒரு முக்கிய தினத்தில் இவ்வார்ப்பாட்டப் பேரணியைக் கூட்டு எதிரணியினர் நடத்துவதானது அப்பாவி மக்களை பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் நோக்கமேயன்றி வேறில்லை. இந்நடவடிக்கையின் விளைவாக அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனங்களின் இயல்பான பணிகளும் சேவைகளும் பாதிக்கப்படவே செய்யும். அதற்கேற்பவே கூட்டு எதிரணியினரும் பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.

ஏற்கனவே தொழிற்சங்கங்களை முன்னிலைப்படுத்தி ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களை முன்னெடுத்த கூட்டு எதிரணியினர் எதிர்பார்த்த பிரதிபலன்கள் கிடைக்கப்பெறாததால் இன்று அவர்களே ஆர்ப்பாட்டம் நடாத்த முன்வந்திருக்கின்றனர்.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது முதல் நாட்டின் ஜனநாயக சுதந்திரத்தை மீள உறுதிப்படுத்தி வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்ற அதேவேளையில் நாட்டை நிலைபேறான அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான வேலைத் திட்டங்களையும் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றது. இவற்றின் விளைவாக உள்நாட்டில் மாத்திரமால்லமல் சர்வதேசத்திலும் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவும் அபிமானமும் கிடைக்கப்பெற்று வருகின்றன.

இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாததன் வெளிப்பாடாகவே கூட்டு எதிரணியினர் இந்த ஊர்வலத்தை நடத்தை முன்வந்திருக்கின்றனர். இதன் ஊடாக அரசாங்க நிறுவனங்களின் சேவைகளை பாதிப்படையச் செய்து மக்களை அசௌகரியங்களுக்குள்ளாக்குவதன் மூலம் நல்லாட்சி மீது மக்கள் கொண்டிருக்கும் நல்ல அபிப்பிராயத்தை சீர்குலைக்க முடியும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் ஜனநாயக உரிமைகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான நடவடிக்கைகளின் பின்புலம் அவற்றின் ஊடாக அடைந்து கொள்ள எதிர்பார்க்கப்படும் பிரதிபலன்கள் தொடர்பில் மக்கள் அறியாதவர்கள் அல்லர். அதனால் தொழிற்சங்க நடவடிக்கைகளாலும் கூட்டு எதிரணியினர் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களாலும் அரசாங்கத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஏனெனில் இந்த ஆர்ப்பாட்டங்களை ஒழுங்கு செய்து முன்னெடுப்பவர்களின் நோக்கம், எதிர்பார்ப்பு என்பன தொடர்பான தெளிவு மக்களிடம் உள்ளது.

ஆனால் ஜனநாயக நாடொன்றில் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை மதித்து நடக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனதும் பொறுப்பாகும். அந்த அடிப்படையில் நல்லாட்சி அரசாங்கத்திற்கு 2020 வரை நாட்டு மக்கள் தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர். அந்த ஆணையை ஆர்ப்பாட்டங்களையும், வேலைநிறுத்தங்களையும் கொண்டோ அல்லது பலாத்காரத்தைப் பயன்படுத்தியோ பறித்தெடுக்க முடியாது. இது மிகவும் தெளிவான விடயம்.

இவற்றையெல்லாம் நன்கு அறிந்தவர்கள்தான் இவ்வாறான ஆர்ப்பாட்டங்களையும் வேலைநிறுத்தங்களையும் முன்னெடுக்கின்றனர். ஏனெனில் மக்களை அசௌரியங்களுக்கு உள்ளாக்குவதே இவர்களது ஒரே நோக்கம். மக்களைத் துன்பங்களுக்கும் அசௌகரியங்களுக்கும் உள்ளாக்கி தம் எதிர்பார்ப்பையும் தேவையையும் அடைந்து கொள்ள முயற்சிப்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்தி மக்கள் ஆணையை பறித்தெடுக்க முடியும் என்பது எவ்விதத்திலும் இடம்பெற முடியாத விடயமாகும்.

ஆகவே அற்ப அரசியல் நலன்களுக்கு அப்பால் மக்களையும், நாட்டு நலன்களையும் கருத்திற் கொண்டு செயற்பட வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும். சிலரது அற்ப அதிகார வேட்கைக்காக வெவ்வேறு பெயர்களில் மறைந்து முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் மிகவும் விழிப்பாக நடந்து கொள்ள வேண்டும்.


Add new comment

Or log in with...