கொழும்பு ஹமீத் அல் -ஹுசைனி வித்தியாலயம் சம்பியன் | தினகரன்


கொழும்பு ஹமீத் அல் -ஹுசைனி வித்தியாலயம் சம்பியன்

களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தை எதிர்த்து ஆடிய கொழும்பு ஹமீத் அல் -– -ஹுசைனி வித்தியாலயம் மூன்றுக்கு பூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடி நூற்றாண்டு வெற்றி கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டது.

இப் போட்டி களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு பாடசாலை அதிபர் ஏ..எல். மொஹமத் ஆலிப் தலைமையில் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பழைய மாணவர்கள், நலம் விரும்பிகள் மற்றும் மாணவ, மாணவிகளின் அனுசரணையுடன் ஓகஸ்ட் மாதம் 29 மற்றும் 30ஆம் திகதிகளில் களுத்துறை வெட்டுமங்கட பாகிஸ்தான் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்ற இப்போட்டியில் எட்டு அணிகள் பங்கேற்ற போதிலும் இலங்கையில் பிரபல பாடசாலை உதைபந்தாட்ட அணிகளான களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் மற்றும் கொழுப்பு ஹமீத் அல் – -ஹுசைனி வித்தியாலய அணிகள் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.

ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தின் ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் காணப்பட்டதுடன் இரு அணிகளுக்கும் பெனால்டி முறையில் வெற்றி தோல்விகளை தீர்மானிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது இதன் அடிப்படையிலேயே மூன்றுக்கு பூச்சியம் என்ற கோல் வித்தியாசத்தில் கொழும்பு ஹமீத் அல்- ஹுசைனி வித்தியாலயம் வெற்றி பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஹமீத் அல்- ஹுசைனி வித்தியாலய அணியின் வெற்றிக்காக மொஹமத், ஆசிக் மற்றும் அஜித் பிரசாந்த் ஆகியோர் கோல்களை பெற்றுக் கொடுத்தனர் மொஹமத் ஆசிப் அணிக்கு தலைமை தாங்கினார். களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் அணிக்கு உஸ்மான் தலைமை தாங்கினார்

மேலும் 1992 ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஆர். பிரேமதாச அழைப்பு பாடசாலைகளுக்கான இறுதி போட்டியில் இவ் இரு அணிகளும் பங்கு பற்றி வெற்றி கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்ட களுத்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இப் போட்டிகளின் ஆரம்ப வைபவத்தில் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் அனுர டீ சில்வா மற்றும் செயலாளர் ஜஸ்வர் உமர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டதுடன் இறுதி நிகழ்வின் போது களுத்துறை நகர சபை தவிசாளர் மொஹமத் ஆமீர் நசீர் மற்றும் களுத்துறை கல்வி வலய பணிப்பாளர் திருமதி ஓ.எம்.வீ.பி.முதலிகே கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசில்கள் மற்றும் வெற்றிக் கிண்ணத்தையும் வழங்கினார்.

களுத்துறை சுழற்சி நிருபர்


Add new comment

Or log in with...