கிண்ணியா பிரதேச செயலக அணி சம்பியனாக தெரிவு | தினகரன்


கிண்ணியா பிரதேச செயலக அணி சம்பியனாக தெரிவு

10 வது தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் கிண்ணத்திற்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் மூதூர் பிரதேச செயலக அணியை வெற்றி கொண்ட கிண்ணியா பிரதேச செயலக அணி 2108ம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

கடந்த (01)நடைபெற்ற இப்போட்டியில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச செயலக அணிகள் மற்றும் மாவட்ட செயலக அணி உட்பட 12 அணிகள் பலப்பரீட்சை நடாத்தின.

10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட போட்டியாக நடைபெற்ற இப்போட்டிகள் திருகோணமலை நகரின் 04 பிரதான மைதானங்களில் நடைபெற்றன. இறுதிப்போட்டி திருகோணமலை ஏகாம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற கிண்ணியா பிரதேச செயலக அணித்தலைவர் முதலில் தமது அணியை களத்தெடுப்பில் ஈடுபடுத்த மூதூர் பிரதேச செயலக அணி முதலில் துடுப்படுத்தாடியது.

இதற்கிணங்க நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்து 78 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய கிண்ணியா பிரதேச செயலக அணி 8 ஓவர் நிறைவில் 06 விக்கட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

தொடர் நாயகன் மற்றும் சிறந்த பந்து வீச்சாளர் ஆகிய விருதுகளை திருகோணமலை மாவட்ட செயலக அணியின் சக்தி குமரனும் சிறந்த துடுப்பாட்ட வீரராக மூதூர் பிரதேச செயலக அணியின் மொஹமட் சஜானும் ஆட்ட நாயகனாக கிண்ணியா பிரதேச செயலக அணியின் எம்.ஏ.எம்.அம்ஹாரும் தெரிவு செய்யப்பட்டனர்.

வெற்றி பெற்ற அணியினருக்கான வெற்றிக் கிண்ணங்களை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார வழங்கினார்.இந்நிகழ்வுகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா, முன்னாள் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.அருள்ராசா,மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன்,மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன்,பிரதேச செயலாளர்கள்,பதவி நிலை உத்தியோகத்தர்கள்,ஏனைய அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இப்போட்டி ஏற்பாடுகளை மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்ததுடன் 2019ம் ஆண்டு போட்டியை நடாத்துவதற்கான வாய்ப்பை மூதூர் பிரதேச செயலகம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

கிண்ணியா மத்திய நிருபர்


Add new comment

Or log in with...