உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் கிண்ணத்தை வென்றது கொழும்பு | தினகரன்

உபுல் தரங்கவின் அதிரடி சதத்தால் கிண்ணத்தை வென்றது கொழும்பு

இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நடைபெற்ற எஸ்எல்ரி-20 லீக்கின் இறுதிப் போட்டியில் உபுல் தரங்கவின் அதிரடி சதத்தின் உதவியுடன் கொழும்பு அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.

தம்புள்ளை மற்றும் கொழும்பு அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. தம்புள்ளை அணி சார்பில் லீக் போட்டிகளில் விளையாடாமலிருந்த திசர பெரேரா அணிக்கு திரும்பியிருந்ததுடன், கொழும்பு அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய தம்புள்ளை அணியின் எதிர்பார்க்கப்பட்ட ஆரம்ப துடுப்பாட்ட வீரர் தனுஷ்க குணதிலக 2 ஓட்டங்களுடன் ஏமாற்றினார். அடுத்துவந்த டில்வருவன் பெரேரா, அஷான் பிரியன்ஜன் மற்றும் திசர பெரேரா ஆகியோர் ஒற்றை இலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, சமரவிக்ரம 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

எனினும் தம்புள்ளை சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி அதிரடி காட்டிய ரமித் ரம்புக்வெல்ல மற்றும் இளம் வீரர்களான ஹசித போயகொட, வனிது ஹசரங்க அணிக்கு ஆறுதல் அளித்தனர்.

ரமித் ரம்புக்வெல்ல 40 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மறுமுனையில் ஹசித போயகொட 40 ஓட்டங்களையும், வனிது ஹசரங்க 22 ஓட்டங்களையும் பெற்று, 20 ஓவர்களில் அணியின் ஓட்ட எண்ணிக்கையை 163 ஆக உயர்த்தினர். கொழும்பு அணி சார்பாக பந்துவீச்சில் அகில தனஞ்சய மற்றும் ஜீவன் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உபுல் தரங்க அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்கள் குவித்தார். அஷான் பிரியன்ஜன் வீசிய 8 ஆவது ஒவரில், தரங்கவின் பிடியெடுப்பை திசர பெரேரா தவறவிட, கொழும்பு அணியை தனியாளாக உபுல் தரங்க வெற்றிபெறச் செய்தார்.

இறுதிப் போட்டியில் சிக்ஸர்களை குவித்த இவர், இறுதிவரை ஆட்டமிழக்காமல் 9 சிக்ஸர்கள் மற்றும் 6 பௌண்டரிகள் அடங்கலாக 55 பந்துகளில் 104 ஓட்டங்களை குவித்தார். இந்த சதமானது இவரது இரண்டாவது ரி-20 சதமாக அமைந்ததுடன், இந்த தொடரின் இரண்டாவது சதமாகவும் பதிவானது.

தரங்கவுடன் உதவியாக துடுப்பெடுத்தாடிய ஷெஹான் ஜயசூரிய 22 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, கொழும்பு அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 167 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. தம்புள்ளை அணி சார்பாக பந்து வீச்சில் அமில அபோன்சோ, டில்ருவான் பெரேரா மற்றும் இசுறு உதான ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி இலங்கை கிரிக்கெட் ஏற்பாட்டில் நான்கு அணிகள் பங்கேற்ற எஸ்எல்ரி-20 லீக்கின் முதல் சம்பியன் கிண்ணத்தை கொழும்பு அணி சுவீகரித்துள்ளது.

ஆட்டநாயகன் – உபுல் தரங்க

தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் – கசுன் ராஜித (13 விக்கெட்டுகள்)

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரர் – உபுல் தரங்க (414 ஓட்டங்கள்)

தொடர் ஆட்டநாயகன் – தனுஷ்க குணதிலக (247 ஓட்டங்கள், 7 விக்கெட்டுகள்)


Add new comment

Or log in with...